பாஜக – அதிமுகவுக்கு ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்துடன் ரகசிய உறவு உள்ளது – மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு

பதிவு செய்த நாள் : 22 மார்ச் 2021 19:33

தூத்துக்குடி,

பாஜக – அதிமுக கட்சிகளுக்கும் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்துக்கும் இடையே ரகசிய கூட்டுறவு இருப்பதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார். 

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று தூத்துக்குடியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அந்த மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக அவர் வாக்கு சேகரித்தார். அப்போது, கடந்த 2018ம் ஆண்டு வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டம் மற்றும் அதில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் குறித்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

ஆபத்தை விளைவிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து மக்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தினர். 100வது நாளில் கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்று, ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி அதிகாரிகளிடம் மனு கொடுக்க போனாங்க. மனுவ வாங்க வேண்டிய கலெக்டர், எங்க போனார்னே தெரியலை. ஸ்டெர்லைட் ஆலை நிர்வாத்துடன் ரகசிய உறவு வைத்திருக்கும் மத்திய அதிமுக அரசும், மத்திய பாஜக அரசும் குருவி சுடுவதை போல, போராட்டக்காரர்களை சுட்டுக் கொன்றன.

சுட்டுக் கொல்லப்பட்ட 13 பேரின் குடும்பத்தினருக்கு அவர்கள் படிப்புக்கு ஏற்ற அரசு வேலை இது வரை வழங்கப்படவில்லை. மத்திய அரசின் தலையீடு காரணமாக, இந்த கொடூர சம்பவம் பற்றிய சிபிஐ விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை. மாநில அரசு அமைத்த அருணா ஜெகதீசன் கமிசன், இரண்டரை ஆண்டு ஆன பின்னரும் தனது அறிக்கையை தாக்கல் செய்யவில்லை. ஸ்டெர்லைட் ஆலையுடன் பாஜக – அதிமுக கட்சிகள் ரகசிய உறவு வைத்திருப்பதே இதற்கு காரணம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும், சாத்தான் குளம் தந்தை – மகன் போலீஸ் நிலையத்தில் கொல்லப்பட்ட கொடூர சம்பவம் பற்றி மு.க. ஸ்டாலின் பேசினார். அப்போது, அவர்கள் கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து கீழே படுத்து உருண்டதால் உருவான காயமே அவர்கள் மரணத்துக்கு காரணம் என்று முதல்வர் பழனிசாமி கூறியதைக் குறிப்பிட்டார். அமைச்சர் கடம்பூர் ராஜு, அவர்கள் இருவரும் மருத்துவமனையில் தான் இறந்தனர், அதனால் அது காவல் மரணம் அல்ல என்று பேசியதை மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டு பேசினார். இறந்தவர்களுக்கு நீதி அளிக்க வேண்டும் என தூத்துக்குடி மக்களை ஸ்டாலின் கேட்டுக் கொண்டார். இதுவரை இல்லாத வகையில் அதிமுக கூட்டணியை படுதோல்வி அடையச் செய்ய வேண்டும் என்று அவர் மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

திமுக ஆட்சிக்கு வந்தால் ஒட்டப்பிடாரம், கயத்தாறு, கோவில்பட்டி, திருச்செந்தூர், காயல்பட்டினம் ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்படும், நசாரேத்தில் நர்சிங் கல்லூரி அமைக்கப்படும், கழுகுமலையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டப்படும், சிட்கோ மூலமாக தீப்பெட்டி தொழிற்சாலைக்கு தேவையான மூலப் பொருட்கள் எளிதாக கிடைக்க வழி செய்யப்படும், உப்பளத் தொழிலாளர்களுக்கு தனிவாரியம் அமைக்கப்படும் என்பன உள்ளிட்ட பல வாக்குறுதிகளை மு.க. ஸ்டாலின் அளித்தார்.