சென்னை நகரில் 80 சதவீதம் சாலை விபத்துக்கள் குறைந்துள்ளன: கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் பேட்டி

பதிவு செய்த நாள் : 17 பிப்ரவரி 2021 19:55

சென்னை, 

சென்னை நகரில் 80 சதவீதம் சாலை விபத்துக்கள் குறைந்துள்ளதாக போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.

32வது சாலை பாதுகாப்பு மாதம் இன்றுடன் நிறைவு பெறுவதையொட்டி சென்னை காவல்துறை சார்பாக புதுப்பேட்டையில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் அது தொடர்பான நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சென்னை நகர போலீஸ் கமிஷனர் மகேஷ் குமார் அகர்வால், போக்குவரத்து கூடுதல் கமிஷனர் கண்ணன், இணைக்கமிஷனர் லட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த புத்தகம், காலண்டர், பாடல் ஆகியவற்றை கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் வெளியிட்டார்.

அதனைத்தொடர்ந்து விழாவில் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் பேசியதாவது,

 ‘‘சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு என்ற பெயரில் கடந்த மாதம் 18ஆம் தேதி முதல் இந்த பிப்ரவரி 17ஆம் தேதி வரை சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை சென்னை முழுவதும் போக்குவரத்து போலீசார் ஏற்படுத்தி வருகின்றனர். சாலை விபத்துகளை குறைப்பதற்காக தமிழக அரசு சார்பாக பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகிறது. சாலை விபத்தில் ஒரு உயிர் போனால் 3 சதவிகித தேசிய உற்பத்தித்திறன் குறைகிறது.

    மேலும் சென்னையில் கடந்த 5 ஆண்டுகளில் 55 சதவிகித சாலை விபத்துகள் குறைந்துள்ளன. தமிழகத்தை கண்டு இந்தியாவில் உள்ள மற்ற மாநிலமும் சாலை பாதுகாப்பு குறித்து கற்க வேண்டும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். குறிப்பாக சென்னையில் சாலை விழிப்புணர்வை ஏற்படுத்தியதன் மூலம் 80 விபத்துகள் குறைந்துள்ளன. சென்னையில் பணியில் உள்ள 23 ஆயிரம் போலீசார் மட்டும் அனைத்து சாலைகளிலும் பாதுகாப்பில் நிற்பது கடினம். எனவே பொதுமக்களும் முன்வந்து சாலை விதிகளை மதித்தால் மட்டுமே சாலை விபத்துகள் நடப்பதை முற்றிலுமாக தடுக்க முடியும். சாலை விபத்துகள் நடைபெறாத நகரமாக சென்னையை மாற வேண்டும். அதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’’.