குருப்பெயர்ச்சி பலன் - 2020 - 2021 சார்வாரி ஆண்டு
15-11-2020 – 13-11-2021
ஜோதிடர் – கணித்தவர்: ஜோதிடர் மு. திருஞானம், சீர்காழி.

குருப்பெயர்ச்சி பலன், 2020 - 2021 சார்வாரி ஆண்டு (15-11-2020 முதல் 13-11-2021 வரை) கணித்தவர்: ஜோதிடர் மு.திருஞானம், சீர்காழி. பொதுப்பார்வை வாசகர்களே, என்றும் பரிபூரணமாக திருவருளும், குருவருளும் சர்வ அருளாசியுடன் உங்களுக்கு சித்திக்கட்டும். சர்வ மங்களகாரகர்களான தனது திருஷ்டியால் அனைத்து ஜீவ ராசிகளையும் ரட்சித்து காக்கின்ற நவக்கிரக ராஜாவான குரு பகவான், இதுவரை தனது மூலத்திரிகோண ஆட்சி வீடான தனுசு ராசியில் ஓராண்டு காலம் பிரவேசித்துவிட்டு, இப்போது தனக்கு அடுத்த வீடான மகர ராசிக்குள் நீச நிலைமையோடு வந்து அமரப் போகிறார்.

மேஷம்

குருப்பெயர்ச்சி பலன்

2020 - 2021 சார்வாரி ஆண்டு   (15-11-2020 முதல் 13-11-2021 வரை)

கணித்தவர்: ஜோதிடர் மு.திருஞானம், சீர்காழி.


பொதுப்பார்வை

வாசகர்களே,

என்றும் பரிபூரணமாக திருவருளும், குருவருளும் சர்வ அருளாசியுடன் உங்களுக்கு சித்திக்கட்டும்.

சர்வ மங்களகாரகர்களான தனது திருஷ்டியால் அனைத்து ஜீவ ராசிகளையும் ரட்சித்து காக்கின்ற நவக்கிரக ராஜாவான குரு பகவான், இதுவரை தனது மூலத்திரிகோண ஆட்சி வீடான தனுசு ராசியில் ஓராண்டு காலம் பிரவேசித்துவிட்டு, இப்போது தனக்கு அடுத்த வீடான மகர ராசிக்குள் நீச நிலைமையோடு வந்து அமரப் போகிறார்.

 உலகத்தையே புரட்டி எடுத்த குரு! 

கடந்த 2019ம் ஆண்டு அக்டோபருக்கு பிறகு தனது ஆட்சிவீடான தனுசு ராசிக்குள் இவர் நுழைந்ததில் இருந்தே சனியுடனும், கேதுவுடனும் மாட்டிக் கொண்டு அவர் தரவேண்டிய கட்டாய சுபிட்சப் பலன்கள் எதையும் இந்த உலகத்துக்கே தரவில்லையென்பதுதான் உண்மை.

காரணம் காலப்புருஷ ராசிக்கு 9ம் வீடான தர்மபாக்கிய செல்வ, பூர்வ புண்ணிய வீடான அவரவர் செய்த பாவ வினைகளையும் சேர்த்து பதுக்கி வைத்துள்ள இடமான தனுசு ராசிக்குள் கர்ம காரகனும், ஞான காரகனுமான சனி மற்றும் கேது கிரகங்கள் நுழைந்து அமர்ந்து இருந்ததே. அத்துடன் ‘நோய்க்காரகன்’ என்ற பட்டமும் சனிக்கு உண்டு. அடுத்து மூச்சுத்திணறல், வாதம், கபம் போன்ற நோய்களுக்கு கர்த்தா கேது. இவர்கள் இருவரும் சேர்ந்து காலப்புருஷ லக்னத்துக்கு நோய் ஸ்தான இடத்தைக் குறிக்கும் கன்னி ராசியை பார்த்தது கோளாறு.

அதோடு மேஷ ராசிக்கு பாதக இடமான கும்ப ராசியை நோக்கியதும் குறை. அடுத்து முயற்சி, வீரம், தைரியம், பராக்கிரமம், துணிச்சல் ஸ்தானமான 3ம் இடமான மிதுன ராசியைப் பார்த்துக் கொண்டிருந்ததும் தவறு. அடுத்து முதல் கிரகமான சூரியனின் வீடான சிம்ம ராசிக்கு 5ல் குரு, சனி, கேது கூட்டணி ஏற்பட்டதில், இந்த உலக மக்களையே ஒரு புரட்டு புரட்டியெடுத்தது என்று சொல்லி விடலாம்.

இனிமேல் சுபிட்சப் பார்வை பார்க்கிறார் குரு!

இனி காலப்புருஷ லக்னத்துக்கு 10ம் வீடான மகர ராசிக்குள் குருபகவான் வந்து அமரப் போகிறார். பார்க்கப் போகிற இடங்கள் கடகம், கன்னி, ரிஷபம் இதனால் ராசி குண்டலியின் தன ஸ்தானம், சுகஸ்தானம், நோய் ஸ்தானம்.

எனவே இதுவரை இந்த இடங்கள் தரக்கூடிய சுபிட்சங்களுக்குத்தான் சோதனை ஏற்பட்டன. ஆகவே இந்த இடங்களுக்கு இவரது சுபிட்சப் பார்வைகள் விழப்போவதால் நாட்டு மக்களின் ஒட்டுமொத்த பிரச்னைகளும் ஒரு வழியாக முடிவுக்கு வர ஆரம்பிக்கும்.

கரோனாவை விரட்டுகிறார் குரு! 

நாட்டையே, இந்த உலகத்தையே மிரட்டி உலுக்கி வரும் கண்ணுக்குப் புலப்படாத இந்த கொடிய கரோனாவும் ஒட்டு மொத்தமாக இவரது அருளால் விரட்டப்படும் என்பது நிச்சயமான நிதர்சனம்.

தங்கம் மவுசு உச்சத்தில்! 

இனிவரும் நாட்களில் தங்கத்தின் மதிப்பு கூடி அதனுடைய விலை தாறுமாறாக உயரும். அல்லது ஒரு நிர்ணய விலைக்கு வந்து நின்றுவிடும். ஆனால் தங்கத்தின் உற்பத்தியும், அதனை கண்டெடுக்கும் முயற்சிகளும் சொற்பமாகத்தான் இருக்கும்.

தேனே! முத்தே!   

அத்துடன் வனத்தில் விளையக்கூடிய அபூர்வ மூலிகை, மருந்துப்பொருட்களின் விலை மலையளவு உயரலாம். தேன் அரிதாகத்தான் கிடைக்கும். சரளமாக அபூர்வ முத்துக்கள் நிறைய விளையும். அது அதிகப்படியாக சந்தைக்கு வந்து மதிப்பு கூடும். மக்கள் முத்தின் மீது இந்த ஆண்டு முழுவதும் ஆர்வம் காட்டி சரளமாக அணிய தொடங்க இருக்கிறார்கள்.

 பீதியை துடைக்கிறார்! 

அடுத்து இந்த உலக மக்கள் அனைவரும் காரணமற்ற அநாவசிய பீதி, பயத்தில் இருந்தும் வெளிவரப் போகிறார்கள்.  பொருளாதார ஸ்தம்பிப்புகள் அனைத்தும் விடுபட போகின்றன.

 குரு பார்க்க கோடி நன்மை யாருக்கு? 

இப்போது தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ச்சியாகி பலன்களை தரப்போகும் குருபகவானால் 90 சதவீத பலன்களை முதலிடமாக பிடிக்கப் போகிற ராசிகள் கன்னி, ரிஷபம், மீனம் ராசிகளே.

அடுத்து 75 சதவீத நற்பலன்களை குவிக்கப் போகிற ராசிகள் கடகம் மற்றும் தனுசு ராசிகள்.

மூன்றாவதாக 60 சதவீத நிவர்த்தி யோகங்களை திருப்தியாக தொடப்போகும் ராசிகள் துலாம் மற்றும் மகரம். மற்ற ராசிகளான மேஷம், மிதுனம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ராசிகள் ஒரு 50 சதவீத சந்தோஷத்தை கண்டிப்பாக அடையவே போகிறது. கவலையே வேண்டாம்.

 எந்த ராசியாக இருந்தாலும் பிறப்பு ஜாதகத்தில் குரு பகவான் எந்த ராசிக்குள் அமர்ந்துள்ளாரோ அதன்படி பெயர்ச்சி கணக்கை எடுத்துக் கொள்வது நலம்.

 மேஷமே அச்சம் வேண்டாம்! 

உதாரணமாக மேஷ ராசிக்கு ஒருவரது ஜாதகத்தில் குருபகவான் மீன ராசியில் அமர்ந்துள்ளார் எனில் இப்போது பெயர்ச்சியாகிற குரு, மேஷ ராசியினர் அனைவருக்குமே அற்புத யோகப் பலன்களை அள்ளி வழங்குவார்.

இது அனுபவித்தால்தான் புரியும். எனவே இப்போது குரு 10ம் இடத்துக்கு வருகிறது என்று பயம் கொள்ளக் கூடாது மேஷ ராசியினர். எனவே இந்த குருப்பெயர்ச்சி முதல் மிகப்பெரிய நன்மைகள் அனைவருக்குமே நடக்கும்.

 யாரெல்லாம் பரிகாரம் செய்யணும்? 

மிதுன, கும்ப, மகர, சிம்ம ராசிக்காரர்கள் இந்த குருபெயர்ச்சிக்காக ஒவ்வொரு வாரமும் ப்ரீதி பரிகார வழிபாடு முறைகளை முறையாக கையாண்டு கொண்டிருப்பது நலம். ஸ்ரீ சிவ வழிபாடும் தொடர்ந்து செய்யவது அவசியம்.

அதோடு எல்லா ராசிக்காரர்களுக்குமே வருகிற தமிழ் பிலவ ஆண்டு, வைகாசி மாத 6ம் தேதிக்குப் பிறகும், இந்த சார்வரி ஆண்டு தை மாத 10ம் தேதிக்குப் பிறகும் ஏகப்பட்ட சுபிட்ச உயர்வு அதிர்ஷ்ட மேன்மைகளை 56 தினங்கள் வரை அனுபவிப்பார்கள். அதனால் இந்த குருப்பெயர்ச்சி நம் ராசிக்கு கெட்ட இடத்துக்கு வரப்போகிறதே என்று அனுகூலமற்ற ராசிக்காரர்கள் கண்டிப்பாக கலக்க நிலைமைக்கு சென்று விட வேண்டாம்.

* * *

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

* * *


மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

மேஷம் ராசி வாசகர்களே,

இதுவரை ராசிக்கு 9ம் இடத்தில் அமர்ந்து ராசியையும், 3ம் இடத்தையும் பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் இடத்தையும் தன்னுடைய வியாழ வளையமான சிம்மராசியையும் பார்த்து உங்களுக்கான யோகப் பலாப்பலன்களில் சற்றே ஏற்ற இறக்கமான பலன்களை கொடுத்துக் கொண்டு வந்தார் குருபகவான்!

கேதுவின் நட்சத்திரத்தையும் மற்றும் சுக்கிரன், சூரியனின் நட்சத்திரக் கூட்டத்தை அடைந்த மகா, செவ்வாயின் ஆதிக்க பலம் பெற்ற மேஷராசிக்காரர்களான உங்களது ராசிக்கு, இந்த குருப்பெயர்ச்சி என்னென்ன வெல்லாம் பலன்களாக கொடுக்கப் போகிறது என்று பார்ப்பதற்கு முன்னால், உங்களது மூளைக்குள் குருபகவான் 10ம் இடத்திற்கு வருகிறாரே, இதனால் பதவி பறிபோகும் என்று சொல்கிறார்களே, 10ம் இட குருவுக்கு அவ்வளவு பெரிய விசேஷம் இல்லை என்று எல்லாரும் பயமுறுத்துகிறார்களே என்றபடி ஒரு வித குழப்பம் மனதுக்குள் நெருடிக் கொண்டிருந்தாலும், 9க்குடையவர் 10ம் இடத்தில் அமரப் போவதும், 12க்குடையவரான இவர் கேந்திரமாக அமர்வதும், மிகப்பெரிய சிறப்பு என்றே சொல்லி விடலாம்!

அதனால் நடைபெறப் போகிற குருப்பெயர்ச்சியை நினைத்து எது சார்பாகவும் பயம் கொள்ள வேண்டாம் என்று கட்டாயமாக அடித்துச் சொல்லி விடலாம் உங்கள் ராசிக்கு! அதேநேரம் கடந்த ஓராண்டாக உங்களுக்கு நடந்த சம்பவங்கள் பொருட்டு சற்றே பின்னோக்கி சென்று கணக்குப் போட்டு பார்த்தீர்கள் என்றால், நாட்டு நடப்பு, உலக நடப்பு எல்லாமே தலைகீழாக பயமுறுத்தலாக நடந்து கடந்த மார்ச் மாதம் முதல் இந்த உலகத்துக்கே மிகப்பெரிய சோதனை ஏற்பட்டு, அனைவரையும் ஸ்தம்பிக்க வைத்தது போலவே, உங்களையும் காரண காரியமின்றி 9ம் இட குருவின் சுகப் பலன்களை அனுபவிக்க முடியாமல் போனது.

இந்த தருணத்தில் ஒரு விஷயத்தை உங்களுக்கென உங்கள் ராசிக்காக சொல்லியே ஆக வேண்டும். அதாவது 9ம் இட குரு என்பவர் எப்போதுமே பெரிய அற்புதங்களை செய்துவிட மாட்டார். காரணம் அவர், அவர் வீட்டில் பலமாகி நின்றது அவருக்குத்தான் பலமேயொழிய சுப பலன்களை கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு குருபகவான் வந்திருக்க மாட்டார். இதனால் என்ன நடந்திருக்கும் தேவைக்கு மட்டும் பணம் கிடைத்திருக்கும், மதிப்பு மரியாதை கொஞ்சம் ஸ்திரமாக இருந்திருக்கும், கடன் கேட்டு வாழாத வாழ்க்கை நகர்ந்திருக்கும், வாரிசுகளின் அமைதி நீடித்திருக்கும், சுகமான துாக்கம் வந்திருக்கும், அலட்டிக்கொள்ளாமல் நாட்களை நகர்த்தியிருக்கலாம். ஏதோ நன்மை நடந்து கொண்டிருக்கிறது நமக்கு என்றபடி மனதில் ஒரு சிறு சந்தோஷம் நீடித்திருக்கும் அவ்வளவே!

ஆனால் பெரிதாக 9ம் இடத்தில் கடந்த அக்டோபர் முதல் அமர்ந்திருந்த குருபகவான் நல்ல பலன்களை திருப்தியாக, சுபிட்சமாக வேண்டப்பட்ட அளவில் கொடுத்திருக்க மாட்டார். இதற்கான காரணம் இன்னொரு விஷயமும் இருக்கிறது. அதாவது குருபகவான் 9ம் இடத்திற்கு வந்த பிறகே அங்கே ஏற்கனவே சனிபகவானும், கேதுவும் அமர்ந்திருந்தார்கள். அதனால் இரு பாவகிரகங்களோடு மாட்டிக் கொண்ட குரு சண்டைப் போடுபவர்களை சமாதானம் செய்து வைப்பதுபோல அவர்களது தீயப் பலன்களை அடக்கி வைத்தாரே ஒழிய, அவர் செய்ய வேண்டிய பலன்களை, யோகத்தை உங்களுக்கு கொடுக்கவில்லை என்பதே உண்மை! போகட்டும். வந்திருக்கிற குருப்பெயர்ச்சி என்ன செய்யப் போகிறது என்று முதலில் பார்ப்போம்.

ராசிக்கு குடும்ப ஸ்தானத்தை நோட்டமிடப் போகிறார். அடுத்ததாக சுகஸ்தானத்தை 7வது பார்வையாக பார்க்கப் போகிறார். அடுத்ததாக ராசிக்கு 6ம் இடத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளப் போகிறார். எனவே இந்த இடங்களின் பலன்களான தாயார், வித்தை, கல்வி, வெளியிட மரியாதை, பந்தய லாபங்கள், ஆரோக்கியம், வாழ்க்கைத்துணை, வம்பு தும்பு எதிரி, எதிர்ப்பு, பெரிய கடன், மறைமுக எதிர்ப்புகள் தேவையற்ற அநாவசிய சச்சரவுகளை கொடுக்கக்கூடிய இந்த இடங்களை இவர் பார்வை செய்ய இருப்பதால், இதனால் ஏற்படக்கூடிய சில நேர தீயப் பலன்களை எல்லாம் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து திருப்பத்தை மட்டுமே கொடுக்கப் போகிறார்.

தனுசு ராசிக்கு 2ம் இடமான மகர ராசியில் குருபகவான் அமரப்போவதும், அவர் ஆரம்ப சஞ்சாரத்தை சூரியனின் நட்சத்திரத்தில் தொடங்குவதும், உச்ச வீடான கடக ராசிக்கு சப்தம கேந்திரத்தில் அமரப் போவதும், தனது ஆட்சி வீடான மீனராசிக்கு 11ம் இடமான மகர ராசியில் அமரப்போவதும், இதுவரை முடிவுபெறாத பல பெரிய பிரச்னைகளையும், தொந்தரவுகளையும் முடித்து வைக்கப் போகிறார் நல்லபடியாக!

