ராஜபாளையத்தில் மன வளர்ச்சி இல்லாத மகளை, கொலை செய்த தந்தை போலீசில் சரண்...... வறுமை காரணமாக விபரீத செயல்.....

பதிவு செய்த நாள் : 17 அக்டோபர் 2020 18:35

ராஜபாளையம் :

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சத்திரப்பட்டி சாலையில் உள்ள, மில் தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் பழனிகுமார். 

இவரது மனைவி ராமலட்சுமி.  இவர்களுக்கு 6 வயதில் மகாலட்சுமி என்ற பெண் குழந்தை உள்ளது. குழந்தை பிறந்ததில் இருந்தே மன வளர்ச்சி குன்றிய நிலையில் இருந்துள்ளது. கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் செல்வதால் வீட்டில் குழந்தையை கவனிக்க யாரும் இல்லை. 

மேலும் கடந்த சில மாதங்களாக வேலையும் குறைந்து வறுமை இவர்களை வாட்டியுள்ளது. மன வளர்ச்சி இல்லாத குழந்தையை பழனிகுமாரால் வளர்க்க முடியாத நிலையில், விபரீத முடிவை எடுத்துள்ளார். இன்று காலை மனைவியை வேலைக்கு அனுப்பிவிட்டு வீட்டில் இருந்த பழனிகுமார், மகளின் நிலையையும், வறுமை நிலையும் எண்ணி கலங்கிய நிலையில், பெற்ற மகளை மூச்சு திணறச் செய்து கொலை செய்தார். பின்னர் ராஜபாளையம் தெற்கு காவல்நிலையம் சென்று போலீசாரிடம் சரண் அடைந்தார். மாற்றுத்திறன் மகளை, வறுமை காரணமாக வளர்க்க முடியாத நிலையில் தந்தையே கொலை செய்த சம்பவம் அந்தப்பகுதி மக்களிடம் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சரணடைந்த பழனிகுமாரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.