மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகையை ரூ 3 ஆயிரமாக உயர்த்தி வழங்க கோரி , ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட முயற்சி கைது

பதிவு செய்த நாள் : 23 பிப்ரவரி 2021 18:45

பாளையங்கோட்டை , பிப் 23

மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித் தொகையை 3 ஆயிரம் ரூபாயாக  உயர்த்தி வழங்கக் கோரி நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டனர்.

மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகையாக ரூபாய் 3000 வழங்க வேண்டும், கடும் ஊனமுற்றவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும், தனியார் துறையில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர் .இந்நிலையில் அவர்கள்அரசு  தரப்பில் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டு 15 நாட்கள் கால அவகாசம் கேட்கப்பட்டது . 

தற்போது அந்த கால அவகாசம் முடிந்த நிலையிலும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால்  மாற்றுத்திறனாளி அமைப்பை சேர்ந்தவர்கள் இரண்டாம் கட்ட போராட்டமாக மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  குடியேறும் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதன் தொடர்ச்சியாக நெல்லையில் மாற்றுத்திறனாளிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட முற்பட்டனர் அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் தடுத்து நிறுத்தியதால் ஆட்சியர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் . போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கு மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

   முன்னதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில் தங்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் , தனியார் துறையில் 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நெடுங் காலமாக போராடி வருவதாகவும் இந்த கோரிக்கை நிறைவேறும் வரை தங்களது போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளனர்.