எனவே 10ல் குரு அமர்ந்தால் பதவி பறிபோகும் என்ற ஜோதிட விதியைத் தாண்டி உங்களுக்கு புதிய பதவியை எல்லாரும் ஆச்சரியப்படும்படி நிச்சயமாக கொடுத்துவிட்டே போகப் போகிறார். இன்னும் சொல்லப்போனால் வாடகை வீட்டில் நாம் குடியிருந்தோம் என்பதை மாற்றி சொந்த வீடு கிடைத்த உரிமையாளர் என்ற பதவியைக் கொடுக்கப் போகிறார். கல்யாணமாகாத இளைஞர்களுக்கு, இளைஞர் பதவியை பறித்துக்கொண்டு தந்தை என்ற பதவியைக் கொடுக்கப் போகிறார். இளம்பெண்களுக்கு மணப்பெண்ணாகி விட்டாள் என்ற பதவியைக் கொடுக்கப் போகிறார், தாய் என்ற அந்தஸ்த்தை ஏற்படுத்தப் போகிறார் என்று இவரது பெயர்ச்சியால் இவர் கொடுக்கப் போகும் பதவிகளை நல்லபடியாகவே சொல்லலாம். குடும்ப மேன்மை மெல்ல சுபிட்சமாக வளரப்போகிறது. தனவரவு பெருக்கம் அடையப் போகிறது. தடுமாறாத சிந்தனைகள் மனதுக்குள் உதயம் ஆகப் போகின்றன. தொட்டக் காரியம் பளிச்சென முடியப் போகிறது. புதிய முயற்சிகள் சற்றே கொஞ்சம் இழுபறி அலைச்சலை கொடுத்தாலும் சட்டென்று காரிய வெற்றியைக் கொடுக்கப் போகிறது.

இன்னொரு புறம்  ஒரு முக்கியமான விஷயத்தை உங்களுக்கு சொல்லியாக வேண்டும். அதாவது இந்த குருப்பெயர்ச்சி ஆன உடன் இப்போது இருக்கிற இருப்பிடத்தை வாடகை வீடோ, சொந்த வீடோ, அதனை மாற்றிக்கொண்டு 8 மாத காலம் வேறு இடத்திற்கு மாற்றமாகி வசிப்பது தடங்களில்லாத உயர்வுகளைத் தரும் என்பதே சூட்சமமான ரகசியம். காரணம் சுபக்கிரகங்கள் கேந்திரம் பெறும்போது அதனுடைய பலன்களை சற்றே குறைவாகத்தான் கொடுக்கும். எனவே இந்த முடிவை நீங்கள் எடுக்கிற பட்சத்தில் இந்த குருப்பெயர்ச்சி மிக அற்புதமான மாற்றத்தையே உருவாக்கப் போகிறது.

பதவிரீதியாக குடும்பத்தைப் பிரிந்து, பூர்வீகத்தை விட்டு, மனைவியை தவிக்கவிட்டு, சொந்தபந்தங்களை பிரிந்து வாழ்ந்து கொண்டிருக்கிற இந்த ராசி அன்பர்களுக்கு மிகத் தெளிவான சந்தோஷ உயர்வுகள் காத்திருக்கிற குருப்பெயர்ச்சி இது!

அதோடு குருப்பெயர்ச்சி ஆன உடன் 2½ மாதங்கள் பரணி நட்சத்திர அன்பர்களுக்கும்,

அடுத்ததாக அஸ்வினி அன்பர்களுக்கும்,

அதன்பிறகு கார்த்திகையினருக்கும் தொடர் விசேஷ உயர்வுகளை கொடுக்க ஆரம்பிக்கப் போகிறார் இந்த குரு!

மேலும் முதலில் அஸ்வினி நேயர்களுக்கு பலகால சிக்கல்களை தொழில், பதவி, உத்தியோக, நிர்வாக ரீதியான இடையூறுகளை எல்லாம் அடித்து உடைத்து விட இருக்கிறார். காலபுருஷ லக்கினத்தின் ஜீவன காரிய பதவி, லாப வீட்டிற்கு வரப்போகிற குரு அதிரடியாக எண்ணற்ற சுபாசுப உயர்வு சவுபாக்கியங்களை கண்மண் தெரியாமல் வாரி வழங்கப் போகிறார் என்பதே உண்மை!

பொதுவாக இந்த குருப்பெயர்ச்சி ஆன உடன் இந்த ராசியினர் அனைவருக்கும் வருகிற வைகாசி மாதம் வரை எந்த விதமான பெரிய தொல்லை, தொந்தரவு இடையூறுகளும் ஏற்பட்டு விடாதபடி பார்த்துக் கொள்ளப்போகிற குருப்பெயர்ச்சி இது.

வருகிற நவம்பர் மாத 26ம் தேதியிலிருந்து 2021ம் ஆண்டு பிப்ரவரி மாத 17ம் தேதி வரை பரணியினருக்கு தடாலடியான உயர்வுகளும், இல்லத்துக்குள் சுபகாரிய சந்தோஷ  வைபவங்களும், காசு, பணம், தொகை விஷயங்களில் எந்தவித தங்கு தடையும் இல்லாத நடைமுறைகளும் உருவாகி, தங்களது உயர்வுகளை எளிதாக அடைந்துக் கொள்ள இருக்கிறார்கள். மணவாழ்க்கை சிக்கல் ஏதேனுமிருப்பின் நல்லபடியாக முடிந்து விட இருக்கிறது. சொத்து-பத்து பிரச்னைகளுக்கான தீர்வுகள் கிடைக்கப் போகிறது.

அடுத்ததாக, வருகிற டிசம்பர் மாத 10ம் தேதியிலிருந்து 2021 மார்ச் மாத 21ம் தேதி வரை அஸ்வினியினருக்கு நினைத்த காரியம் எல்லாமும் எந்த வித குழப்பத்தையும் கொடுக்காமல் முன்னேற்றத்தை உண்டாக்கப் போகிறது. 3வதாக வருகிற 2021ம் ஆண்டு, பிப்ரவரி மாத 24ம் தேதி முதல் 117 தினங்கள் கார்த்திகையினருக்கு வெகு அட்டகாசமான அருமை உயர்வுகளை கொடுக்கப் போகிற குருப்பெயர்ச்சி இது!

மேலும் இந்த குருப்பெயர்ச்சியாகி வருகிற 2021ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் வரை வருகிற திங்கள், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலெல்லாம் வெகு அற்புதமான சந்தோஷ லாபங்கள் காத்திருக்கின்றன. அடுத்ததாக மகர ராசியினரிடம் வெகு கவனமாக இருக்க வேண்டிய காலக்கட்டம். இந்த குருப்பெயர்ச்சி தொடங்கியதிலிருந்து வருகிற தமிழ் மாதங்களான வைகாசி, ஆனி, ஆடி மற்றும் புரட்டாசி மாதங்கள் வெகு கோலாகலமான உயர்வுகளையும், சந்தோஷங்க ளையும் தரப்போகிறது.

இந்த ராசி கார்த்திகை நட்சத்திர இளைஞர்கள் 2021ம் ஆண்டு, மார்ச் மாதம் வரை அநாவசிய செயல்பாடுகளில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். வாகனத்தில் அலட்சியம் கூடாது, வேகம் குறைக்கணும். இந்த ராசி அஸ்வினி நட்சத்திர இளம் பெண்கள் புதிய நட்புகளிடம் கவனமாக இருக்கணும். குடும்பத்தாரின் அறிவுரைகளை மீறக்கூடாது, மணவாழ்க்கை ரீதியான சொந்த முடிவுகள் எடுப்பதில் கவனம் தேவை!

பெண்கள்

மேஷ ராசி இல்லத்தரசிகள் அடைந்த தொல்லை, தொந்தரவுகள், சச்சரவுகள், சங்கடங்கள் நீங்கி வரும் மார்கழிக்குப்  பின்னர் அமோகமான திருப்பங்களை சந்திக்கப் போகிறார்கள். பரணியினருக்கு தன் துணையால் மிகப்பெரிய வசதியும், அஸ்வினியினருக்கு விவகாரத்து பிரச்னை நீங்கி மணவாழ்க்கையும், கார்த்திகையினருக்கு 2021 ஏப்ரலுக்கு முன் அரசுப்பணி கிடைக்கும்.

தொழிலதிபர்கள்

இதுவரை ஸ்தம்பித்த தொழில் நிர்வாக விஷயங்கள் அனைத்தும் விடுபட்டு, பெரிய மேன்மைகள் கிடைக்கப் போகிறது. அடைந்த இழப்பும், விரயமும், நஷ்டமும் ஈடுகட்டப்பட இருக்கின்றன. புதிய நபர் கூட்டாளிகளை இணைக்கும்போது மிகுந்த விழிப்புத் தேவை! அயலூர், அயல்மாநில, அயல்தேச தொழில், வியாபார, பெரியபட்ஜெட் திட்டங்கள் வருகிற டிசம்பருக்கு பிறகு நல்லவிதமாக கைக்கூடிவிடும்.

கவன மாதங்கள்:

மார்கழி, பங்குனி, ஆடி, ஐப்பசி.

பரிகாரம்:

வருகிற ஓராண்டு வரை ஒவ்வொரு மாதம் வருகிற திருதியை திதியன்று (வளர்பிறை, தேய்பிறை) ஸ்ரீசிவபெருமானுக்கும், ஸ்ரீதெட்சிணா மூர்த்திக்கும் அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபட சிறப்புகள் அதிகரிக்கும்.

ரிஷபம்

ரிஷபம்  (கார்த்திகை 2, 3, 4ம் பாதம், ரோகிணி, மிருகசீரிஷம் 1, 2ம் பாதம்)

ரிஷப ராசி வாசகர்களே,

உங்களுக்கு இதுவரை குருபகவான் ஆயுள் ஸ்தானமான 8ம் இடத்தில் அமர்ந்து கொண்டும், 3 ஆண்டுகளாக 8ம் இட சனியோடும், இதற்கிடையில் வந்த 1½ ஆண்டு கால அஷ்டம கேதுவாலும், பல இன்னல்களை, இடையூறுகளைக் கொடுத்து வந்த குருபகவான் இப்போது 9ம் இடமான பாக்கியஸ்தான ராசிக்குள் மகர ராசியில் பிரவேசிக்கப் போகிறார். 8க்குடையவன் 8லேயே பலம் பெற்றார் என்ற காரணத்தால் சில நேரம் சில வித நன்மைகள் நடந்து இருக்குமேயொழிய, நீங்கள் பட்ட அல்லல்களை, இன்னல்களை சொல்ல வார்த்தையே கிடையாது என்று சொல்லி விடலாம்.

 அப்படிப்பட்ட நெருக்கடிகளை மூன்று கிரகங்கள் 8ம் இடத்தில் அதாவது சனி, கேது, குருபகவான் அமர்ந்து கொண்டு 2 ஆண்டு காலங்கள் உங்களைப் போட்டு புரட்டி எடுத்தார்கள் என்று சொல்லி விடலாம். அடையாத விரயம் இல்லை, சந்திக்காத இழுபறி இல்லை, ஒன்றைத் தொட்டால் பலநுாறு விரயங்கள், ஆயிரம் ரூபாய் கைக்கு வந்தால் பத்தாயிரம் ரூபாய் விரய செலவோடு ஒவ்வொரு விஷயத்திலும் காத்திருந்தது உங்களுக்கு கிடைத்ததே எள்ளளவுதான்!

ஆனால் நீங்கள் விரயம் செய்ததோ ஒரு முழு தேங்காய் அளவு என்று சொல்லி விடலாம். அனைத்துமே கண்ணுக்குத் தெரிந்த விரயங்களாக உங்கள் ரத்தத்தை சுண்ட வைத்திருக்கும். பணம் சம்பாதிப்பது எளிதாக தெரிந்தாலும், அதை விட விரயம் என்பது சர்வ சாதாரணமாக நடந்து கொண்டே வந்தது. யாரைக் காப்பாற்றுவது, யாருக்கு இல்லை என்று சொல்வது, கட்டாயமாக செய்ய வேண்டியதை எப்படி நிறுத்துவது, நிறுத்தினால் என்ன பிரச்னை ஏற்படும், எவரை திருப்திப்படுத்துவது, அந்த திருப்திக்கு அவர் முழுமையாக சொந்தக்காரராக ஆவாரா? என்றபடியெல்லாம் நீங்களாகவே குழம்பி தவித்த தவிப்பு இருக்கிறதே, இதுவரை அதையெல்லாம் சொல்லி மாள முடியாது.

 இப்படிப்பட்ட இன்னல்களோடு காலத்தையும், ஆண்டினையும், மாதத்தையும் அன்றாட தினங்களையும், ஒவ்வொரு மணிநேரத்தையும் நகர்த்திய உங்களுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு 8ம் இட கேதுபகவான் சற்றே வெளியில் வந்து உச்சமாகி விருச்சிக ராசியில் அமர்ந்து விட்டார். இது 60 சதவீத நிம்மதி என்றே சொல்ல வேண்டும். 

அதோடு சனிபகவான் வருகிற டிசம்பர் மாத 26ம் தேதிக்கு பிறகு 8ம் இடத்தை விட்டு, 9ம் இடத்திற்கு நகர்ந்தப் பின்னர் பலப்பல சூப்பர் உயர்வுகளை எந்த வித பெரிய முயற்சியும், அலைச்சலும், அலைக்கழிப்பும் இல்லாமல் அனுபவிக்கப் போகிறீர்கள் என்பதை திட்டவட்டமாக சொல்லிவிடலாம். என்றாலும், இந்த குருப்பெயர்ச்சி என்ன செய்யப் போகிறது உங்களுக்கு என்பதை முதலில் சொல்ல வேண்டும்.  

குருபகவான் எப்போதெல்லாம் மகர ராசியில் வந்து அமர்கிறாரோ, அப்போதெல்லாம் மிக மிக அற்புதமான உயர்வு சந்தோஷ உயர்வுகளை கண்டிப்பாக அடைந்திருப்பீர்கள். இந்த 2020லிருந்து  12 ஆண்டுகள் பின்னே சென்று பார்த்தீர்களேயானால், அதாவது 2008ம் ஆண்டு என்னென்ன சுபாசுப பலன்களை அனுபவித்தீர்களோ, அதிர்ஷ்டங்களை சந்தித்தீர்களோ, அதுபோல இந்த குருப்பெயர்ச்சி தொட்டு அதாவது வருகிற நவம்பர் 19ம் தேதியிலிருந்து அடுக்கடுக்கான சிறப்பு உயர்வுகளையும், குடும்ப ரீதியான மேன்மைகளையும் கண்டிப்பாக சந்தித்திருப்பீர்கள் என்று உத்தரவாதம் தரலாம்.

அடுத்ததாக குருப்பெயர்ச்சியை விட வருகிற சனிப்பெயர்ச்சி இன்னும் பல அட்டகாசமான உயர்வுகளை மேலும் மேலும் தரப்போகிறது. அதனால் டிசம்பருக்கு பிறகு குருவுடன் சேரப்போகிற உங்கள் ராசிக்கு ராஜயோகாதிபதியான சனிபகவான் அனைத்து தொல்லைகளிலிருந்தும் விடுபடுவதற்கான வழிவகைகளை உண்டாக்கப் போகிறார். தனிப்பட்ட உயர்வுகளை தரப்போகிறார். வீட்டை சரிப்படுத்த இருக்கிறார். கட்டட விஸ்தீரணங்களை ஏற்படுத்தப் போகிறார். புது வீட்டில் குடி அமர்த்தப் போகிறார். வாரிசுகளால் பட்ட கவலைகளை தீர்க்கப் போகிறார். வாரிசுகளுக்குண்டான எதிர்கால முன்னேற்றம் குறித்த அஸ்திவாரங்களை போட இருக்கிறார். இதுவெல்லாம் குருவுடன், சனிபகவான் சேர்ந்து செய்யப் போகிற அதிர்ஷ்ட உயர்வு லீலைகள்!

அடுத்ததாக உங்கள் ராசிக்கு 9ம் இடத்தில் அமரப்போகிற இந்த குருவுக்கு கேதுவின் தொடர்பும், சனியின் தொடர்பும் அத்துடன் வருகிற தை மாத வாக்கில் சூரியன் தொடர்பும் மிகப்பெரிய வசதிக்காரராக ஆக்கிவிட்டுப் போகிற மிக மிக அற்புதமான பெயர்ச்சி இது என்று சொல்லிவிடலாம்.

மேலும் நினைத்ததெல்லாம் பெரிய அளவு நன்மைகளோடும், அதிர்ஷ்டங்களோடும்நடந்து முடியப்போகிறது. இனிமேல் உங்களுக்கு கிடைக்கப் போகிற தொடர்புகள் எல்லாம் மற்றவர்கள் வியக்கும்படியான வி.ஐ.பி. தொடர்புகளே! அவர்கள் உங்களுக்கு எப்படி கிடைத்தார்கள், எவர் மூலம் என்பதெல்லாம் பிறரை வெளியில் காட்டிக்கொள்ள முடியாத ஆச்சரியத்தில் ஆழ்த்தப் போகிற பெயர்ச்சி இது!

எத்தனை துாரம் அல்லல்பட்டு, துாக்கத்தை இழந்து, அநாவசியத் துயரத்தோடு நாட்களை கடத்தினீர்களோ, அதற்கெல்லாம் பதிலடி கொடுக்க வந்திருக்கிற அற்புதமான யோகப் பெயர்ச்சி இது! இனி எந்த வித நிர்பந்தமும், தொல்லை தொந்தரவும் உங்களை நெருங்காது. தொழில் ரீதியான வளர்ச்சிகள் நினைத்ததைத் தாண்டி அதிகரிக்கப் போகிறது, நிர்வாகம் ஒழுங்குபட இருக்கிறது, எவராலும் செய்ய முடியாத சாதனையை உங்களது நிர்வாக வழியில் தொழில்துறை சார்பில், உங்களது தகுதிக்கு ஏற்ப தனிப்பட்ட உயர்வுகளை கொடுக்கப் போகிற பெயர்ச்சி இது! சதாநேரமும் உங்களை சஞ்சலத்தில் கொண்டு போய் நிறுத்திய நபர்களுக்கு தக்க பதிலடி தரப்போகிறீர்கள் இந்த குருப்பெயர்ச்சியின் பலத்தைக்கொண்டு.

