வழுக்கையை மறைத்து திருமணம் செய்து அதிக வரதட்சணை கேட்டு துன்புறுத்திய நபர் கைது

பதிவு செய்த நாள் : 13 ஜனவரி 2021 19:38

சென்னை,

சென்னையை சேர்ந்த 29 வயது ராஜசேகர் வழுக்கை என்பதை மறைத்து ஒரு பெண்ணை 5 வருடங்கள் முன் திருமணம் செய்துள்ளார். அவரது மனைவி உண்மையை கண்டுபிடித்த பின் அவரிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியுள்ளார்.

அவரது மனைவி வீட்டார் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் அந்த நபரும் அவரது பெற்றோரும் கைது செய்யப்பட்டனர்.

அந்தப் பெண்ணின் கூற்றுப்படி, திருமணத்திற்குப் பிறகு, ராஜசேகர் தனக்கு தலையில் தொட்டால் பிடிக்காது என கூறியுள்ளார். திருமணத்தின் போது ராஜசேகரின் பெற்றோர் ஜகதா மற்றும் ஜகன்னாதன் 58 பவுன் நகையும் ரூ. 2 லட்சமும் வரதட்சணையாக வாங்கியுள்ளனர்.

இந்நிலையில் தன் கணவர் வழுக்கை என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார். அதன்பின் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் ராஜசேகர் தன் மனைவியிடம் கூடுதலாக வரதட்சணை கேட்டு துன்புறுத்தியுள்ளார்.

அதைத் தொடர்ந்து பெண் வீட்டார் அளித்த புகாரின் அடிப்படையில் ராஜசேகர் மற்றும் அவரது பெற்றோர் மீது வரதட்சனை கொடுமைக்காக ஐபிசி 498-ஏ மற்றும் நம்பிக்கையை உடைத்த குற்றத்திற்காக ஐபிசி 406 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.