சென்னையில் சட்டவிரோதமாக வெட்டப்பட்ட 40 ஆண்டு பழமையான மரம் : மாநகராட்சி புகார்

பதிவு செய்த நாள் : 16 பிப்ரவரி 2021 21:00

சென்னை,

சென்னை கே.கே. நகரில் 40 ஆண்டு பழமையான மரம் திங்கள்கிழமை சட்டவிரோதமாக வெட்டப்பட்டது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி காவல்துறையில் புகார் அளித்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் சிலர் அந்த மரத்தை வெட்ட துவங்கியுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள் மாநகராட்சி மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். போலீசாரும் உடனடியாக அங்கு வந்து மரம் வெட்டுவதை தடுத்து நிறுத்தினர். ஆனால் நள்ளிரவு அந்த மரம் வெட்டப்பட்டது.

போலீசாருக்கு தகவல் அளித்தும் மரம் வெட்டப்பட்டதற்கு அப்பகுதி மக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த மரம் வெட்டுவதற்கு பின்னணியில் யாரோ செல்வாக்கு கொண்டவர்கள் உள்ளனர். இது குறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளோம் என மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

இந்த மரம் வெட்ட காரணமாக இருந்ததாக கூறி திமுக உறுப்பினர் தனசேகரன் என்பவர் மீது சமூக ஆர்வலர்கள் புகார் அளித்துள்ளனர். ஆனால் இந்த புகாருக்கு மறுப்பு தெரிவித்துள்ள தனசேகரன் மழை நீர் சேகரிப்பு கட்டப்படும் போது அந்த மரம் சேதமடைந்து தன் வீட்டு சுவற்றில் விழும் நிலையில் இருந்தது. அந்த மரத்தை வெட்டும்படி நான் கூறவில்லை. அதை சரி செய்யும்படி மட்டுமே கூறியதாக தனசேகரன் தெரிவித்துள்ளார்.