மேலும் அரசாங்க ரீதியான காரியங்கள் கைக்கூடப் போகிறது. உத்தியோகம் அமையாத சூழல் சரியாகி நிம்மதியான ஸ்திர உத்தியோகம் கிடைக்கப் போகிறது. மனைவி, மக்களை விட்டு பிரிந்து வாழ்ந்த சோகம் தீரப்போகிறது. விவாகரத்து விஷயம் தொடர்பாக மாதாமாதம் அலைந்து திரிந்த நிலைமை ஒரு வழியாக ஒழிந்து நிம்மதி கிடைக்கப் போகிறது. அடிக்கடி கரு கலைந்த சூழலால் மனநிம்மதியை தொலைத்துவிட்ட தம்பதியர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி மிகப்பெரிய அதிர்ஷ்ட புத்திர பாக்கியத்தை ஏற்படுத்தப்போகிறது. தந்தையால் கிடைக்க வேண்டிய பாட்டனார் வழி சொத்துக்களால் வந்து சேர வேண்டிய பங்குபாகங்கள் அனைத்திற்கும் இனிமேல்தான் உருப்படியான தீர்வு காத்திருக்கிறது.

 4 ½ ஆண்டுகளாக என்னென்ன இழுபறி காரண காரியமற்ற விரயம் மரியாதைக் குறைவு, வெளியிட அந்தஸ்து பங்கம், சக ஊழியர்களால் உத்தியோக இடத்தில் சந்தித்த அவதுாறு அவமானம் போன்றவற்றுக்கெல்லாம் தீர்வுகள் கிடைத்து அதைத் தாண்டிய சூப்பர் வெகுமானம் அதிர்ஷ்டமுடன் உண்டாகி உங்களை குதுாகலத்தில் துள்ள வைக்கப் போகிற பெயர்ச்சி இது!

 ரோகிணியினருக்கு இந்த பெயர்ச்சியானதிலிருந்து  69 தினங்களுக்குள் மிகப்பெரிய சாதக அற்புதங்கள் நினைத்துப் பார்க்காத உயர்வுகள் தொடரப் போகின்றன. திடீர் பரிசு பண வரவுகள் கிடைக்கப் போகிறது. நிலுவைத் தொகைகள் வந்து சேர இருக்கின்றன. பூமி லாபம் கிடைக்கப் போகிறது.

வாழ்க்கைத்துணைக்கென ஒரு சின்ன இடமாவது வாங்கி அளிக்கப் போகிறீர்கள். இழந்த ஆபரணங்கள் கைக்கு வந்து புதிய ஆபரணச் சேர்க்கையும் நிச்சயமாக உண்டு.

இந்த ராசி இளைஞர்களுக்கு தங்களது கல்வி நிலைமைக்கு தகுந்தது மாதிரி உத்தியோகம் அமைவு கிடைக்கப் போகிறது. திருமண தாமதம் ஏற்பட்டு வருகிற இளம் இருபாலருக்கும் வரன் அமையப் போகிறது. நினைத்த வரனையும் கரம்பிடிக்கலாம்.

இந்த நட்சத்திர வயது முதிர்ந்த கன்னிகளுக்கு பல ஆண்டுகளாக வரன் அமையாத தோஷ நிலைமைகள் அனைத்தும் விலகி திடீர் திருமணம் எளிதாகவோ, விமரிசையாகவோ நடந்து முடியப் போகிறது. 

கார்த்திகையினர் குருபகவானால் இப்போது எந்த வித பெரிய சாதகங்களையும் உடனடியாக அடைய முடியாவிட்டாலும், வருகிற ஜனவரி மாத 13ம் தேதிக்கு பிறகு எண்ணற்ற மாற்றங்களும் உயர்வுகளும் சாதகங்களும் நினைத்துப் பார்க்காத திருப்திகளும் கிடைக்கப் போகிறது அடுக்கடுக்காக!

இந்த ராசி வயது கடந்த நபர்கள் மட்டும் குருப்பெயர்ச்சி ஆனதிலிருந்து 22 தினங்கள் மிக மிக கவனமாக ஆரோக்கிய ரீதியான விஷயங்களில் தங்களை கவனப்படுத்திக் கொண்டு மருந்து மாத்திரை விஷயங்களை தவறாமல் கடைப்பிடித்துக் கொண்டிருக்க வேண்டும்.

பொதுவில் இந்த குருப்பெயர்ச்சியால் 4 மாதம் வரை ரோகிணியினருக்கு 90 சதவீத அதிர்ஷ்ட உயர்வுகளும்,

மிருக சீரிஷத்திற்கு 70 சதவீத சந்தோஷ திருப்திகளும்,

60 சதவீத உயர்வு மாற்றங்கள் கார்த்திகைக்கும் ஏற்பட்டு, அதன்பிறகு சமமான வளர்ச்சிகளை தொடர்ச்சியாக உயர்வுடன் கொடுக்கப் போகிற குருப்பெயர்ச்சி இது என்று சொல்லிவிடலாம்.  

மொத்தத்தில் கவலைகள் பறக்கப் போகிறது. புதிய சந்தோஷங்கள் முளைக்கப் போகின்றன. வசந்தக் காற்று மிக பலமாக வீசப்போகிறது என்று இந்த குருப்பெயர்ச்சியால் சொல்ல வேண்டும் உங்களுக்கு!

பெண்கள்:  

கார்த்திகையினர் அனுபவித்து வருகிற சம்பந்தமில்லாத அனைத்து சச்சரவு,கலக்கங்களுக்கும் பெரியதொரு தீர்வு கிடைக்கப் போகிற பெயர்ச்சி இது. இனிமேல் நிதானமான செயல்பாடுகளால் சாதித்து விடுவீர்கள். மணவாழ்க்கை சிக்கல்களுக்கு பெரியதொரு மகிழ்ச்சி, தீர்வு உண்டு.

விவசாயிகள்:  

அறுவடை நேரத்தில் மிகப் பெரிய நம்பிக்கையோடு இறங்குகிற பட்சத்தில் எதிர்பாராத விதமாக சந்தித்த நஷ்ட இழப்புகள் எல்லாம் இனிமேல் ஈடுகட்டப்பட போகிறது.

தொழிலதிபர்கள்:  

உங்களது நிர்வாக வகையில் ஏமாற்றி வருகிற நபர்களை துாக்கி எறிந்துவிட்டு, புதிய நபர்களை நியமிக்கப் போகிறீர்கள். பல ஆண்டுகளாக நீடிக்கிற நஷ்டங்கள் முடிவுக்கு வந்து புதிய லாபங்கள் உயரப்போகிறது.

கவன மாதங்கள்: 

சித்திரை, வைகாசி, ஆவணி, கார்த்திகை.

பரிகாரம்: 

தொடர்ச்சியாக ஒவ்வொரு மாத ஏகாதசியில் ஸ்ரீரங்கம் ரங்கநாதரை வழிபடவும். அருகில் உள்ள காளியம்மன் சன்னதியில் தினசரி 5 தீபமேற்றி வழிபட்டுக் கொண்டிருக்கவும். நவக்கிரக ராகுவை வணங்கவும்.

மிதுனம்

மிதுனம் (மிருகசீரிஷம் 3, 4ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3ம் பாதம்)

மிதுன ராசி வாசகர்களே,

புதன் கிரகத்தின் ஆதிக்கத்திற்கு சொந்தக்காரர்களான உங்களுக்கு, இதுவரை குருபகவான் 7ம் இடமெனும் கூட்டு, நட்பு, களத்திரஸ்தானமான ஆட்சி வீட்டில் அவரது சொந்த வீட்டில் அவருக்கே உரித்தான மூலத்திரிகோண வீட்டில் கேந்திரமாக அமர்ந்திருந்தார்.

ராசிக்கு பாவி இவர், கேந்திராதிபத்திய தோஷத்துக்கு ஆளானவர். அதேநேரம் 10ம் வீடான செல்வ ஸ்தானத்திற்கு அதிபதியும் கூட! பொன்னவன், அமைச்சன், பிருகஸ்பதி, தேவகுரு என்றெல்லாம் அழைக்கப்படக்கூடிய இவர் எல்லா ராசிக்காரர்களுக்குமே நல்ல இடத்தில் வந்து அமரும்பொழுது, ஒரு சொற்ப அளவாவது நன்மைகளை கொடுத்துவிட்டு செல்வதால் இவரது பலம் கிடைக்காதா? என்று ஏங்குபவர்களும் அவரது பார்வையாவது நமக்கு, நம் ராசிக்கு ஏற்படாதா? என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தினாலும், உங்கள் ராசியைப் பொறுத்தவரை ஒருபுறம் இவரை பாவி என்று தான் சொல்ல வேண்டும்.

 சுபகிரகங்கள் எப்போதும் அதாவது எந்த சுபக்கிரகமுமே கேந்திர ஸ்தானத்தில் நற்பலனை கொடுக்க மாட்டார்கள். அப்படி கொடுத்தாலும் அது நிலையில்லாத நிலைமையில்தான் இருக்கும். போகட்டும் இதுவெல்லாம் குருபகவான் அந்தந்த ராசி லக்னக்காரர்களுக்கு ஏற்படுத்த வேண்டிய பலன்கள். இதற்கும் இப்போது பெயர்ச்சி ஆகிற குருவுக்கும் எந்தவித சம்பந்தமும் உங்களது ராசிக்கு கிடையாது. எனவே ராசிக்கு பாதக அதிபதியான குருபகவான் இப்போது கெட்டுப்போக போகிறார். அதேநேரம் 8ம் இடமாக வந்து அமரப்போகிறார். ஸ்தான பலனில் சில நேரம் உங்களது ராசிக்கு அநாவசிய கெடுபிடி, தொல்லை தொந்தரவுகளை கொடுத்தாலும், கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் என்ற அடிப்படையிலும் வருகிற டிசம்பர் 26ம் தேதிக்கு பிறகு சனிபகவானும், குருபகவானுடன் சென்று இணைந்து கொள்வதால் ராசிக்கு தர்மகர்மாதிபதி யோகாதிபத்யம் கிடைக்கப்போகிறது.

வாழ்க்கைத் துணையுடன் நீடித்து வருகிற ஒற்றுமை சம்பந்த போராட்டம், கருத்து வேறுபாடு, வீண்சச்சரவுகள், பரஸ்பர சந்தோஷங்கள் சார்பாக நீடிக்கிற மனசஞ்சலங்கள் போன்றவைகளுக்கு தடாலடி தீர்வு ஏற்பட்டுவிடும். ஆரோக்கிய நிலைமைகளில் சிறு சிறு பின்னடைவுகள் இருப்பது மாறிவிடும். கூட்டு சம்பந்தமான விஷயங்களால் ஏற்பட்ட தொந்தரவுகள், அலைக்கழிப்புகள், விரயங்கள், அலைச்சல்கள் எல்லாம் மாறிவிடும். அதாவது இந்த குருப்பெயர்ச்சி தொட்டு என்னென்ன திட்டங்கள், ஏற்பாடுகள், முயற்சிகள் மனதளவில் வைத்துள்ளீர்களோ அவை அனைத்தும் விருப்பப்பட்டதுமாதிரி நிறைவேறுவதற்கான அத்தனை சாத்தியக்கூறுகளும் ஏற்படப் போகிற குருப்பெயர்ச்சி இது!

இல்லத்துக்குள் ஒற்றுமை பலமடங்கு உயரப்போகிறது. உள்மனதளவில் பயந்துக்கொண்டிருக்கிற கவுரவ சம்பந்தப்பட்ட பிரச்னைகள் தீர்ந்து ஒரு வழியாக நல்லவித முடிவுக்கு வரப்போகிறது.  தொழில், உத்தியோகம், பதவி, பணி, பொறுப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் கூடுதலான உயர்வுகள் காத்திருக்கின்றன. தொழில், வியாபார நிர்வாக விஷயங்களிலும் புதிய பட்ஜெட் சம்பந்தப்பட்ட யோசனைகளிலும் சிறப்பான மாற்றங்கள் உருவாகப் போகின்றது. அது உயர்வை தருகிற மாற்றங்களாகவே இருக்கப் போகிறது.

புனர்பூச நட்சத்திரக்காரர்களுக்கு நவம்பர் மாத இறுதியிலிருந்து  3½ மாத காலம் அனுகூலமான திருப்புமுனைகள், சுபகாரிய விரயங்கள், கொடுத்த கடன் வசூலாகுதல், வீடு வாசல் சீர்த்திருத்தங்கள் என்று  ஏகபோகமாக களைகட்டப் போகிறது அதிர்ஷ்டகரமாகவே!

 திருவாதிரையினருக்கு இவர் பெயர்ச்சியான பிறகு  89 தினங்களுக்கு பிறகுதான் நினைத்தபடி எல்லா காரியமுமே கைக்கூடும். தொல்லை தொந்தரவு இல்லாத சூழல்கள் அமையும். அதுவரை அதிகப்படியான முயற்சி செய்து கொண்டிருப்பதில் சற்றே நிதானமாக இருக்க வேண்டியது அவசியம். ஆனாலும் குருபகவான் தேவைப்பட்டதை இந்த 89 தினங்களும் நல்லபடியாகவே நிறைவேற்றி தருவார். பணம்,பொருள் தேவைக்கேற்ப மட்டுமே கைக்கு கிடைக்கும். அதிகப்படி பிரயாசைப்படுவதை தவிர்த்தல் நலம். கூட்டணி விஷயங்களில் முன் கவனம் தேவை. கொடுக்கல்-வாங்கலிலும் அவ்வளவு விசேஷகரமாக இருக்காது. பட்ஜெட் போடுகிற விஷயங்கள் பட்ஜெட்டாகவே நிற்கும். இது சம்பந்தமான உயர்வு எல்லாம் குருபகவான் பெயர்ச்சியானதிலிருந்து 93வது தினம் கழித்தப் பிறகே கிடைக்கப் போகிறது. அதனால் இந்த ராசியினர் பெரிதாக எதையும் நினைத்து கவலைப்பட்டுக்கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. அதேநேரம் குருபகவான் பெயர்ச்சி ஆனதிலிருந்து மிருகசீரிஷத்தினர் மட்டும் பெரிய பெரிய சந்தோஷங்களை மிக மிக அதிரடியாக வருகிற மார்கழி மாத 28ம் தேதி வரை அடையப்போகிறார்கள். இவர்களுக்கு வளர்ந்து வருகிற தேவையற்ற பிரச்னைகளிலிருந்து விடிவு கிடைக்கும், தனிபட்ட உயர்வு உண்டாகும். நீண்ட காலங்களாக முடிவு பெறாத காரியங்கள் எல்லாவற்றிலும் சாதகமான போக்கு தென்படும், லாபத்தையும் அடையலாம், பங்கு பாக பிரச்னைகள் தீர்வுக்கு வரும்.

 சொத்து-பத்து ஆஸ்தி ரீதியாக இழுபறியில் இருக்கிற விஷயங்கள் சட்டென்று சந்தோஷ முடிவுகளை ஏற்படுத்திவிடும். எது சம்பந்தமாக இழுபறிகள் இருக்கிறதோ, அதுவெல்லாம் நல்லபடியான சாதக முடிவுக்கு அதிரடியாக வரப்போகிறது. இல்லத்துக்குள் நிலவுகிற அனைத்துவித கூச்சல் குழப்பங்களுக்கும் ஒரு வழியாக யோக தீர்வு உண்டாகிவிடும். உத்தியோகத்தில் பணியில், பொறுப்பில், பதவியில் எதிர்பார்த்திருக்கிற மாற்றங்கள் நல்லபடியாக கிடைத்து ஆச்சரியப்படுத்தப்போகிற குருப்பெயர்ச்சி இது!

அதோடு எவரிடமோ பெரிய தொகையாக கொடுத்துவிட்டு ஏமாந்து விடுவோமோ என்றபடி நீடிக்கிற கவலைகள், பயம், சந்தேகம் எதிர்பாராத விதமாக விலகி பெரிய சந்தோஷ குதுாகலத்தைக் கொடுக்கப் போகிற குருப்பெயர்ச்சி! வாரிசுகள் ரீதியாக என்னென்ன குழப்பமும், கவலையும் நீடிக்கிறதோ, அதற்கும் முடிவு கிடைத்துவிடும். அவர்கள் சம்பந்தப்பட்ட எதிர்கால உயர்வுகள் குறித்த அடுத்தக்கட்ட முன்னேற்றம் சம்பந்தமான விஷயங்கள் நினைத்தபடியே பூர்த்தியைக் கொடுக்கப் போகிற குருப்பெயர்ச்சி இது! மற்றபடி பொதுவாக புதிய தொழில், வியாபார, நிர்வாக பட்ஜெட் விஷயங்களெல்லாம் சற்றே தாமதப்பட்டாலும் சரியான தருணத்தில் யோக பாக்கியத்தை அதற்கான முடிவை நல்லபடியாக ஏற்படுத்தப்போகின்றன.  எதிரி, எதிர்ப்பு, வம்பு தும்பு, வழக்கு, விஷயங்கள் நிலுவையில் கிடப்பதற்கு நீங்கள் எதிர்பார்த்திருக்கிற காலத்திற்குள் ஒழுங்கான சாதகத் தீர்வை ஏற்படுத்தப்போகிற குருப்பெயர்ச்சி என்றாலும் அதற்கு குருப்பெயர்ச்சியானதிலிருந்து வருகிற 2021ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் வரை பொறுமை தேவை!

