விருதுநகர் மாவட்டத்தில் கோடை காலம் போல கொளுத்தும் வெயில்; வெறிச்சோடிய சாலைகள்

பதிவு செய்த நாள் : 14 செப்டம்பர் 2021 20:10

விருதுநகர் மாவட்டத்தில் கொளுத்தும் வெயில் காரணமாக, பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் எப்போதும் வெயிலுக்கு குறைவிருக்காது. மாவட்டத்தில் திருவில்லிபுத்தூர், ராஜபாளையம் பகுதிகளில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி அமைந்திருப்பதால், அந்தப்பகுதிகளில் மட்டும் வெயிலின் தாக்கம் சற்று குறைவாக இருக்கும். ஆனால் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக, விருதுநகர் மாவட்டம் முழுவதுமே கோடை காலம் போல, வெயிலின் தாக்கம் மிகமிக அதிகமாக இருந்து வருகிறது.

 வழக்கமாக ஏப்ரல், மே மாதத்தில் தான் இது போல கடுமையான வெயில் இருக்கும். வழக்கத்திற்கு மாறாக செப்டம்பர் மாதத்தில் வெயிலின் கடுமை அதிகமாக உள்ளது. ஜுன் மாதத்தில் இருந்து தென் மேற்கு பருவ மழை ஆரம்பமாகும். அந்த சமயங்களில், அவ்வப்போது விருதுநகர் மாவட்டத்தில் பரவலாக நல்ல மழை பெய்யும். தொடர் சாரல் மழையும் இருக்கும்.

 இந்த ஆண்டு தென் மேற்கு பருவமழை துவங்கிய பின்பு ஓரிரு நாட்கள் மட்டுமே பலத்த மழை பெய்தது. சில நாட்கள் மேக மூட்டத்துடன் இதமான நிலை இருந்துவந்தது. தென் மேற்கு பருவமழை விருதுநகர் மாவட்டத்தில் மிகவும் குறைவான அளவே பெய்துள்ளது. கடந்த 10 நாட்களாக வெயிலின் தாக்கமும் ஒரு நாளை விட ஒரு நாள் கூடிக்கொண்டே செல்கிறது. வெய்யிலின் தாக்கத்தால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த ஒரு வாரமாக வெய்யிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருவதால், பகல் 11 மணியிலிருந்து மாலை 6 மணி வரை, சாலைகளில் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் கடைகள், வர்த்தக நிறுவனங்களில் வியாபாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வெய்யிலின் தாக்கம் என்று தணியும், மழை எப்போழுது பொழியும் என்ற ஏக்கத்தில், விருதுநகர் மாவட்ட மக்கள் தவித்து வருகின்றனர்.