கண்ணகி நகரில் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட ரவுடிகள் மீது குண்டாஸ்: கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவு

பதிவு செய்த நாள் : 07 அக்டோபர் 2021 18:44

சென்னை

சென்னை கண்ணகி நகரில் குற்ற வழக்குகளில் ஈடுபட்டு வந்த 4 ரவுடிகளை குண்டர் சட்டத்தில் அடைத்து கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை நகரில் குற்ற வழக்குகளில் ஈடுபட்டு வரும் ஆசாமிகளை கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவின் பேரில் போலீசார் கண்காணித்து கைது நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். சென்னை அடையாறு காவல் மாவட்டத்தில் தென்சென்னை, கூடுதல் கமிஷனர் கண்ணன், தென்சென்னை இணைக்கமிஷனர் நரேந்திரன் நாயர், அடையாறு துணைக்கமிஷனர் (பொறுப்பு) மகேந்திரன் ஆகியோர் மேற்பார்வையில் துரைப்பாக்கம் உதவிக்கமிஷனர் ரவி தலைமையில் குற்றவாளிகளை கண்காணிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

கண்ணகி நகர் இன்ஸ்பெக்டர் ஆல்பின்ராஜ், எஸ்.ஐ. கார்த்திகேயன் மற்றும் தனிப்படையினர் தலைமைக்காவலர் ரத்தினகுமார், தினகர் பாபு, முதல்நிலைக் காவலர் கார்த்திகேயன் ஆகியோர் தீவிரமாக கண்காணித்தனர். கண்ணகி நகரில் சுனாமி குடியிருப்பு பகுதியில் வினோத்குமார் என்பவரை கொலை செய்ய முயன்ற சம்பவம் கடந்த ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி நடந்தது. அந்த வழக்கில் தொடர்புடைய ரவுடிகள் மோஜோ என்கிற புஷ்பராஜ், சுனாமி என்கிற சுரேஷ்ராஜ், பிரவீன் ஆண்டனி என்கிற பூனை, ஜோன்ஸ் மேத்யூ ஆகிய 4 பேரையும் போலீசார் சம்பவம் நடந்த 48 மணி நேரத்தில் கைது செய்தனர். விசாரணைக்குப் பின்னர் நால்வரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப் பட்டனர். இவர்களில் மோஜோ மீது காஞ்சிபுரத்தில் 3 கொலை மற்றும் 2 கொள்ளை வழக்குகள் உள்ளன. சுரேஷ்ராஜ் மீது மதுராந்தகம் காவல் நிலைய எல்லையில் 1- கொலை முயற்சி, வழிப்பறி வழக்கு மற்றும் சுரேஷ்ராஜ் மீது 1- கொலை வழக்கும், பிரவீன் ஆண்டனி மீது 1- கொலை வழக்கு மற்றும் 1- கொலை முயற்சி வழக்கு உள்ளன. தொடர்ந்து இந்த நால்வரும் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் அவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கண்ணகி இன்ஸ்பெக்டர் ஆல்பின்ராஜ், உதவிக்கமிஷனர் ரவி மேற்பார்வையில் கமிஷனர் சங்கர்ஜிவாலுக்கு பரிந்துரை செய்தார். அதனையடுத்து நால்வர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொண்டு கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவிட்டார்.