டீக்கடை வாசலில் இருசக்கரவாகனத்தை நிறுத்தி விட்டுச் சென்றபோது ஓட்டிச் சென்ற திருடன்

பதிவு செய்த நாள் : 21 நவம்பர் 2020 17:48

சென்னை திருவிக நகரில் இரு சக்கரவாகனத்தை நிறுத்தி விட்டு சென்ற போது அதனை மர்ம நபர் ஸ்டார்ட் செய்து ஓட்டிச் சென்றது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை, ஆவடி, கோவர்த்தனகிரி, பேச்சிப்பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 31). கட்டடங்களை ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு இடிக்கும் பணி செய்து வருகிறார். நேற்று முன்தினம் காலை 9:55 மணியளவில், சென்னை திருவிக நகர், குமரன் நகருக்கு வேலை விஷயமாக வந்தார். அப்போது அங்குள்ள பஸ் டெப்போ பின்புறம் உள்ள ராகேவேந்திரா டீ கடையில் தண்ணீர் பாட்டில் வாங்கச் சென்றார். அப்போது தனது ஹோண்டா ஆக்டிவா வாகனத்தை கடை முன்பு நிறுத்தி விட்டுச் சென்றார். அந்த சமயத்தில் பின்னால் கருப்பு கலர் பேன்ட் மற்றும் கட்டம் போட்ட சட்டை அணிந்து வந்த நபர் வேல்முருகனின் ஹோண்டா ஆக்டிவா வாகனத்தை ஸ்டார்ட் செய்து எடுக்க முயன்றார். அதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த வேல்முருகன் அந்த நபரைப் பிடிக்க ஓடினார். ஆனால் அதற்குள் அந்த நபர் வாகனத்தை எடுத்துக் கொண்டு தப்பியோடி விட்டார். அது தொடர்பாக திருவிக நகர் போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பைக் திருட்டு ஆசாமியை வலை வீசி தேடி வருகின்றனர்.