மதுரை விமான நிலையத்திற்கு மீனாட்சி என்று பெயர் சூட்ட கோரிய வழக்கு தள்ளுபடி

பதிவு செய்த நாள் : 14 செப்டம்பர் 2021 20:06

மதுரை விமான நிலையத்திற்கு  மீனாட்சி என்று பெயர் சூட்ட கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை விமான நிலையத்திற்கு எந்த ஒரு தலைவரின் பெயரை வைக்கும் திட்டம் இதுவரை இல்லை என மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தகவல்.

மதுரையை சேர்ந்த செல்வகுமார்,  உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு. அதில், "மதுரை விமான நிலையத்திற்கு  மதுரை மீனாட்சி என பெயர் சூட்ட உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இது குறித்து மத்திய அரசின் விமானப் போக்குவரத்து துறைக்கு   மனு அளித்தோம். ஆனால், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த விமான நிலையத்திற்கு நிலம் வழங்கியவர்கள் ஒரு  சமூகத்தைச் சேர்ந்தவர்கள். மதுரை விமான நிலையத்திற்கு வேறு ஜாதி தலைவர்கள்  பெயர்கள் சூட்ட கூடாது என இடைக்கால தடை விதிக்க வேண்டும். மேலும் மதுரை விமான நிலையத்திற்கு தேவேந்திரன் அல்லது மதுரை மீனாட்சி என்று  பெயர் சூட்ட உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு இன்று நீதிபதிகள் துரைசுவாமி, முரளிசங்கர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், மதுரை விமான நிலையத்திற்கு ஒரு ஜாதிய தலைவரின் ( பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்) பெயரை வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் இதன் மூலம் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டது.மத்திய அரசு தரப்பில்,  மதுரை விமான நிலையத்திற்கு பெயர் வைப்பது குறித்து தமிழ்நாடு அரசு எந்த ஒரு பரிந்துரையும் அனுப்பவில்லை மேலும் எந்தத் தலைவரின் பெயரை வைக்க வேண்டும் என்ற திட்டமும் இதுவரை இல்லைஎன தெரிவிக்கப்பட்டது. ஒரு விமான நிலையத்திற்கு பெயர் மாற்றம் மேற்கொள்ள வேண்டும் என்றால் தமிழக அர சு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினால் தான் பெயர் மாற்றம் மேற்கொள்ள முடியும் மத்திய அரசு வழக்கறிஞர் உயர்நீதிமன்றத்தில்  தெரிவித்தார்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் இதுபோன்ற வழக்குகளை ஊக்கப் படுத்த முடியாது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.