அடுத்ததாக மணவாழ்க்கை ரீதியாக என்னென்ன சங்கடங்கள் நீடித்துக் கொண்டிருக்கிறதோ கோர்ட், போலீஸ் என போய்க்கொண்டிருக்கிறதோ, விவகாரத்து விஷயங்களாக மாறி இருக்கிறதோ அதற்கெல்லாம் இனிவரும் காலம் மனநிம்மதியான முடிவை ஏற்படுத்திவிடும். அதற்கான காலகட்டம் குருப்பெயர்ச்சியானதிலிருந்து 169 தினங்கள் ஆகலாம். ஆக நிதானமாக இது சம்பந்தமான விஷயங்களில் செயல்படுவது அவசியம். அதன்பிறகு உங்கள் பக்கம் முழுமையான சாதகம் ஏற்பட்டுவிடும்.

கூட்டணி தொழில்களால் சிலவித விரயங்களை சந்தித்துக்கொண்டிருப்பவர்களுக்கு தக்க காலம் இந்த குருப்பெயர்ச்சி மூலம் ஏற்பட்டிருக்கிறது.

எப்போதுமே மிதுன ராசியினருக்கு ஆவணி, கார்த்திகை, பங்குனி, சித்திரை மாதங்கள் சிறப்பான ஏற்றங்களையும், சந்தோஷங்களையும் கொடுக்கிற மாதங்கள் என்பதால் குருப்பெயர்ச்சி  ஆன உடன் வருகிற கார்த்திகை மாத 4ம் தேதிக்கு பிறகு ஏகப்பட்ட அதிர்ஷ்டங்கள் தடாலடியாக முன்னேற்றமாக வழங்கப் போகிறது.  ஆக மிதுனத்தார் எல்லாருக்குமே வருகிற கார்த்திகை மாதம் முழுவதும் சக்கப் போடு போடுகிற விஷேசமான மாதம்தான்! சுபகாரிய திருமண ரீதியாக முயற்சித்து வருகிற புனர்பூச இளம் இருபாலருக்கும் குருப்பெயர்ச்சி ஆன பிறகு 52 தினங்களுக்குள் எதிர்பாராமல் கைக்கூடிவிடும்.

 திருவாதிரையினருக்கு இந்த தினங்கள் கடந்த பிறகு வருகிற 26 தினங்களுக்குள் திருமண முயற்சிகள் விஷேசகரமாக கைக்கூடிவிடும்.

3-வதாகத்தான் மிருகசீரிஷத்தினருக்கு நினைத்தபடியான வரன், வாய்ப்பு, சந்தோஷ திருமண விஷயங்கள் நடக்கப் போகின்றன. மேலும் புத்திர பாக்கிய ஏக்கத்தில் உள்ள இந்த ராசியினருக்கு குருப்பெயர்ச்சி ஆனப் பிறகு வருகிற 2½ மாதங்கள் கழித்து 8வது மாதம் முடிவதற்குள் சந்தோஷம் என்றால் அப்படி ஒரு சந்தோஷம் அதிர்ஷ்ட புத்திரப்பாக்கியத்திற்கென கிடைக்கப் போகிறது. பொருளாதார ரீதியாக குருபகவான் 8ம் இடத்தில் மறைந்தபடியே அன்றாட தேவை, அத்தியா வசிய, இத்யாதி, முக்கிய கடமைகள் அனைத்தையும் கணிசத்தொகை வரவுகளை ஏற்படுத்தி தீர்த்து வைக்கப் போகிறார். மறைந்த குரு, நிறைந்த தனத்தையும் கொடுக்கப் போகிறார். ஆக பொருளாதாரக் கஷ்டம் 70 சதவீதம் இருக்காது. 

மற்றபடி இந்த ராசி 80 வயதை கடந்திருக்கிறவர்களுக்கு ஆரோக்கிய ரீதியாக சிற்சில பின்னடைவுகள் ஏற்படலாம். ஆனாலும் பாதகமில்லை. மொத்தத்தில் குருபகவான் மிதுனராசிக்கு தீய இடமான 8ம் இடத்துக்குள் நுழைந்தாலும் ஓரளவு சாதகமான உயர்வுகளைத்தான் கொடுத்துக்கொண்டே நகர்த்தப் போகிறார். காரணம் இந்த ராசிக்கு பாதக அதிபதியாகிறார். அதனால் ஓராண்டு, எட்டு நாட்கள் நீசமாக நிற்கப் போகிற குருபகவான் முன்னும், பின்னும் வக்கிர அஸ்தமன அதிசார கதிகளில் சஞ்சாரம் செய்யப் போவதால் மிதுனராசிக்காரர்கள் அனைவருக்குமே பெரியளவு பாதகத்தை ஏற்படுத்தாமல் நல்லபடியாக வைத்துக்கொள்ளப் போகிறார்.

இந்தப் பெயர்ச்சியால் உங்களுக்கு நீங்களே செய்துகொள்ள வேண்டிய நிவர்த்தி வைத்தியம் என்னவென்றால் இப்போதைய இடத்தையும், சூழலையும் மாற்றிக் கொண்டால் அட்டகாசமான குருப்பெயர்ச்சியாகவே இருக்கப் போகிறது மொத்தத்தில்!

பெண்கள்: 

 கார்த்திகையினர் இல்லத்தரசிகள் குருப்பெயர்ச்சியானதி லிருந்து  94 தினங்கள் அக்கம்பக்கத்தாரிடமும், புதிய நபர் அறிமுகங்களிடமும் கவனமாக ஓட்டணும். அதன்பிறகு அனைத்தும் சரியான சாதக பாதையில் நகர ஆரம்பிக்கும். திருவாதிரை இளம் பெண்கள் சுய கவுரவ அந்தஸ்து விஷயங்களில் வருகிற 2021 ஏப்ரல் மாதம், 2வது வாரம் வரை கவனம் வைத்துக்கொள்ளணும்.

விவசாயிகள்: 

மகர ராசிக்குள் குருபகவான் எப்போதெல்லாம் நுழைகிறாரோ, அப்போதெல்லாம் தனிபட்ட வகையில் உங்களுக்கு உற்பத்தி பாதகம் ஏற்படாது.

தொழிலதிபர்கள்:  

உள்ளூரை விட, அயலுார் அயல்தேச தொழில், நிர்வாக விஷயங்களால்தான் லாபங்கள் பெரியளவில் கிடைக்கும்.

கவன மாதங்கள்:

மார்கழி, பங்குனி, ஆனி.

பரிகாரம்:

தொடர்ச்சியாக ஸ்ரீ அம்பாள் வழிபாடு செய்து கொண்டும், ஸ்ரீசுப்ரமணியருக்கு 11 வியாழக்கிழமைகள் அபிஷேக அர்ச்சனைகள் செய்து வழிபட்ட பின் ஸ்ரீதெட்சிணாமூர்த்தியை வணங்கிக் கொண்டு வரவும்.

கடகம்

கடகம் (புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)

கடகம் ராசி வாசகர்களே,

அவநம்பிக்கை என்ற வார்த்தைக்கு துளிகூட மனதுக்குள் இடமளிக்காத எந்நேரமும் உயர்வான சிந்தனைகளோடும், கல்வி, படிப்பு மற்றும் புதிய நுணுக்க விஷயங்களில் பெரிய ஆர்வம் வைத்திருக்கிற நிலபுலன்களை எந்த ரூபத்திலோ பெரிய அளவில் வசதிகரமாக மதிப்புமிக்கதாக அடைந்துவிடுகிற சந்திராதிக்கம் பெற்ற ராசிக்குள், குரு, புதன், சனிபகவானின் நட்சத்திரங்களை அடைந்த கடக ராசிக்காரர்களே குருபகவான் வருகிற நவம்பர் 15ம் தேதிக்கு பிறகு உங்களது ராசிக்கு 7ம் இடமான சுபஸ்தானத்தில் நுழையப் போகிறார்.

அதேநேரம் நீச கதியை அடைகிறார், ஆனாலும் நீசம் இல்லாமல்தான் நகரப்போகிறார். உத்திராட நட்சத்திர 2வது பாதத்தில் நுழைந்தப்பின் 19 தினங்கள் மட்டும் நீச நிலைமையில் வர்க்கோத்தமமாக நிற்கப் போகிறார். அதாவது மகர ராசியில் ஸ்திரமாக அமரப் போகிறார். இதுவரை ருணரோக சத்ரு ஸ்தானமான 6வது வீட்டில் 8க்குடையவருடன் அமர்ந்து, கேதுவுடன் சிக்கி, 6ம் இடத்து பலனையும் செய்யாமல், 8வது வீட்டு அதிர்ஷ்டத்தையும் கொடுக்காமல், ஆட்சி வீட்டு பலனையும் செய்யாமல் ஏனோதானோவென குருபகவான் 6ம் இடத்தில் சுழன்றார்.

இல்லத்தை இல்லமாக மாற்றப் போகிறார். இல்லறத்தை இனிக்க வைக்கப் போகிறார். மிக  பெரிய மனிதர்களை திடீரென்று அறிமுகப்படுத்தப் போகிறார். பணம், காசு விஷயமேன்மைகளை அதிகரிக்கப் போகிறார். சரளமாக பணத்தைக் கொடுக்கப் போகிறார். வாரிசுகளின் கவலையை தீர்க்கப் போகிறார். வாரிசு பற்றிய உங்கள் கவலையை விரட்டப் போகிறார். அதோடு இந்த ராசி இளம் இருபாலருக்கும் திடுபுடுவென திருமண வைபவங்களை நடத்தி விட இருக்கிறார்.

உத்தியோகம் இல்லாத இந்த ராசியினருக்கு உத்தியோகத்தை ஏற்படுத்திக் கொடுக்க இருக்கிறார். மீள முடியாத சிக்கல்களுக்கெல்லாம் மீளுகிற வழியைக் காட்டப் போகிறார். ராசிக்கு தன அதிபனான சூரியனின் நட்சத்திரத்தில் குருபகவான் சஞ்சரிக்கும்போது, வருகிற தை மாதம் குருபகவானும், சூரியனும் சேர்கிற சூழல் ஏற்படுவதுபொருட்டு உங்களது புத்திசாலித்தனம் அபரிமிதமாக அதிகரிக்கப் போகிறது. தொழில், வியாபாரம், நிர்வாகம், முதலீடு, பட்ஜெட் சம்பந்தப்பட்ட விஷயங்களில் துணிச்சலாக சற்றே யோசித்து நல்லபடியாக கால்வைத்துவிடலாம். அதேநேரம் வருகிற டிசம்பர் மாத 26ம் தேதிக்கு பிறகு, மீண்டும் ராசிக்கு 6, 8க்கு அதிபதிகளான குருவும், சனியும் இணைகிறார்கள்.  இருந்தாலும் சனிபகவான் ஸ்தான பலனில் கண்டக சனியாக மாறுகிறார். அதனால் கொஞ்சம் நிதானமாக பெரிய முதலீடுகளில் இறங்குவதே நலம். ஆனாலும் எதிர்பாராத வகையில் பல பெரிய, புதிய லாப உயர்வுகள் தடாலடியாக கிடைக்கும்.

உத்தியோகம், பதவி, பணி, பொறுப்பு விஷயங்களில் இதுவரை நீடித்த தொல்லை, தொந்தரவுகளும் சக ஊழியர்களால் அனுபவித்த சச்சரவுகளும், அதிகாரிகளின் மிரட்டல்களும் உங்களுக்கு சரிப்பட்டு வராத சக ஊழியர்கள் உங்களுக்கு கீழ் பணிபுரிந்து கொண்டு தேவையற்ற விமர்சன, அவதுாறு இடையூறுகளை கொடுத்து கொண்டுவரின் அதற்கும் மாற்றம் நல்லபடியாக ஏற்பட்டுவிடும்.

புதிய உத்தியோகத்தை, பொறுப்பை, பெரிய பதவியை அரசாங்கம் அல்லது தனியார் வகையில் தேடிக்கொண்டிருக்கிற இந்த ராசி இளைஞர்களுக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் இரண்டு, மூன்று அதிர்ஷ்ட உயர்வுகள் கிடைக்கப் போகிற காலகட்டம் துவங்கிவிட்டது. பணிநிரந்தரமும் அமையப் போகிறது. இதுவரை தற்காலிக பணிப்பொறுப்பில் எந்த ஒரு நிர்வாகத்தில் இருந்தாலும் இனிமேல் தொட்டு அதற்கென பெரிய ஸ்திரத்தன்மை ஏற்படப்போகிறது.

ஊதிய நிலுவை பாக்கிகளும் கைக்கு கிடைக்கப் போகிற சாதகம் உருவாகி இருக்கிறது. பென்ஷன் சம்பந்தப்பட்ட தொகை நிலுவைகளும் சட்டென்று கைக்கு வரப்போகிற சாதகம் உருவாகப் போகிறது. கொடுக்கல்-வாங்கல் சம்பந்தப்பட்ட சச்சரவுகள் எதுவாக இருப்பினும் அதற்கெல்லாம் உயர்வுகரமான திருப்பங்கள் லாபத்தோடு ஏற்படப்போகின்றன. கடன், கண்ணி விவகாரங்கள் ஒரு வழியாக 60 சதவீத தீர்வுக்கு வந்துவிடும். லாப ராசியில் உள்ள ராகு எதிர்பாராத பணவரவு அதிர்ஷ்டங்களை குருப்பெயர்ச்சியான பிறகு இவருடைய பார்வையை பெற இருப்பதால் அதிரடியாக தரப்போகிறார்.

அடுத்ததாக வருகிற மாசி மாத 6ம் தேதிக்கு பிறகு அதாவது 2021 பிப்ரவரி மாத 18ம் தேதிக்கு பிறகு 10ம் இட அதிபதியான செவ்வாய்க்கிரகம், ராகுவுடன் இணைந்து குருபகவானின் பார்வையை அடையப் போவதால்  பெரிய தொகை வரவுகளையும், உழைப்பில்லாத லாப அதிர்ஷ்டங்களையும் கொடுக்கப் போகிறார்.

 கடக ராசியில் உள்ள பூச நட்சத்திரக்காரர்களுக்கு வருகிற 2021 ஜனவரி மாதம் 20ம் தேதியிலிருந்துதான் நினைத்தபடியான மாற்றங்கள் பெரியளவில் கிடைக்கும்.

அடுத்து ஆயில்ய அன்பர்களுக்கு குருப்பெயர்ச்சி ஆனது தொட்டு வருகிற ஏப்ரல் வரை நிறைய திருப்புமுனை உயர்வுகள் ஏற்படுகிற சூழல்கள் அமையும்.

புனர்பூசத்தினருக்கு தமிழ்மாதமான மாசி மாதத்திலிருந்து குழப்பம் இல்லாத சந்தோஷங்கள் ஒவ்வொரு விஷயத்திலும் அதிரடியாக கிடைக்கப் போகின்றன.

கடக ராசியினருக்கு எப்போதுமே கார்த்திகை, மார்கழி, பங்குனி, சித்திரை, வைகாசி மாதங்கள் வெகு அற்புதமானவை என்பதால் இந்த குருப்பெயர்ச்சிக்குப் பிறகு வரப்போகிற இந்த மாதங்கள். இதுவரை சந்திக்காத சிறப்பு உயர்வுகளை அளிக்கப் போகிறது. மேலும் இந்த குருப்பெயர்ச்சி தொடங்கி, அடுத்து வருகிற குருப்பெயர்ச்சி வரை வருகிற ஒவ்வொரு பூச நட்சத்திரமும், திருவோணமும், அஸ்வினியும், ரோகிணியும், மிருகசீரிஷமும் நட்சத்திர நாட்களாக வருகிறபோது, அன்றைய தினம் வெகு தெளிவான முன்னேற்றம் ஒவ்வொரு விஷயத்திலும் கிடைக்கப் போகிறது.

ரிஷப, கன்னி ராசிக்காரர்களால் அனுகூல மேன்மைகள் காத்துள்ளன. இந்த குருப்பெயர்ச்சி காலக்கட்டத்தில் கும்ப ராசிக்காரர்களிடம் அனைத்து விஷயங்களிலும் கவனப்படுத்திக் கொள்ள வேண்டும்.

மற்றபடி பொதுவாக பார்க்கப் போனால் கடக ராசிக்கு இல்ல மேன்மைகளுக்கும், சுபகாரிய திட்டங்களுக்கும், இடமாற்றம் குறித்த யோசனைகளுக்கும், வீடு, கட்டட புதுபிப்புகளுக்கும், புதிய வீடு கட்டுவதற்கும் சட்டென்று இல்லத்துக்குள் சுபகாரிய திருமண, குலதெய்வ, சுபசடங்கு விஷயங்களை செய்து முடிப்பதற்கும் பல ஆண்டுகளாக சந்தான பாக்கியம் அமையாத கஷ்டங்களுக்கும், கவலைகளுக்கும் சேர்த்து முழுத்தீர்வை எதிர்பாராத வகையில் கொடுத்துவிட்டுப் போகப் போகிற அற்புதமான குருப்பெயர்ச்சி இது!

அத்துடன் இந்த ராசி பூச நட்சத்திர இளைஞர்கள் தங்களை இந்த குருப்பெயர்ச்சி தொடங்கியது தொட்டு வருகிற 42 தினங்கள் வண்டி வாகன விஷயங்களிலும், பிற நபர் விவகாரங்களிலும் மிக மிக கவனமாக இருக்கணும். புனர்பூச இளம் பெண்கள் வருகிற பிப்ரவரி 19ம் தேதிக்கு பிறகு இந்த குருப்பெயர்ச்சி ஆன பிறகு தங்களது சுய கவுரவ விஷயங்களில் கவனமாக இருக்கணும்.

