கோவில்பட்டியில் ரேஷன் அரிசி கடத்த முயன்ற 3 பேர் கைது 2.5 டன் அரிசி பறிமுதல்

பதிவு செய்த நாள் : 21 நவம்பர் 2020 19:21

கோவில்பட்டியில் இருந்து ரேஷன் அரிசி கடத்த முயன்ற 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து சுமார் 2.5 டன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

கோவில்பட்டியில் இருந்து சிலர் ரேஷன் அரிசி கடத்துவதாக போலீஸ் டி.எஸ்.பி., கலைக்கதிரவனுக்கு ரகசிய தகவல் கிடைத்ததக. இதையடுத்து,  அவரது தலைமையில் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யப்பன், எஸ்.ஐ., குருச்சந்திர வடிவேல் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது கோவில்பட்டி மந்தித்தோப்பு ரோட்டில் ரோந்து சென்றபோது, அங்குள்ள மயானம் அருகே தனியார் கிட்டங்கியில் இருந்து சிலர் லாரியில் மூடைகளை ஏற்றி கொண்டிருந்தனர். போலீசார் அங்கு சென்று சோதனையிட்ட போது, அவர்கள் ரேஷன் அரிசியை லாரியில் ஏற்றி, வெளியூருக்கு கடத்த முயன்றது தெரியவந்தது.

  இதையடுத்து 50 கிலோ எடை கொண்ட 48 மூடை ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், அங்கிருந்த 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், கோவில்பட்டி இனாம்மணியாச்சியை சேர்ந்த கருத்தப்பாண்டி மகன் பால்பாண்டியன்(33), மார்க்கெட் ரோடை சேர்ந்த குருநாதன் மகன் மகேந்திரன்(32), அண்ணா நகரை சேர்ந்த கருப்பன் மகன் ஜெயராம்(37) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து கைது செய்யப்பட்டவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மூடைகளையும் தூத்துக்குடி உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.