நெல்லை மாவட்டத்தில் வனப்பகுதியில் 25 கி.மீ. நடந்து வந்து வாக்களித்த காணி பழங்குடியினர் !

பதிவு செய்த நாள் : 06 ஏப்ரல் 2021 21:59

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சட்டப்பேரவைத் தொகுதியில் பாபநாசம் வனப்பகுதியில் உள்ள இஞ்சிக்குழி கிராமத்தில் வசிக்கும் காணியின மக்கள் 25 கி.மீ. தூரம் வனப்பகுதியில் நடந்து வந்து வாக்கு செலுத்தினர்.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட விக்கிரமசிங்கபுரம் நகராட்சியில் பாபநாசம் அணை பகுதியில் உள்ள ஆரம்பப்பள்ளியில் வாக்குசாவடி அமைக்கப்பட்டுள்ளது. பாபநாசம் அணை ஆரம்பப் பள்ளி வாக்குசாவடியில் 435 வாக்காளர்கள் உள்ளனர். 

இந்த வாக்குசாவடியில் சேர்வலாறு பகுதியில் வசிக்கும் மின்வாரிய ஊழியர்கள், காணி இனமக்கள், அகஸ்தியர் காணிக்குடியிருப்பு, சின்ன மயிலாறு, பெரிய மயிலாறு, இஞ்சிக்குழி ஆகிய பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினரான காணி இனமக்கள் வாக்கு செலுத்துவர். இவர்களில் இஞ்சிக்குழி கிராமத்தில் வசிக்கும் 8 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 20 வாக்காளர்கள் வாக்கு செலுத்துவதற்காக சுமார் 25 கி.மீ. தூரம் வனப்பகுதியில் நடந்து வந்து வாக்கு செலுத்தினர்  .