பெண்கள்

உங்கள் வாழ்க்கைத்துணையால் அனுபவித்து வரும் எண்ணற்ற வெளியில் சொல்லிக் கொள்ள முடியாத மனசஞ்சலங்களும், ஒற்றுமை கோளாறும், விவாகரத்து வரை சென்றுவிடுமோ? என்ற அச்சமும், ஒரு வழியாக தீரப்போகிற குருப்பெயர்ச்சி இது!

தொழிலதிபர்கள்:

இதுவரை முடங்கிக் கிடந்த பெரிய தொழில், பட்ஜெட் நிறுவனத்தை சட்டென மீண்டும் திறக்க போகிறார்கள். பெரிய லாபத்தையும் சந்திக்கப் போகிறார்கள்.

விவசாயிகள்:

பூசத்தினருக்கு வருகிற மார்கழி மாத 19ம் தேதிக்கு பிறகு எண்ணற்ற வளர்ச்சிகள், துறை சார்ந்த லாபங்கள், புதிய நிலபுலன் சொத்து சேர்க்கைகள் ஏற்பட்டு தடையில்லாத உற்பத்திப்பெருக்கம் ஏற்படப் போகிறது.

மாணவர்கள்:

கல்வி நலன், அது சம்பந்தமான உயர்வுகள் நல்லபடியாக இருக்கும். எந்த ஒரு குறிக்கீடும் சச்சரவும் கல்வி தொடர்ச்சியில் ஏற்படாது என்றாலும் ஆயில்யத்தினர் ஏப்ரலுக்குப் பிறகு அதிக சிரத்தை எடுக்க வேண்டிய குருப்பெயர்ச்சி இது!

கவன மாதங்கள்:

பங்குனி, ஆனி, ஆடி, புரட்டாசி.

பரிகாரம்:

ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும் ஸ்ரீ அம்பிகையை வழிபட்டுக்கொண்டிருக்க வேண்டும். வியாழக்கிழமை விரதமிருந்து ஸ்ரீசுப்ரமணிய சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபடவும்.

சிம்மம்

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

சிம்ம ராசி வாசகர்களே,

இப்போது தனுசு ராசியிலிருந்து, மகர ராசிக்கு பெயர்ச்சியாகிற குருபகவான், சிம்மராசிக்கு 6ம் இடத்தில் மறைகிறது, நீசமாகிறது, பலம் இழக்கிறது என்றபடி பலவித பயமும், பாதிப்பும் கலந்த பலன்கள் எந்த ரூபத்திலோ இவர்கள் காதுக்கு வந்து சேர்ந்திருந்தாலும், வாக்கிய கணித பஞ்சாங்கத்தின் பிரகாரம் இந்த குருப்பெயர்ச்சி வருகிற நவம்பர் மாத 15ம் தேதி ஏற்பட்டதற்கு பிறகு பன்னிரு ராசிகளில் ராஜா ராசி என்று சொல்லக்கூடிய இவர்களது ராசி நிச்சயமாக உண்மையாகவே ராஜராசியாகத் தான் ஜொலிக்கப் போகிறது.

ஆக இப்போது சகட யோகம் என்று சொல்லக்கூடிய 6ம் இட குரு ராசிக்கு 6ல் மறைவு பெற்றாலும், பார்வை செய்கின்ற இடங்கள் அயனசயன சுகஸ்தானத்தையும், தொழில் ஸ்தானத்தையும், ராசிக்கு 2ம் இடத்தையும், ராசிநாதனான சூரியபகவானின் சாரத்தை அடைந்து  ஒரு மாத காலம் மிக வலிமையோடு நிற்கப் போவதால், இந்த குருப்பெயர்ச்சி தொடங்குவதற்கு முன்பே எண்ணற்ற சுப வாய்ப்புகளும்,  திருப்பங்கள் ஏற்படப் போவதற்கான முகாந்திரங்களும் ஆரம்பித்திருக்கும்.

முயற்சி செய்தபோது நழுவிப் போன விஷயங்கள் இப்போது எந்த வித முயற்சியும் செய்யாமலேயே கைக்கூடுவதைப் பார்த்து உங்களுக்கே ஆச்சரியம் பொங்கி வழியப் போகிறது. ஆக இந்த குருப்பெயர்ச்சி எந்த வகையிலும் தொல்லைதொந்தரவுகளை ஏற்படுத்தாத குருப்பெயர்ச்சியே!

குருப்பெயர்ச்சியின் ஆரம்பக் காலகட்டம் அதாவது நவம்பர் தொடங்கி வருகிற பிப்ரவரி மாதம் வரை, மகம் மற்றும் உத்திர நட்சத்திர நேயர்களுக்கு ஏதோ சில சம்பந்தமில்லாத பின்னடைவுகள் இவர்களுக்கென ஏற்படுவது போல ஒரு பாவனை ஏற்பட்டாலும், அதன் பிறகு இவர்களுக்கே நீச குருவான 6ம் இட குரு பல வகையிலும் ஏற்றங்களை அள்ளி் வழங்கப் போகிறார். தொடர்சந்தோஷங்களை கொடுக்கப் போகிறார். பிரிந்து கிடக்கிற குடும்பத்தை ஒன்று சேர்க்க இருக்கிறார். உறவுகளால் ஏற்பட்டிருக்கிற சஞ்சலங்களை சரிசெய்ய போகிறார்.

அடுத்து இதுவரை 5ம் இடத்தில் குருபகவான் மூலத்திரிகோணம் பெற்று ஆட்சி நிலையில் அமர்ந்திருந்தாலும், எந்த ஒரு பெரிய சுபிட்சத் திருப்பத்தையும் ஏற்படுத்தி இருக்க மாட்டார். காரணம் இரண்டு பாவிக்கிரகங்களோடு இணைந்திருந்த சூழல்களால்தான் என்பதை நீங்கள் அனுபவப்பூர்வமாகவும் உணர்ந்திருப்பீர்கள்.

இழுபறி என்றால் அப்படி ஒரு இழுபறி எல்லா காரியத்திலும் ஏற்பட்டிருக்கும். அதனால் உங்களது தனிப்பட்ட சந்தோஷங்கள் பாதிக்கப்பட்டிருக்கும். எவருக்கோ நீங்கள் நல்லது செய்யப் போய், அது தலைகீழான பிரச்னைகளை உண்டாக்கி தவிக்க விட்டிருக்கும். இதுவெல்லாம் கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பருக்கு பிறகு நடந்த சூழல்கள்.  எனவே இதற்கெல்லாம் பெரியதொரு மாற்றம் விடிவை ஏற்படுத்தி உங்களை சந்தோஷச்சூழலில் தள்ளி வைத்து நல்லபடியாக பார்த்துக்கொள்ளப் போகிற குருப்பெயர்ச்சி இது!

 அடுத்து எல்லா நெருக்கடிகளையும், எந்த ரூபத்திலோ தீர்த்து வைக்கப் போகிற குருப்பெயர்ச்சிதான். பலவித ஆரோக்கிய தொந்தரவுகளுக்கும் உங்கள் துாக்கத்தைக் குறைத்துவிட்ட விஷயங்களுக்கும் அற்புதமான திருப்புமுனை விடிவுகளை ஏற்படுத்தப் போகிற வெகு சூப்பரான குருப்பெயர்ச்சி இது!

குடும்பச்சூழலில் தனிப்பட்ட இனிமைகள் துவங்கி சுபகாரிய விசேஷங்களை குடும்பத்துக்குள் திருமண வைபவ சுப விரயங்களை ஏற்படுத்தப்போகிற குருப்பெயர்ச்சி இது! உங்களால் லாபம் அடைந்துவிட்டு, உங்களை கண்டும் காணாமல் இருக்கிற நபர்களை ஒரு கை பார்க்கப் போகிறீர்கள். வீடு, விஸ்தீரண செலவுகள் ஏற்படும்.

 வருகிற 2021 ஜனவரி மாத 10ம் தேதி தொட்டு, ஏகப்பட்ட சுக உயர்வுகளும், சுபகாரிய நன்மைகளும் கூட்டணி சம்பந்தப்பட்ட லாபங்களும், எதிர்பாராத பரிசு பணவரவுகளும் எங்கேயோ பயணப்பட போய், எது சம்பந்தமாகவோ புதிய வித காரிய அனுகூலத்தை பெறப்போவதும், நடக்கப் போகிற குருப்பெயர்ச்சி இது!

உத்தியோக பதவி, பணி, பொறுப்பு, அரசு மற்றும் தனியார் சம்பந்தமான வேலை விஷயங்களில் இனிமேல் கூடுதலான உயர்வுகள் ஆரம்பமாகி சக ஊழியர்களாலும், அதிகாரிகளாலும் ஏற்பட்ட தொந்தரவுகளுக்கெல்லாம் தீர்வு ஏற்பட்டு உங்களை நிம்மதியாக வைத்துக்கொள்ளப் போகிற குருப்பெயர்ச்சி இது! குறிப்பாக சொல்லப் போனால் இந்த உத்தியோக சம்பந்த நன்மைகளெல்லாம் வருகிற தமிழ் மாதமான மாசியிலிருந்து ஏற்பட துவங்கிவிடும். புதிய உத்தியோகம் அமையும், உத்தியோகம் அமையாத உயர்க்கல்வி தகுதியோடும், அனுபவ தகுதியோடும் இருக்கிற இந்த ராசி இளம் இருபாலருக்கும் அற்புதமான உயர்வு மாற்றங்கள் ஏற்படப் போகிறது.

தொழில், வியாபாரம், சின்னபட்ஜெட் அல்லது பெரிய பட்ஜெட், அயலுார் தொழில், அயல்தேச நிர்வாகம், ஏற்றுமதி, இறக்குமதி, உயர்தரப்பொருள் சார்ந்த தொழில்கள், பெட்ரோல்பங்க் மற்றும் பூமியிலிருந்து எடுக்கக்கூடிய பொருள்களால் செய்யக்கூடிய தொழில்கள், ஆபரணம் சம்பந்தப்பட்ட பெரிய நிறுவனம் போன்றவற்றை நிர்வாகம் செய்து வருகிற இந்த ராசி அதிபர்களுக்கு மிகப்பெரிய உன்னத மாற்றங்கள் ஆரம்பமாகப் போகின்றன. பூரம் நட்சத்திரத்தினருக்கு குருப்பெயர்ச்சி தொடங்கியதிலிருந்து  87 நாட்கள் வெகு கோலாகலமாக நகர்ந்து பெரிய உயர்வுகளை ஏற்படுத்தப் போகிற குருப்பெயர்ச்சி இது!

மகம் நட்சத்திரதாருக்கு வருகிற ஜனவரி மாதம் 12ம் தேதிக்கு பிறகு இதுவரை அனுபவித்த சோதனைகளில் இருந்தெல்லாம் விடுதலை கிடைத்து, வம்பு, வழக்கு பிரச்னைகளில் இருந்து விடுபட்டு, கோர்ட், போலீஸ் ஸ்டேஷன் படியேறி அலுத்துப்போன நிலைமைகளில் இருந்தெல்லாம் விடுபட வைக்கப் போகிற விசேஷகரமான குருப்பெயர்ச்சி இது!

உத்திரம் நட்சத்திரதாருக்கு இப்போதே தேவையற்ற அநாவசிய சிக்கல்கள் குரு 5ம் இடத்தில் அமர்ந்திருப்பதால் ஏற்பட்டு வருகின்றன. அதாவது இந்தப் பெயர்ச்சிக்கு முன்னரே! அதனால் இவர்கள் இந்த குருப்பெயர்ச்சி தொடங்கியது தொட்டு 39 தினங்கள் அமைதியாக செயல்பட வேண்டும்.

காரண காரியமில்லாத அலைச்சல்களை தவிர்க்க வேண்டும். 3ம் நபர் விஷயங்களில் தலையீட்டை தவிர்க்க வேண்டும். தங்களுக்கு தெரிந்த வி.ஐ.பி.களிடம் தகுதியில்லாத நபரை அறிமுகப்படுத்துவதை குறைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக இந்த ராசி இளம் இருபாலரும் ஜனன காலத்தில் குருபகவான் 6ம் இடத்திலோ, 8ம் இடத்திலோ, 12ம் இடத்திலோ ராசிப்படி அமர்ந்து பிறந்திருக்கிற அன்பர்களுக்கு, இந்த குருப்பெயர்ச்சிதான் நல்லபடியான வரனை அமைத்துக் கொடுக்கப் போகிறது கவலை வேண்டாம், இவர்களது அயல்தேச உத்தியோக கனவுகளும் பூர்த்தியாகிவிட இருக்கிறது. அங்கே உத்தி யோக பதவி, குடும்பத்தை அமைத்துக்கொள்ள போராடி வருபவர்களுக்கு இந்த காலம் சரியானதொரு உகந்த காலம்.

பொதுவாக சிம்ம ராசியினருக்கு இனிமேல்தொட்டு வருகிற 14 மாதங்கள் கடன், கண்ணி வளராது, வம்பு வழக்கு ஏற்படாது, வீணான சண்டை சச்சரவுகளுக்கு வாய்ப்பில்லை, வழக்கு துரத்தாது, கோர்ட் வாசலில் நிற்க வேண்டிய அவசியம் ஏற்படாது, வாரிசுகளின் எதிர்காலம் குறித்த கவலைகள் ஓய்ந்துவிடும், வீடு மாற்றத்திற்கான நல்ல முகாந்திரம் ஏற்படும்.

குருபகவானை மீறி அடுத்து உங்கள் ராசிக்கு மிகப் பெரிய ராஜயோக அதிபதியான செவ்வாய்க்கிரகம் தசம கேந்திரத்தில் வந்து அமரப்போவதும், அவருடன் ராகு கிரகம் இணையப் போவதும் இவர்கள் இருவரையும் குருபகவான் பூர்வ புண்ணிய பார்வையால் சனிபகவானுடன் சேர்ந்து பார்க்கப்போவதும் இயல்பாகவே தெய்வானுக்கிரகம் கிடைக்கப் போவதால் எல்லா விஷயத்திலும் யோக பாக்கியங்கள் கிடைக்கப் போகிறது.

அடுத்து வருகிற கார்த்திகையும், மார்கழியும் சிறப்பு திருப்பங்களை கொடுக்கப் போகின்றன இந்த 13 மாத காலகட்டத்திற்குள் வருகிற சுவாதி, அனுஷம், திருவோணம், சதயம், ரேவதி, பரணி நட்சத்திர தினங்களிலும் புதன்கிழமைகளிலும், திங்கட்கிழமைகளிலும் அட்டகாசமான அதிரடி உயர்வுகள் காத்துள்ளன.

கடக ராசியினரிடம் கவனமாக இருக்கணும். மகர ராசிக்காரர்களால் பலவித இனிமைகள் தொடர்ச்சியாக கிடைக்கும்.

பெண்கள்

 மகம் நட்சத்திரப் பெண்மணிகளுக்கு பலவித சோதனைகளும், திடீரென்று தீர்ந்து மணவாழ்க்கை ஒற்றுமையும், இல்லற இனிமையும் ஏற்படப் போகிறது.

தொழிலதிபர்கள்

அயலூர், அயல்தேச, அயல்மாநில தொழில் சம்பந்த திட்டங்களை, இந்த குருப்பெயர்ச்சி தொடங்கியது தொட்டு 3 ½ மாதங்கள் தள்ளி வைப்பது நலம்.

கவன மாதங்கள்

கார்த்திகை, மாசி, பங்குனி, புரட்டாசி.

பரிகாரம்:

ஸ்ரீ விநாயகர் வழிபாட்டை குருப்பெயர்ச்சி ஆனது தொட்டு தொடர்ந்து 51 தினங்கள் வழிபட ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் விநாயகருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்வதும், மிகப் பெரிய ஆதாய சந்தோஷங்களை தடையின்றி வழங்கும். சிவாலய அந்தணர்க்கு செவ்வாய்க்கிழமையில் குருதட்சணை கொடுத்து நமஸ்கரிக்கவும்.

கன்னி

கன்னி (உத்திரம் 2, 3, 4ம் பாதம், ஹஸ்தம், சித்திரை 1, 2ம் பாதம்)

கன்னி ராசி வாசகர்களே,

புத பகவானின் உச்ச வீடு ராசியை ஆதிக்க ராசியாகக் கொண்ட கன்னிராசிக்காரர்களே, உங்களை நவக்கிரகங்களில் 5 கிரகங்கள்  2016ம் ஆண்டிலிருந்து காரண காரியமின்றி வதைத்து, அனைவரிடமும் அவப்பெயரைக் கட்டிக்கொண்டு திடீரென்று மருத்துவ விரயத்திற்கு தள்ளப்பட்டு, அதனால் தொழில், உத்தி யோகம், வியாபாரம், போன்றவற்றில் பாதிப்புகளை சந்தித்து, அதனால் வாழ்க்கைத்துணைக்கும், வாரிசுகளுக்கும் உங்களால் எந்த வித மேன்மைகளையும் செய்து கொடுக்க முடியாதபடியான சூழலுக்கு தள்ளி விட்டன.

