சங்கரன்கோவிலில் குடி போதையில் மருமகனை வெட்டி படுகொலை செய்த தாய்மாமன் - போலீசார் விசாரணை

பதிவு செய்த நாள் : 14 அக்டோபர் 2021 15:22

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ராமசாமியாபுரம் 2ம் தெருவைச் சேர்ந்தவர்கள் அருணாச்சலம் - முத்துமாரி தம்பதியர் இவர்களுக்கு வைரமுத்து என்ற மகன் உள்ளார். வைரமுத்து அப்பகுதியில் கூழ்  விற்பனைக் கடை வைத்து நடத்தி வருகிறார்.

 இந்நிலையில் வைரமுத்துவின் தாய்மாமன் குட்டி (எ) அன்பழகன் உடன் தினமும் மது அருந்துவது வழக்கம். இந்நிலையில் நேற்று இரவு அன்பழகனும் வைரமுத்துவும் ஒன்றாக மது அருந்தி  உள்ளனர். அப்போது அன்பழகன் வைரமுத்துவின் தாயும், தனது சகோதரியுமான முத்துமாரியை ஆபாச வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த வைரமுத்து அருகில் இருந்த கத்தியால் அன்பழகனை தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த அன்பழகனும் வீட்டில் இருந்த அரிவாளால் வைரமுத்துவை தாக்கியுள்ளார். இதில் இரத்த வெள்ளத்தில் சரிந்த வைரமுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

 இதுகுறித்து  தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சங்கரன்கோவில் நகர் காவல்துறையினர் வைரமுத்துவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்  தலையில் பலத்த படுகாயமடைந்த அன்பழகனை சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இச்சம்பவம் குறித்து சங்கரன்கோவில் நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.