திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி, அம்பாள் திருக்கல்யாண வைபம் இன்று முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி

பதிவு செய்த நாள் : 21 நவம்பர் 2020 19:22

திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடந்த கந்தசஷ்டி திருவிழாவில் திருக்கல்யாண நிகழ்ச்சியை முன்னிட்டு நேற்று சுவாமியும் அம்பாளும் தோள் மாலை மாற்றும் நிகழ்ச்சியை தொடர்ந்து திருக்கல்யாணம் நடந்தது.

  முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவதும், சூரபத்மனோடு போர் புரிந்து அவனை ஆட்கொண்ட இடமுமான திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 15ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று முன்தினம் மாலையில் கடற்கரையில்; நடந்தது.

  கந்தசஷ்டி 7ம் திருநாளான நேற்று அதிகாலை 3 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டது, 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது. தொடர்ந்து 7 மணி அளவில் தெய்வானை அம்பாள் தபசு காட்சிக்கு புறப்பட்டார். தபசு காட்சிக்கு வந்த அம்பாள் கோயில் உள் பிரகாரத்தில் உள்ள 108 மகாதேவர் சன்னதி வந்து சேர்க்கையானார்.

  தொடர்ந்து கோயிலில் காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் நடந்தது. மாலை 6 மணியளவில் அம்பாளுக்கு சுவாமி காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. 108 மகாதேவர் சன்னதி முன் சுவாமியும் அம்பாளும் தோள் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடந்தது.

 இந்நிகழ்ச்சியில் கேடய சப்பரத்தில் எழுந்தருளிய சுவாமியை தெய்வானை அம்பாள் மூன்று முறை வலம் வந்தார், தொடர்ந்து எதிர் சேவை தீபாராதனையும் தோள்மாலை மாற்றும் வைபவமும் நடந்தது.

  பின்னர் தனித்தனி கேடய சப்பரங்களில் கோயில் பிரகாரம் வலம் வந்து சேர்ந்தனர். இரவு சுவாமிக்கும், தெய்வானை அம்பாளுக்கு கோயில்  சித்தி விநாயகர் சன்னதி முன் வைத்து வைதீக முறையில் திருக்கல்யாண வைபவம் நடந்தது.

  நாடுமுழுவதும் கொரானா தடை உத்தரவு அமலில் உள்ளதால் இந்த ஆண்டு சூரசம்ஹார நிகழ்ச்சியிலும், திருக்கல்யாண நிகழ்ச்சியிலும் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

 விழாவில் தென் மண்டல ஐ.ஜி., முருகன் கலந்து கொண்டார் இன்று தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமத   இன்று (நவ.22ம் தேதி) வழக்கம் போல் காலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.  ஏஎஸ்பி ஹர்ஷ்சிங் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.