சனி, ராகு, கேது மற்றும் 4ம் இட குரு போன்ற கிரகங்கள். இதுவெல்லாம் சேர்க்கையாகி கடந்த 1½ ஆண்டுகளாக அடித்து துவைத்து உங்களை காயப்போட்டிருந்தாலும், எந்த வித பெரிய காயமும் பட்டுவிடாமல், பட்ட காயத்தை விட பெரிதுபடுத்தாமல் எவ்வளவு பெரிய காயமாக இருந்தாலும், இதுவெல்லாம் ஒரு பெரிய காயமா? என்றபடி அத்தனை மன காயத்தையும் மனதுக்குள் போட்டு அடைத்து வைத்துக் கொண்டு, உங்களை காயப்படுத்த நெருங்கிய விஷயங்கள் அனைத்தையும் உங்களது புத்திசாலித்தனத்தால் காயத்துக்கே காயத்தை ஏற்படுத்தி இன்று வரை நீங்கள் யாரென்று நிரூபித்துக்காட்டி நின்றுக்கொண்டிருக்கிறீர்கள்.

எனவே உங்களைச் சுற்றி சூழ்ந்துள்ள அத்தனை மனோவியாகூலமான விஷயங்கள் அனைத்தும் பறந்து விட இருக்கிறது. அதோடு கிடைக்கிற சொற்ப தொகைகளை மட்டும் வைத்து உங்களது குடும்ப நிர்வாகங்களை மிக கவுரவமாக ஓட்டிக்கொண்டிருந்தீர்கள், கடன்களுக்கெல்லாம் அமைதியாக பதில் சொல்லி சமாளித்தீர்கள், பெரியளவு வருமானம் கொடுத்த தொழிலை மூட வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டீர்கள், உறவுகளிடம் பொருளாதார ரீதியாக அவப்பெயரை வாங்கி கட்டிக்கொண்டீர்கள் நாணயக் கோளாறுகளுக்காக, செய்ய வைத்தது சனி, தவிக்க வைத்தது கேது, பதட்டப்பட வைத்தார் குரு.

ஆக இனிமேல் தொட்டு குருபகவான் 5ம் இடமான சுபிட்ச ஸ்தானத்திற்கு செல்லப்போவதும், ஏற்கனவே கேது கிரகம் காரிய ஜெய வெற்றி வீர பராக்கிரம ஸ்தானத்தில் வந்து அமர்ந்து விட்டதும், 9ம் இடமான செல்வ ஸ்தானத்தில் உங்கள் தனபாக்கிய அதிபனான ராசிக்கு 2,9க்குடைய சுக்கிரபகவானின் வீட்டில் யோகக் காரகன், சுகபோகக்காரகன், வசதிகளை உருவாக்குகிற ராகுபகவான் அமர்ந்திருப்பதும், வருகிற 2020 டிசம்பர் மாத 26ம் தேதிக்கு பிறகு அர்த்தாஷ்டம சனி விலகுவதும்,  33 தினங்கள் கடந்த பிறகு விபரீத ராஜயோக அமைப்பு செயல்பட போவதும் கன்னிராசியை இந்த ராசிக்காரர்களை ஓஹோவென வைத்துக் கொள்ளப் போகிறது என்பதில் கொஞ்சம்கூட சந்தேகமேயில்லை!

இனி எல்லாமுமே இனிமையாக வளரும், சந்தோஷத்திற்குள் தள்ளும், ஒற்றுமை கூடும், பலரும் மதிக்கத்தக்க புதிய வாழ்க்கை அமையும், இல்லத்தார் அனைவரிடமும் பரஸ்பர ஒற்றுமை அதிகரிக்கும், இல்லத்தார் விருப்பப்பட்டது அனைத்தையும் செய்து கொடுக்கப் போகிறீர்கள். ஒன்றேஒன்றை மட்டும் இந்த குருப்பெயர்ச்சி காலம் முழுவதும் நீங்கள் கடைபிடிக்க வேண்டியது அவசியம்.

அதாவது இப்போது பார்த்துவருகிற உத்தியோகமோ, தொழிலோ, வியாபாரமோ அதிலிருந்து ஏதோ ஒரு பெரிய விஷயத்திற்காக அல்லது மற்றவர் கொடுக்கிற ஆலோசனைக்காக இப்போது இருக்கிற இடத்தை விட்டு வெளிவராமல் இருக்க வேண்டியது அவசியம்.

ஆரோக்கிய சங்கடங்கள் அனைத்தும் மெல்ல மெல்ல தீரப்போகிறது. மருந்து மாத்திரை பெட்டியைத் துாக்கி எறிந்து விடலாம், இல்லத்துக்குள் வயது கடந்த நபர்கள் யாரேனும் பல மாதங்களாக தொடர்ந்து நோய் சிக்கல்களில் சிக்கியிருப்பின் அவர்களுக்கும் பரிபூரணமான ஆரோக்கிய பலம் கிடைத்து, மருந்து மாத்திரை சிகிச்சை விரயங்கள் நிற்கப் போகிறது. உத்தியோக பணி, பொறுப்பு, பதவி விஷயங்களில் நீடித்து வருகிற அனைத்து வித இடையூறுகளும், சம்பளமில்லாமல் காலத்தை ஓட்டிக்கொண்டு பணியை மட்டும் சிரத்தையோடு பார்த்துக்கொண்டு வருகிறவர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி பெரியதொரு சுபிட்சத்தைக் கொடுக்கப் போகிறது.

தொழில், வியாபார, நிர்வாக பட்ஜெட் முதலீடு விஷயங்கள் சார்பாக கன்னிராசியினர் வருகிற மார்கழி மாத 11ம் தேதி வரை சற்றே பொறுமையுடன் திட்டங்களை மட்டும் மனதளவில் போட்டு வைத்துக்கொண்டு, அதற்கான மற்ற முக்கியப் பணிகளில் கவனம்செலுத்தி வருவது நல்லது. இந்த மார்கழி மாத 11ம் தேதிக்கு பின்னர் உங்களை எவரோ வந்து வலுக்கட்டாயமாக பெரிய லாபம் கிடைக்கிற தொழிலுக்காக வியாபாரத்துக்காக, நிர்வாகத்திற்காக எதிர்க்க இருக்கிறார்கள்.

பூர்வீக சொத்து-பத்து, பங்கு பாக ஆஸ்தி, பூஸ்தி சம்பந்தமான விஷயங்கள் தொடர்பாக என்னென்ன நினைப்புகள் வைத்திருக்கிறீர்களோ, அதற்கெல்லாம் இந்த குருபகவான் ஓராண்டு காலத்திற்குள் நல்லபடியான ஒரு மிகப்பெரிய சந்தோஷ இனிமைகளை கண்டிப்பாக கொடுத்துவிட்டுதான் செல்லப்போகிறார்.

அதோடு சுயமாக சம்பாதித்த சம்பாத்தியத்தில் ஒரு சின்ன அளவு இடத்தையாவது கொடுத்துவிட்டுத்தான் செல்லப்போகிறார். மேலும் வீடு, கட்டட, இருப்பிட, உங்களது நிர்வாக இட வசதிகளை அதிகரிக்கப் போகிறார். விஸ்தீரணம் சார்பான நடவடிக்கைகளில் மிகப்பெரிய சாதகம் ஏற்பட்டு எளிதான வகையில் நிறைவேற்றி விடுகிற யோகத்தை தரப்போகிறார்.

திருமண வயதில் இல்லத்திற்குள் அமர்ந்திருக்கிற உங்களது இருபால் வாரிசுகள் சார்பான கவலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக இந்த குருப்பெயர்ச்சி தொடங்கியதிலிருந்து 163 தினங்களுக்குள் திருமண சுபகாரிய வைபோகங்களை இவர்களுக்காக வெகு விமரிசையாக நடத்தி முடிக்க இருக்கிறீர்கள்.

பல ஆண்டுகளாக புத்திரபாக்கிய கவலைகளோடு நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கிற இந்த ராசி தம்பதியர் இருபாலருக்கும் பொன்னான காலகட்டமாக இரட்டை வாரிசுகளே பிறந்துவிடுகிற அதிர்ஷ்டத்தை இந்த 5ம் இட குருபகவான் உண்டாக்கப் போகிறார்.

 பொருளாதார ரீதியாக எந்த மாதிரியான கஷ்டங்கள் இருந்தாலும், அதற்கெல்லாம் பல ரூபத்திலும் நிவர்த்தி வாய்ப்பு சாதகங்கள் உருவாகி சரளமான பணவரவு யோகங்களை கொடுத்து எந்நேரமும் கையில், பையில் தேவைப்படுகிற பணத்தை வைத்துக்கொள்கிற சூழல்களை உருவாக்கப் போகிற குருப்பெயர்ச்சிதான் கவலை வேண்டாம். கூட்டணி தொழில்கள் வேண்டாம், புதிய நபர்கள் ஆலோசனைகளில் சற்று விலகிஇருப்பது நலம், பங்கு பங்காளிகள் சார்பான சச்சரவுகளில் ஈடுபட வேண்டாம்.

மேலும் மணவாழ்க்கை ரீதியான கோர்ட், போலீஸ், விவாகரத்து விஷயங்களில் அதிகம் ஈடுபட்டு விடக்கூடாது, அனைத்தையும் பேச்சுவார்த்தையில் தீர்த்துக் கொள்வது நலம். அஸ்த நட்சத்திரக்காரர்கள் இந்த குருப்பெயர்ச்சி தொடங்கியது தொட்டு  56 தினங்கள் முடிவதற்குள் அதிசுபிட்சமான உன்னத உயர்வு அதிர்ஷ்டங்களை தொடப் போகிறார்கள்.

நினைத்தது அனைத்தும் பலிதமாகும், வரவேண்டிய தொகைகள் கைக்கு வந்துவிடும், உதவி செய்திருக்கிற தொகைகளில் பாதி கைக்கு கிடைத்துவிடும், அதுவரை சித்திரையும், உத்திரமும் சற்றே பொறுமையாக இருப்பது நலம்.

குருப்பெயர்ச்சியானப் பிறகு இந்த ராசி உத்திர நட்சத்திர இளம் பெண்கள் சற்றே சக நட்புகளிடமும், உத்தியோக வட்ட நபர்களிடமும், கல்வி சார்ந்த இடத்திலும் கவனமாக ஓட்டணும்.

காரணம் வருகிற 2021 மார்ச் மாத இறுதிக்குள் இவர்களுக்கு ஏதேனும் அநாவசிய அவதுாறுகள் ஏற்படலாம் என்ற காரணத்தால் சர்வ கவனம் தேவை. அயல்தேச, அயல்மாநில உத்தியோகத்திற்காக முயற்சித்துக் கொண்டிருக்கிற இந்த ராசியினருக்கு வருகிற மாசி மாதம் வெகு துாக்கலான அதிர்ஷ்ட பிராப்தங்கள் கிடைக்கப் போகிறது.

மொத்தத்தில் கன்னி ராசிக்காரர்களில் முதல் 4 மாதம் அஸ்த நட்சத்திரக்காரர்களுக்கும், அடுத்த 4 மாதங்கள் உத்திரம் நட்சத்திரத்தினருக்கும்,

மூன்றாவதாக சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கும் 80, 70, 60 என்ற சதவீதத்தில் யோகப்பலன்கள் வரிசை கட்டப்போகின்றன, திடீர் சுபிட்சங்கள் ஏற்படப் போகின்றன,

புதிய அதிர்ஷ்டங்கள் வாய்க்கப் போகின்றன, தனியாக ஒரு உயர்வு பதவி நாற்காலி போடப்பட இருக்கிறது, அரசாங்க சன்மானம் காத்திருக்கிறது, நாடாளும் நபர்களால் வெகுமானம் காத்திருக்கிறது, புதிய இடம் செழிப்புடன் உங்களை வரவேற்கப் போகிறது என்று ராசிக்கு 5ம் இடத்தில் அமர்கிற தேவபிரகஸ்பதி சொல்கிறார்.

பெண்கள்:  

 சித்திரை நட்சத்திரப் இல்லத்தரசிகளின் நீண்ட கால கவலையும், மணவாழ்க்கை சிக்கலும், புத்திரபாக்கிய ஏக்கமும், கணவரால் ஏற்பட்டு வருகிற புதுப்புது பனிப்போர்களுக்கும் விடிவுகாலம் ஏற்பட்டு திருப்பத்தை ஏற்படுத்துகிற குருப்பெயர்ச்சி இது.

விவசாயிகள்:  

ஒவ்வொரு முறையும் உற்பத்தி சார்ந்த விஷயங்களில் ஈடுபட்டு தோல்வியை மட்டுமே சந்தித்து விரயத்தை மட்டுமே அனுபவித்த சூழலெல்லாம் மாறி சுபிட்சமான புதிய வளர்ச்சியை சந்திக்கப் போகிற குருப்பெயர்ச்சி இது!

தொழிலதிபர்கள்: 

வெற்றி பெற்றாக வேண்டும். ஈடுபட்ட விஷயத்தில் எல்லாம் என்றபடியான கனவுகள், ஆசைகள், உத்வேகங்கள் அனைத்தும் கைக்கொடுக்கப் போகின்றது.

கவன மாதங்கள்

மார்கழி, பங்குனி, சித்திரை, ஆவணி.

பரிகாரம்:

ஸ்ரீரங்கம் ரங்கநாதரை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சென்று தரிசனம் செய்து வருவது சிறப்பு. கேது கிரக தரிசனமும் இதற்குண்டான ப்ரீதி பரிகார வழிபாடுகளையும் செய்வது சிறப்பு. திங்கட்கிழமை சிவபெருமானை தரிசித்தப் பின் ஸ்ரீதெட்சிணாமூர்த்தியை அர்ச்சனை செய்து வழிபடவும்.

துலாம்

துலாம் (சித்திரை 3ம் பாதம், ஸ்வாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)

துலாம் ராசி வாசகர்களே,

பெரிய நியாயவான்களும் உழைப்பின் மீது அபரிமித நம்பிக்கை கொண்டவர்களுமான ராகு, செவ்வாய் மற்றும் குருபகவானின் ஆதிக்க சக்திகளை உள்ளடக்கி, சுக்கிரபகவானின் முழு கதிர்வீச்சு சக்திகளை கொண்ட துலாம் ராசி அன்பர்களான உங்களுக்கு, இதுவரை குருபகவான் 3ம் இடத்தில் அமர்ந்திருந்தார், யோகஅதிபதியான சனிபகவானுடன் கூடி நின்றார், நிழல் கிரகமான கேதுவுடன் மாட்டி இருந்தார், இந்த நிலைமைகளால் உங்களது துயரத்தின் எல்லைகளும், உயரங்களும் நீங்களே கடக்க முடியாதபடி, ஏறமுடியாதபடி போயின.

இருந்தாலும் ராசிக்கு கெட்டவரான குருபகவான், கேதுவுடன் போய் மாட்டிக் கொண்டதால், அவர் தருகிற 3ம் இட ஸ்தான பலன்களின் கடுமைகளை சற்றே குறைத்துக்கொண்டார். சற்றே என்றுகூட சொல்லக்கூடாது, சற்று கூடுதலாகவே சொல்ல வேண்டும்.

“துரியோதனன் படை மாண்டது மூன்றினிலே குரு” என்ற அடிப்படையில் குருபகவான் 3ம் இடத்திற்கு வந்து அமர்ந்ததில் இருந்து கெடுபலன்களை எந்த நேரத்தில் கொடுக்கப்போகிறார் என்பதை அறிய முடியாமலேயே கொடுத்தாலும், சாயாகிரகமான கேதுவுடன் இணைந்ததால் அவ்வளவு பெரிய கடுமைகளை உங்களுக்கு 3ம் இடத்தால் தரவில்லை என்றேதான் சொல்ல வேண்டும்.

எப்போது செய்தாலும் விரயம் விரயம்தானே என்ற வித சிந்தனையை வரவழைத்துக்கொண்டு  இல்லக் கடமைகளை வெகு சீக்கிரமாக முடித்தீர்கள், தேவைகளை சீர்செய்து வைத்தீர்கள், அநாவசிய பிரச்னைகளிலிருந்து தங்களை விடுவித்து கொண்டீர்கள், ஏமாற்றியவர்களை விட்டு விலகி நின்றீர்கள்.

ஏழெட்டு ஆண்டு சொத்து-பத்து சிக்கல்களிலிருந்து வெளிவந்தீர்கள், உங்களது இல்லத்தில், கட்டடத்தில் வாடகைக்கு வந்து டேராப் போட்டுக்கொண்டு வாடகையும் தராமல், வீட்டை விட்டும் வெளியேறாமல் அழும்பு செய்த நபர்களை ஒரு கைப் பார்த்து ஓட வைத்தீர்கள், உறவுகள் வகையிலான சிக்கல்களிலிருந்து விலகி நின்றீர்கள் என்றுதான் இந்த 3ம் இட குருப்பெயர்ச்சி வைத்திருந்தார் என்று சொல்ல வேண்டும்.

அதேநேரம் நீங்கள் மகர லக்னமாகவோ அல்லது மிதுன லக்னமாகவோ பிறப்பு ஜாதகத்தில் அமர்ந்திருப்பின், இந்த குருப்பெயர்ச்சி சரியானதொரு பெரிய மாற்றத்தையோ, வளர்ச்சியையோ அவ்வளவாக கொடுக்காது என்றபடியும் சொல்ல வேண்டும். காரணம் விதி, கதி, மதி என்ற அடிப்படையில் ஜாதகத்தில் உயிர்ஸ்தானமான விதி என்று சொல்லக்கூடிய பிறப்பு லக்னத்திற்கு 8ம் இடத்தில் லக்னத்தில் அமரும்போது தேவையற்ற இடர்ப்பாடுகளை தரக்கூடிய சூழலுக்கு குரு மட்டுமல்ல எந்த கிரகமானாலுமே தள்ளப்படும்.

