ஆதிகேசவ பெருமாள் கோயிலில் விரைவாக கும்பாபிஷேகம் நடத்த கோரிய வழக்கு - அறநிலையத்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

பதிவு செய்த நாள் : 25 மார்ச் 2021 17:48

மதுரை,

ஆதிகேசவ பெருமாள் கோயிலில் திருப்பணி முடிந்து விரைவாக கும்பாபிஷேகம் நடத்த உத்தரவிட கோரிய வழக்கில் அறநிலையத்துறை இணை ஆணையர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 

சென்னையை சேர்ந்த ஜெகநாத் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு,

 அதில், "கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆதிகேசவ பெருமாள் கோவில் 3500 ஆண்டுகள் பழமையானது. மன்னர் பரம்பரை நிர்வாகத்தின் கீழ் இருந்த கோவிலானது, சுதந்திரத்திற்குப் பிறகு திருவாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த கோயிலில் பல ஆண்டுகளாக குடமுழுக்கு நடத்தப்படாமல் உள்ளது. மேலும் கோயிலுக்கு பாத்தியப்பட்ட பல சுற்றுக்கள் தனி நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. கோயிலில் பல வகையான அரியவகை சிற்பங்கள் மற்றும் பழங்காலத்து பொருட்கள் உள்ளது. இவை அனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டியவை. 

கோவில் சில பகுதிகளில் பராமரிப்பின்றி  சேதமடைந்த நிலையில் உள்ளன, ஆனால் கோயில் நிர்வாகம் அதை சரி செய்ய எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது. மேலும் கோவிலுக்கு பாத்தியப்பட்ட பல சொத்துக்கள் மற்றும் கோவில் அருகே உள்ள நிலங்களை சில தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.எனவே ஆதிகேசவ பெருமாள் கோவிலுக்கு பாத்தியப்பட்ட சொத்துக்களை பாதுகாக்க வேண்டும், கோயிலில் திருப்பணி நடத்தி, ஆகம விதிப்படி கும்பாபிஷேகம் நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என தனது மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது 75 சதவீதம் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. கொரோணா காலத்தில் பணியாளர்கள் வேலைக்கு வராததால் பணிகள் தாமதம் அடைந்துள்ளது, 4 மாதத்தில் பணிகள் நிறைவுபெற்று கும்பாபிஷேகம் நடைபெறும் என  கோயில் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.