கோவில்பட்டி அருகே லாரி மீது லோடு ஆட்டோ மோதி இருவர் பலி: 7 பேர் படுகாயம்

பதிவு செய்த நாள் : 13 ஜனவரி 2021 16:10

கோவில்பட்டி அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது லோடு ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானதில் பொங்கல் பண்டிககைக்கு சொந்த ஊருக்கு சென்ற சிறுமி உட்பட 2 பேர் பலியாயினர், மேலும் 7 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். கோயம்புத்துாரில் லேத் பட்டறை நடத்தி வருபவர் கோபாலகிருஷ்ணன் (35). இவரது சொந்த ஊர் நெல்லை மாவட்டம் திடீயூர். இவரது மனைவி விஜயா (34). இவர்களுக்கு யாஷிகா (8) என்ற மகள், பிரனேஷ் (3) என்ற மகன் உள்ளனர்.

இந்நிலையில் கோபாலகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் உள்ளிட்ட 10 பேர் பொங்கல் பண்டிகை கொண்டாட கோவையில் இருந்து இரவு லோடு ஆட்டோவில் நெல்லைக்கு புறப்பட்டு வந்தனர். லோடு ஆட்டோவை ஆனந்தராஜ் மகன் பாஸ்கர் (37) என்பவர் ஓட்டி வந்தார். இந்நிலையில்  கோவில்பட்டி அருகே இடைசெவல் என்ற இடத்தில் லோடு ஆட்டோ வந்தபோது ரோட்டோரம் பழுதாகி நின்ற லாரி மீது வேகமாக மோதியது. இதில் லோடு ஆட்டோவில் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கி கூச்சலிட்டனர்.

இந்த விபத்தில் லோடு ஆட்டோ டிரைவர் பாஸ்கரின் மனைவி சுமத்ரா (31) மற்றும் கோபாலகிருஷ்ணனின் மகள் யாஷிகா(8) ஆகிய இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.. மேலும் கோபாலகிருஷ்ணன் (35), அவரது  மனைவி விஜயா (34), மகன் பிரனேஷ் (3) லோடு ஆட்டோ டிரைவர் பாஸ்கர், அவரது 4 வயது மகன் ராஜ்குமார், சந்திரசேகர் என்பவரது மகன் பார்த்திபன் (20), ராதாகிருஷ்ணன் மகள் பிரிதா (20) ஆகிய 7 பேர் படுகாயம் அடைந்தனர்.தகவல் அறிந்து கோவில்பட்டி போலீஸ் டி.எஸ்.பி., கலைக்கதிரவன், நாலாட்டின்புத்துார் இன்ஸ்பெக்டர் சுகாதேவி, எஸ்.ஐ.,

சிலுவை அந்தோணி மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை மற்றும் கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பலியான சிறுமி உள்ளிட்ட 2 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து நாலாட்டின்புதுார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொங்கல் பண்டிகை கொண்டாட சொந்த ஊருக்கு சென்றபோது விபத்தில் சிக்கி 2 பேர் பலியான சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.