இருந்தாலும் 4ம் இட நீச குரு அதாவது வரப்போகிற ராசி மகரம், மகரத்துக்குள் குருபகவான் நீசமாகிறார். இந்த நிலைமைகளின் அடிப்படையில் இந்த குருப்பெயர்ச்சி நல்லபடியாகத்தான் இருக்கப் போகிறது என்றாலும், உங்களுக்கு சுக்கிர திசையோ அல்லது புதன் திசையோ நடந்துக்கொண்டிருப்பின் இந்த குருப்பெயர்ச்சி ஆன உடன் ஏகப்பட்ட விசேஷ நன்மைகள் மிக அதிரடியான சந்தோஷங்களுடன் நடக்கப் போகிறது.

பொதுவாக துலாம் ராசியினருக்கு குரு பகவான் நீசமாகும்போது மட்டும் பொருளாதார ரீதியான அனைத்து கஷ்டங்களும் ஒரு வழியாக தீர்ந்துவிடும். சுபகாரிய விசேஷங்களை எளிதாக நடத்தி முடிக்க முடியும், இல்ல வாரிசுகளின் சுபக்கடமைகளை நல்லபடியாக நிறைவேற்ற முடியும், அவர்களின் எதிர்காலத்திற்கென சொத்து சேர்த்து வைக்க முடியும், உறவுகள் ரீதியான குழப்பங்கள் அனைத்திற்கும் ஒரு வழியாக சிறப்பு தீர்வுகள் கிடைத்து நிம்மதியே!

வருகிற மார்கழி மாத 20ம் தேதி முடிவதற்குள் என்னென்ன விஷயங்கள் நினைத்திருக்கிறீர்களோ அனைத்தும் வெகு சூப்பராக நிறைவேறி உங்களை புதியதொரு பாதையில் பயணிக்க வைக்கப் போகிறது.

கொடுக்கல் வாங்கல் தொல்லைகள் அனைத்தும் முடிவுக்கு வந்துவிடும், அயலுார் சொத்துக்களை விற்று அந்த முதலீட்டை உள்ளூரில் உபயோககரமான சொத்தாக மாற்றப் போகிறீர்கள்.

வருகிற தை மாதத்திலிருந்து சுவாதியினருக்கு ஏகப்பட்ட உயர்வுகள் அதிர்ஷ்டகரமாக கிடைக்கப் போகிறது. எதிர்பாராத பரிசு பண வரவு ஆதாயங்களும் நிறையவே காத்திருக்கிறது.

விசாகத்தினருக்கு வருகிற மாசி மாதம் தொட்டு ஆனி மாதம் வரை தொடர் சந்தோஷ உயர்வு முன்னேற்றஙகள் நிறையவே காத்திருக்கின்றன.

சித்திரையினரின் இல்லத்துக்குள் குருப்பெயர்ச்சி ஆனது தொட்டோ  163 தினங்களுக்கு ஏகப்பட்ட சிறப்பு உயர்வுகள் நடக்கப் போகிறது. இரண்டு, மூன்று பெரிய தொகைகளாக கைக்கு வரப்போகின்றன. இவர்களது கோர்ட், போலீஸ் சம்பந்தமான அனைத்து சச்சரவுகளும் முடிவுக்கு வரப்போகிறது.

கூட்டணி சம்பந்தப்பட்ட பிரச்னைகள் தீரப்போகின்றன, கூட்டுத்தொழிலில் இருந்து ஒரு வழியாக வெளிவந்து பெரியதொரு தனித்தொழிலை ஆரம்பிக்கக்கூடிய காலகட்டம் உதயமாகி இருக்கிறது.

பொதுவாக இந்த ராசியினர் அனைவருக்குமே வருகிற குருப் பெயர்ச்சியிலிருந்து அடுத்து பெயர்ச்சியாகிற தேதிக்குள் வருகிற பிப்ரவரி, ஏப்ரல், ஜூன், ஜூலை, செப்டம்பர் மாதங்கள் பெரிய இனிமைகளை உயர்வுகளாக கொடுக்கப் போகிறது. அத்துடன் இந்த குருப்பெயர்ச்சி ஆன பிறகு இந்த ராசியினர் மாசி மாதத்திலோ அல்லது ஆடி மாதத்திலோ பிறந்திருப்பின் சர்வ கவனமாக செயல்பட வேண்டும்.

 சித்திரை நட்சத்திர இளம் பெண்களுக்கு திருமணம் சம்பந்தமாக வயது கடந்துகொண்டிருப்பின் வருகிற 2021 ஜனவரி 12ம் தேதியிலிருந்து மார்ச் மாத 28ம் தேதிக்குள் கட்டாயம் திருமண யோகம் ஏற்படப் போகிற உன்னதமான சந்தோஷக்காலம்.

மொத்தத்தில் 2018ம் ஆண்டிலிருந்து அனுபவித்து வருகிற பெரிய சங்கடங்களுக்கும், பொருளாதார சச்சரவுகளுக்கும், மணவாழ்க்கை தொடர்பான இடையூறுகளுக்கும் காரணமற்ற விரயங்களுக்கும், வீண் அவதுாறுகளுக்கும், நாணயக் கோளாறுகளுக்கும் பெரியளவில் தீர்வுகளை தரப்போகிற அற்புதமான குருப்பெயர்ச்சி இது!

பெண்கள்

இந்த ராசிப் பெண்மணிகளுக்கு மிகுந்த சுபிட்ச பலன்களை அருளப் போகிற குருபெயர்ச்சி இது! எது சார்பான தொல்லை தொந்தரவுகள் குடும்ப ரீதியாகவும் தங்களது உத்தியோக பணி பொறுப்பு வகைகளில் நீடித்தாலும் அதற்கெல்லாம் விடிவு கிடைக்கப் போகிறது.

மாணவர்கள்

சொகுசு அதிகரிக்கும். அதனால் கல்வியில் அலட்சியம் கூடாது. அவசியக் கல்வித் தேவைக்காக மட்டும் குடும்பத்தாரை எதிர்பார்ப்பது நலம். பிற சக நண்பா்களுக்காக அதிகப்படியான வீண் சிரத்தைகளை கைவிடுவது நலம்.

விவசாயிகள்

பிற மதத்தவர்களின் நிலபுலன் விவசாய நிலங்கள் உங்கள் நிலங்களுக்கு அருகாமையில் இருப்பின் அதனை முழுத்தொகையையும் கொடுத்து வாங்கப் போகிற உன்னத காலம் ஆரம்பித்திருக்கிறது.

தொழிலதிபர்கள்

பெரிய பட்ஜெட் திட்டங்கள் நினைப்புகள் அயல்தேச அயல் மாநில வகைகளில் போட்டு வைத்திருப்பதில் சிறப்பு சுபிட்சம் வருகிற மார்கழி மாதத்திலிருந்து ஏற்படப் போகிறது.

அரசியல்வாதிகள்

குருப்பெயர்ச்சி தொடங்கிய பிறகு 68 தினங்கள் அமைதியாக கடத்தினால் தானாக எளிதாக கட்சி மேலிடத்திலிருந்து உயர்ப்பதவி பொறுப்புக்கான அழைப்பு கண்டிப்பாக வரும்.

பரிகாரம்

இந்த குருப்பெயர்ச்சி தொடங்கியதிலிருந்து நவக்கிரக ஸ்ரீகேதுவையும், செவ்வாய் பகவானையும் தொடர்ச்சியாக வழிபட்டு வலம் வரவும். திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமையில் உபவாசம் இருந்து ஸ்ரீசிவபெருமானை தொடர்ச்சியாக வழிபடவும்.

விருச்சிகம்

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)

விருச்சிக ராசி வாசகர்களே,

உங்கள் ராசிக்கு இந்த குருப் பெயர்ச்சிக்கு முன்னதாக குருபகவான் இதுவரை 2ம் இடத்தில் நின்றிருந்தாலும்,  3 ஆண்டு காலமாக உங்களுக்கு ஏழரையில் பாதக சனியும், குடும்ப சனியுமாக சனிபகவான் நின்றிருக்கிற நிலையும் அவரோடு கடந்த 2020 ஆகஸ்ட் மாத இறுதிவரை கேது கிரகம் சேர்ந்திருந்த நிலையாலும், குருபகவான் சுபஸ்தானத்தில் நின்று உங்களுக்கென செய்ய வேண்டிய முக்கியமான சுப விஷேச, நன்மை சுபிட்ச, அதிர்ஷ்ட, திருப்தி, நிம்மதி, சந்தோஷப் பலன்களை கொடுக்க முடியாமல் போனார். காரணம் இரண்டு பாவிகளோடு சேர்ந்திருந்த இந்த சுப கிரகம் முழு பாப தன்மைக்கு ஆளானது.

அதோடு இரண்டு சுப கிரகங்களோடு சேருகிற ஒரு பாப கிரகம் அதுவும் சுப கிரகமாக மாறிவிடும் என்பது விதி! ஆனால் இரண்டு பாவிகளோடு சேர்ந்த இந்த முழு சுபகிரகமான குரு பகவான் கடுமையான பாவியானார், அவர் நின்றிருந்தது ஆட்சி வீடு! அவருக்கு மூலத்திரிகோண வீடும் கூட இருந்தாலும் அவரால் சொந்த வீட்டில் அமர்ந்திருந்த போதும், பெரியதொரு நன்மையை எந்தவித தொல்லையும் இல்லாமல் செய்து கொடுக்க முடியாமல் போனது. இதற்கு முழுக்காரணம் ஏழரையின் கழிவிடை காலத்தில் நீங்கள் சிக்கிக் கொண்டதே!

இதுவெல்லாம் கடந்த கால கஷ்டங்கள் அல்லது ஆசை நிறைவேறாத சூழல் என்று கூட சொல்லிவிடலாம்.

இப்போதோ இவர் வருகிற நவம்பர் மாத 15ம் தேதி பெயர்ச்சியாகி, இரண்டாம் இடத்தை விட்டு, மூன்றாம் இடத்திற்கு அதாவது மகர ராசிக்குள் நீச குருவாக சென்று அமரப் போகிறார். அமரப் போகிற நட்சத்திரமோ உத்திராட நட்சத்திர இரண்டாவது பாதத்தில்! இதனால் பொதுவாக இவரது ஸ்தான பலன் சற்றே கடுமை என்று சொல்லப்பட்டாலும், உங்களது ராசிக்கு இவர் மிக  முக்கியமான கிரகம். பூர்வ புண்ணிய அதிபதி, சொத்து ஸ்தானாதிபதி, புத்திர ஸ்தான அதிபதி, சூட்சும பாக்கியாதி பதியும்கூட!

அதோடு உச்ச வீட்டையும் பார்க்கப் போகிறார். ராசிக்கு 7ம் இடத்தைப் பார்க்கப் போகிறார்.

அடுத்ததாக லாப ஸ்தானத்தை பார்க்கப் போகிறார். இந்த நிலைமைகளால் குருபகவான் பெயர்ச்சியானதிலிருந்து அடுத்து பெயர்ச்சியாவதற்குள் 70 சதவீத யோக அதிர்ஷ்ட சுப சவுகரிய சந்தோஷ பலன்களையே கொடுக்கப் போகிறார். பிரச்னைகள் எது ரூபமாகவும் இல்லை.

ராசிக்கு 10ம் இட அதிபனின் நட்சத்திர சாரத்தில் 80 தினங்களைத் தாண்டி அவர் சஞ்சரிக்கப் போவதால் வேண்டப்பட்ட அளவு உயர்வு பலன்களை முன்னேற்றகரமாக கொடுப்பதற்கான பாக்கியம் நிறையவே இருக்கிறது.

குறிப்பாக குருபகவான் மூன்றாம் இடத்தில் வந்து அமர்ந்த பிறகு, கேட்டை நட்சத்திரக்காரர்களுக்கு மிக அற்புதமான சுப சந்தோஷ உயர்வு பலன்கள் 66 தினங்கள் வரை களைகட்டப் போகிறது.

விரும்பிய விஷயங்களை எளிதாக அடைந்து கொள்ளலாம். இல்ல சிரமங்கள் அனைத்தும் தீர ஆரம்பிக்கும். வீட்டிற்கென ஆசைப்பட்ட உயர்தரப் பொருளை, ஆடம்பரப் பொருளை, மதிப்புமிக்க பொருளை வாங்கி சேர்த்துக் கொள்ளலாம். அதோடு வர வேண்டிய பாக்கி பணத்தொகைகள் கைக்கு எளிதாக வந்துவிடும். வீடு சீரமைக்கும் விஷயங்கள் கட்டடம் கட்டுகிற ஏற்பாடுகள் நல்லபடியாக நிறைவேறும். வாரிசுகளை அவர்கள் விருப்பப்பட்டதுமாதிரி எதிர்காலத்திற்கான வாழ்க்கையை அமைத்துக்கொடுக்கப் போகிறார்கள். அத்துடன் திடீர் திருமணம் இந்த நட்சத்திர இளம் இருபாலருக்கும் நடந்தேறுவதற்கான அதிர்ஷ்டங்கள் நிறையவே காத்திருக்கிறது.

வருகிற டிசம்பர் மாத 26ம் தேதிக்கு பிறகு ஏழரை முடிய இருப்பதால், மிகப்பெரிய தொல்லைகள் எல்லாம் ஒரு வழியாக தீர்ந்து சுபிட்ச காலம் ஆரம்பமாகப் போகிறது. அத்துடன் மூன்றாம் இடத்தில் தன்னுடைய வீட்டில் இடம் கொடுத்துள்ள சனிபகவான் டிசம்பர் இறுதியிலிருந்து குருவோடு சேர்ந்து கொள்ளப் போகிறார், இதனால் பல வித எண்ணற்ற உயர்வு மாற்றங்கள் கண்டிப்பாக கேட்டையினருக்கு நடக்கும். உத்தியோகம் பெரிய அளவில் திருப்தியை தரும். எவ்வளவு பெரிய பட்ஜெட், தொழில், வியாபாரம் என்றாலும் அருமையான லாபத்தோடு நகரும்.

விசாக நட்சத்திரத்தினருக்கு இந்த குருப்பெயர்ச்சி ஆனது தொட்டு 81 தினங்கள் மேலும் மேலும் வளர்ச்சி தான், சந்தோஷமான நகர்வுதான், தொட்டது அனைத்தும் துலங்கப் போகிறது தான், பணப்பற்றாக்குறை இல்லாமல் நகரப்போகிறது தான், பல ஆண்டுகளாக இவர்கள் எவருடைய துணையும், தொடர்புமின்றி, அனுசரனை யுமின்றி, பதுங்கி வாழ்வதுபோல் நடைபெற்ற நிலைமைகள் எல்லாம் தலைகீழாக மாறி எண்ணற்ற சந்தோஷ சுபிட்சங்கள் இந்த தினங்களுக்குள் கண்டிப்பாக நடக்கப் போகின்றது. அதோடு ஆரோக்கிய ரீதியான ஒட்டு மொத்த பயமும் விலகி, ஒரு வழியாக நிம்மதி சூழல் ஏற்பட இருக்கிறது.   மணவாழ்க்கை சிக்கல், விவகாரத்து விஷயங்கள், புத்திரபாக்கியம் இல்லாத மனசஞ்சலங்கள், கொடுக்கல் வாங்கலால் ஏற்பட்ட நாணய பங்கங்கள், சக ஊழியரிடத்தும், அதிகாரியிடத்தும் வீணாக பகைத்துக் கொண்டு உத்தியோக விடுப்பு போட்டு ஊதியத்தை இழந்த நிலைமை போன்றவற்றிற்கெல்லாம் இந்த குருப்பெயர்ச்சித்தான் வெகு சூப்பரான உயர்வு திருப்பங்களை இவர்களுக்கு தரப்போகிறது. ஆக இவர்கள் வருகிற 2021 மார்ச் மாத 26ம் தேதி வரை எந்த வித பின்னடைவுகளையும் சந்திக்காமல் உயர்வாகவே நகர்த்தப் போகிறார்கள் மாதங்களை.

அதன்பிறகு தான் இவர்கள் ஒவ்வொரு விஷயத்திலும் சர்வ சூதானமாக நடந்து கொள்ள வேண்டும். இருப்பினும் எவ்விதமான பெரிய பாதகமும் ஏற்பட வாய்ப்பு இல்லை. மற்றபடி இந்த நட்சத்திரக்காரர்களுக்கு குருப்பெயர்ச்சியாகி  23 தினங்களுக்குள் எதிர்பாராத பரிசு, பண, ஆதாயக் கமிஷன், உபரி லாப வரவுகள், திடீரென்று எந்த ரூபத்திலோ கிடைக்கப் போகிறது.

அனுஷ நட்சத்திரத்தினருக்கு இந்த குருப்பெயர்ச்சிக்கு முன்பே ஏகப்பட்ட இழுபறிகளும், தேவையற்ற அநாவசிய விரயங்களும் ஒவ்வொரு காரியத்திலும் ஏற்பட்டு அலைக்கழித்துக்கொண்டு தான் இருக்கிறது. காரணம் குருபகவான் இந்த நட்சத்திரத்திற்கு சரியான சாதக சஞ்சாரத்தில் நகரவில்லை. இது முற்றிலுமாக மாற தலைகீழான உயர்வு சந்தோஷங்களை நினைத்தப்படி அடைய வருகிற பங்குனி மாத எட்டாம் தேதியிலிருந்து தான் ஏகப்பட்ட உயர்வுகள் அடுக்கடுக்காக  ஏழரை மாதங்கள் வரை தொடரப்போகிறது.

இதற்கு முன்பாக குருப்பெயர்ச்சி ஆனப்பின் வருகிற பிப்ரவரி மாத 17ம் தேதி வரை அதிக பிரயாசைப்பட்டுக் கொண்டு தாம்துாம் நடவடிக்கைகளில் இறங்காமல் ஒவ்வொரு விஷயத்தையும் நேர்த்தியாக கண்ணும், கருத்துமாக வைத்து செயல்படுவது நலம். காரணம் அனுஷ நட்சத்திரத்திற்கு பகை நட்சத்திரமான சூரிய சாரத்தில் குருபகவான் சஞ்சரிக்கப் போவதால்தான் அதோடு சனிபகவானும் இப்போது சாதகமற்ற சூரியசாரத்தில் சஞ்சரித்துக்கொண்டிருப்பதால், மேலே சொன்ன காலம் வரை அனைத்து விஷயத்திலும் காரணமற்ற அலைக்கழிப்புதான் நீடிக்கும். விரயங்கள் கட்டுக்கடங்காமல் இருக்கும், ஒரு செலவை நினைத்து இறங்க, அது நூறு செலவில் இழுத்துவிடுவதற்கான வாய்ப்பு உண்டு. தொழில், வியாபார, சூழல்கள் எல்லாம் கொஞ்சம் மந்தநிலைமையிலேயேதான் நகரும். உத்தி யோக, பணிபொறுப்பு, இட சூழல்கள் இந்த காலம் மிக நெருக்கடியாகத்தான் இருக்கும்.

பொதுவாக விருச்சிக ராசிக்கு இந்த குருப்பெயர்ச்சி  85 சதவீத சுபிட்ச உயர்வு, சாதக பலன்களையே தரப்போகிறது. இல்லத்திற்குள் திடீரென்று சுபகாரிய திருமண வைபவம் களைகட்டப் போகிறது.  சொத்து-பத்து ரீதியான பிரச்னைகள் எதுவும் எந்த ரூபத்திலும் தலைதூக்காது.

இந்த குருப்பெயர்ச்சி காலக்கட்டத்திற்குள் வருகிற திங்கள், வெள்ளி, புதன்கிழமைகளிலெல்லாம் வெகு அருமையான உயர்வுகள் சந்தோஷ அதிர்ஷ்டங்கள், குடும்பத்திற்கான நிவர்த்திகள் அனைத்தும் ஏற்பட இருக்கிற குருப்பெயர்ச்சி இது!

அடுத்து இந்த ராசியினர் அனைவருமே வருகிற ஏப்ரல் மாத 12ம் தேதிக்கு பிறகு வெகு சூப்பராக அனைத்து சொந்தக் காரியங்களையும் அபரிமிதமாகவே பூர்த்தி செய்துகொள்ள இருக்கிறார்கள்.

வருகிற வைகாசி மற்றும் ஆனி மாதங்களில் மட்டும் கவனத்தோடு செயல்பட்டால் போதுமானது என்று இந்த குருப்பெயர்ச்சி விருச்சிக ராசிக்காரர்களுக்காக சொல்கிறது.

பெண்கள்:  

குருப்பெயர்ச்சி ஆனது தொட்டு இந்த ராசி விசாகம் மற்றும் கேட்டை நட்சத்திரப் பெண்கள், இளம் பெண்கள் அனைவரும் சர்வ சுபிட்சமான யோக சந்தோஷங்களை பெரிய அளவில் மனதிருப்தியோடு அடையப் போகிறார்கள்.

விவசாயிகள்: 

அனுஷத்தினர் 46 தினங்கள் தங்களது உற்பத்தி சார்ந்த அனைத்து விஷயத்திலும் நிதானமாக செயல்பட்டால் அதன்பிறகு வருகிற காலம் மிகப்பெரிய பொற்காலமாக மாறும்.

தொழிலதிபர்கள்: 

வருகிற ஜனவரிக்கு பிறகு எந்த விதமான பெரிய பட்ஜெட் விஷயமாக இருந்தாலும் அயல்மாநில, அயல்தேச தொழில் தொடக்கயோசனையாக இருந்தாலும், பெரிய அளவிலேயே வெற்றியைக் கொடுக்கப் போகிற உன்னதமான குருப்பெயர்ச்சி.

கவன மாதங்கள்

கார்த்திகை, மாசி, பங்குனி, ஆனி.

பரிகாரம்:

ஒவ்வொரு புதன்கிழமையும் அருகில் உள்ள நின்றகோல ஸ்ரீபெருமாள் தெய்வத்தை வழிபட்டு வரவும். அத்துடன் தினசரி அம்பாள் வழிபாட்டையும் வியாழக்கிழமை எமகண்ட நேரத்தில் ஸ்ரீ விநாயகருக்கு அபிஷேக ஆராதனை செய்து கொள்ளவும்.

தனுசு

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

தனுசு ராசி வாசகர்களே,

இதுவரை உங்களிடம் எவ்வளவு பெரிய சாமர்த்தியம், அளவுக்கு அதிகமான புத்திசாலித்தனம் கடுமையான உழைப்பு, காலநேரம் பார்க்காத அலைச்சல், எதிர்கால உயர்வு சம்பந்தமான நடவடிக்கைகள், குடும்பத்தை எப்பாடுபட்டாவது நிமிர்த்தி விட வேண்டும் என்ற வித மாபெரும் உறுதி எல்லாவற்றையும் ராசிக்குள் ஜென்ம சனியாக நீடிக்கிற சனிபகவானும், ராசிநாதனான குருவும் கடந்த 2020 செப்டம்பருக்குமுன் ராசிக்குள் சுழன்ற கேது கிரகமும் சேர்ந்து கொண்டு உங்களை கட்டிப்போட்டு சாட்டையால் அடிக்காத குறைதான். கடுமைகள் கொஞ்சம் நஞ்சமல்ல! நீங்கள் சந்திக்காத சங்கடங்கள் இல்லை, அனுபவிக்காத கவுரவக் குறைச்சல்கள் இல்லை, வாழ்க்கைத்துணையே சில நேரம் தேவையற்று உங்களை விமர்சனப்படுத்தி இருக்கலாம் அல்லது அவர் ஓரிடம், நீங்கள் ஓரிடம் என்று பிரிந்துகூட வாழ்ந்திருக்கலாம். அதோடு வாழ்க்கைத்துணை சம்பாதிக்கிற சம்பாத்தியம் உங்களது கைக்கு வராமல் போயிருக்கலாம்.

வழக்கு உங்களுக்கெதிராக மாறியிருக்கலாம், சிலருக்காக நீங்கள் அபராதம் கட்ட வேண்டிய சூழல் எதற்காகவோ ஏற்பட்டிருக்கலாம், தகுதி இல்லாத அதிகாரி உங்களை ஆட்டிப்படைத்து நிர்பந்தம் ஆக்கியிருக்கலாம், சக ஊழியர் மறைமுகமாக உங்களுக்கெதிராக செயல்பட்டு உத்தியோகம் மேலிடத்திற்கு பெட்டிசன் வரை போட்டிருக்கலாம், இல்லத்துக்குள் திருடு போயிருக்கலாம், வாரிசுகளால் மனநிம்மதி குறைந்திருக்கலாம் என்று இப்போது அதாவது இந்த குருப்பெயர்ச்சிக்கு முன்பு வரை நீங்கள் அனுபவித்து வருகிற அத்தனை பிரச்னைகள் என்று சொல்ல வேண்டி இருக்கிறது போகட்டும்!

அதோடு வருகிற 2020 டிசம்பர் மாத இரண்டாவது வாரத்திலிருந்து இன்னும் பெரிய பெரிய நம்பிக்கைகள் உங்களது மனதுக்குள் படுவெளிச்சமாக துளிர்விட ஆரம்பிக்கப் போகிறது. அதற்கு முன்பாக ராசிநாதனான குருபகவான் வருகிற 2020 நவம்பர் மாத 15ம் தேதி முதல் ராசிக்கு இரண்டாம் இடத்தில் வந்து அமரப்போகிறார். அதோடு இந்த ராசி உத்திராட நட்சத்திரக்காரர்களை தவிர மீதமுள்ள மூலம் மற்றும் பூராட நட்சத்திரக்காரர்களுக்கு வெகு தடாலடியான சுபயோக சுப பலன்கள் கட்டுக்கடங்காமல் அதிர்ஷ்டகரமாக நடந்தேறப் போகிறது.

அதோடு மிகப்பெரிய மனஉளைச்சல், சங்கடம், குடும்ப ரீதியான இடையூறுகள், வாரிசுகள் சம்பந்தப்பட்ட கவலைகள் அவசியம் தீர்த்து வைக்க வேண்டிய குடும்பக் கடமைகள் அனைத்தும் ஒழுங்காக நிறைவேறுவதற்கான உயர்வுகாலம் துவக்கமாகி இருக்கிறது.

இந்த குருப்பெயர்ச்சி நவம்பர் 15ம் தேதி முடிந்த பிறகு முதலில் உங்களது பணக்கஷ்டம் தீரப்போகிறது, குடும்பக் கஷ்டமும் விலகப் போகிறது, பெரிய தொகையாக பிறரிடம் போய் சிக்கியிருக்கிற தொகை தானாக வந்துவிட இருக்கிறது, லாப தட்டுப்பாடு விலகிவிடும். இல்லத்துக்குள் ஒற்றுமையும், இனிமையும் அதிகரிக்கப் போகிறது. உங்களது அதிகாரம் கொடிகட்டி பறக்கப் போகிறது. வாக்கு நாணயத்தால் முடியாத காரியங்களை எல்லாம் முடித்துவிட இருக்கிறீர்கள். அநாவசிய நபர்கள் உங்களை விட்டு தூரம் விலக இருக்கிறார்கள். மதிக்காத உறவை தைரியமாக இனி என் வாசல்படி மிதிக்க வேண்டாம் என்ற கட்டளையை கடந்த அக்டோபர் மாதமே போட்டிருப்பீர்கள். அத்துடன் சிறுகடன்களால் பட்ட அவமதிப்பும், மரியாதை குறைச்சலும் இனி இல்லை. தகுதியற்ற நபர்களிடம் இனி கடன் படக்கூடாது என்ற முடிவை ஸ்திரமாக எடுக்கப் போகிறீர்கள்.

ஆரோக்கிய ரீதியாக பலவித வைத்தியம் செய்து உங்களை காப்பாற்றிக்கொண்டு மனநிம்மதியின்றி வாழ்ந்துக் கொண்டிருக்கிற சூழல்கள் சுத்தமாக மாறிவிட இருக்கிறது. உத்திராடம் நட்சத்திரத்தினர் கடந்த நான்கைந்து மாதங்களுக்கு முன்பு கை, கால்வாதம், முகவாதம், இதய அறுவைசிகிச்சை மற்றும் மிகப்பெரிய விபத்து பதுங்கிவாழ வேண்டிய சூழல் என்ற பலவித கடுமையான கடுமைகளுக்கு ஆளாகி இருக்கலாம். அந்த நிலைமை இனிமேல் இல்லை.

இவர்களுக்கு வருகிற தை மாத இறுதிவாரத்திலிருந்து ஏகப்பட்ட சுபிட்ச உயர்வு பலன்கள் ஒவ்வொன்றாக கைக்கூட ஆரம்பிக்கும். 

மூலம் நட்சத்திரத்தினருக்கு பலவித தடைகளும் வருகிற 2020 டிசம்பர் 6ம் தேதிக்கு பிறகுதான் ஒரு வழியாக விலக ஆரம்பிக்கும்.

இதற்கிடையில் பூராட நட்சத்திரத்தினருக்கு கடந்த 2020 ஜூலை மாத 16ம் தேதியிலிருந்தே ஓரளவு நிம்மதியாகவே நகர்ந்து கொண்டிருக்கும்.

கடன் விஷயங்களும், வம்பு, வழக்கு, பஞ்சாயத்து, கோர்ட், போலீஸ் ரீதியான தொல்லைகளுக்கும் ஒரு வழியாக சிறப்பு தீர்வு கிடைக்கப் போகிறது. வாரிசுகள் ஆசைப்பட்டது மாதிரி எதிர்காலத்திற்கான நிரந்தரத்தை அவர்களுக்கென ஏற்படுத்திக் கொடுத்து விட இருக்கிறீர்கள். இல்லத்துக்குள் வருகிற 3½ மாதத்திற்குள் இரண்டு, மூன்று சுபகாரிய நிகழ்வுகள் நடக்கப் போகின்றன. குலதெய்வ பிரார்த்தனையை நிறைவேற்றி விடுவீர்கள், இல்லத்திற்குள் தெய்வங்கள் குடிகொள்ளும் நேரம் வந்துவிட்டது.

இந்த ராசியினருக்கு குறிப்பாக மூல நட்சத்திரத்தினருக்கு சரியில்லாத திசையான செவ்வாய் மகாதிசை இப்போது நடப்பில் இருப்பவர்கள் கொஞ்சம் கவனமாகத்தான் ஓட்ட வேண்டும் இந்த குருப்பெயர்ச்சியை!

திருமணமே வேண்டாம் என்ற முடிவுக்கும் வர இருக்கிறார்கள். அத்துடன் இந்த நட்சத்திர வயது கடந்த நேயர்கள் தங்களது ஆரோக்கிய விஷயத்தில் மிக கவனமாக நகர்த்த வேண்டும்.

குறிப்பாக மூல நட்சத்திர 3வது பாதத்தில் இருப்பவர்கள் ஆயுள், ஆரோக்கிய விஷயங்களிலும் அறுவை சிகிச்சை சார்பானவற்றிலும் கவனமுடன் இருக்க வேண்டும்.

பூராடத்தினர் வருகிற கார்த்திகை மாத 20ம் தேதிக்கு பிறகு மிகப் பெரிய உயர்வு பலன்களை, அதிர்ஷ்டங்களை, திடீர் பெரிய தொகைகளை அடையப் போகிறார்கள்.

மூல நட்சத்திரத்தினர் மண், மனை, கட்டட, பூமி சம்பந்தப்பட்ட லாப அதிர்ஷ்டங்களை பெரிய அளவில் சந்திக்க இருக்கிறார்கள். அத்துடன் இந்த ராசி மூல நட்சத்திர ச 23 முதல் 27 வயது வரை உள்ள இளம்பெண்கள் தங்களது கவுரவ சுயமரியாதை விஷயங்களிலும், பிற நட்பு விஷயங்களிலும் உத்தியோக இடமானாலும் சரி அல்லது கல்வி நிறுவனம் அதுவும் அல்லாமல் சொந்த இருப்பிடத்திலும் இருந்தாலும் சரி கவனமாக இருக்கணும். எவ்வளவு காலம் எனில் இந்த குருப்பெயர்ச்சி ஆனது தொட்டு 106 தினங்கள் வரை!

தனுசு ராசியினர் வாகன வேகத்தில் மிகவும் சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இவர்கள் விழிப்போடு சாலையில் வாகனத்தை இயக்கினாலும் எதிரே வருபவரின் நேரம், காலத்தை பொறுத்தது இவர்களுக்கான நல்லகாலம் என்பதால் கூடுமானவரை மோட்டார் வாகனத்தை கையாள்வதை குறைக்கப் பார்க்க வேண்டும். அவசியமெனில் மட்டும் நடைமுறைப்படுத்திக் கொள்வது நலம். அதோடு உயர்க்கல்வி முடித்துள்ள அரசு உத்தி யோகத்திற்கு தகுதி படைத்துள்ள இந்த ராசி இளைஞர்களுக்கு உத்தியோகம் கிடைத்துவிடும்.

மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி ஆன உடன் முதலில் பூராடத்திற்கும்,

அடுத்ததாக மூல நட்சத்திரத்திற்கும்,

மூன்றாவதாக உத்திராடத்திற்கும் சுபிட்ச பலன்களை அள்ளி வழங்கப் போகிற குருப்பெயர்ச்சி இது!

மேலும் திருமணம் சுபகாரிய சுபகாரியங்கள் ஈடேறிவிடும். புத்திரபாக்கிய கோளாறுகள் நீங்கி, அதிர்ஷ்ட புத்திர பாக்கிய யோகம் வாய்த்துவிடும். பணம், காசுக்கு குறைவு ஏற்படாமல் குடும்ப மகிழ்ச்சி தாம்துாம்வென அதிகரிக்கப் போகிறது.

மற்றபடி தனுசு ராசிக்கு வருகிற மாசி மாதத்தில் அல்லது ஆனி் மாதத்தில் மிகப்பெரிய அதிர்ஷ்டம் ஒன்று அடிக்கப் போகிறது. மொத்தத்தில்  5½ ஆண்டுகளுக்கு பிறகு எண்ணற்ற உயர்வு, சந்தோஷ, அதிர்ஷ்ட மாற்றங்களை தனிபட்ட வகையில் தனுசு ராசிக்கு கொடுக்க வந்திருக்கிற குருப்பெயர்ச்சி இது!

பெண்கள்: 

மனதுக்குள்ளேயே போட்டு குமுறிக் கொண்டிருக்கிற பலவித பிரச்னைகளின் தாக்கங்களும் ஒரு வழியாக விடுபட்டு சந்தோஷம் கரைபுரளப் போகிறது. உத்திராட நட்சத்திர வயது கடந்த பெண்மணிகள் குருப்பெயர்ச்சிக்கு பிறகு 55 தினங்கள் கவனமாக இருக்கணும்.

விவசாயிகள்: 

குருப் பெயர்ச்சி ஆனது தொட்டு 19 தினங்கள் கடந்த பிறகு ஏகப்பட்ட உயர்வு, சந்தோஷ, லாப நிகழ்வுகள் தங்களது துறை சார்ந்த விஷயங்களில் ஏற்பட இருக்கிறது.

மாணவர்கள்: 

கல்வி ரீதியாக நீடிக்கும் அத்தனை கவலைகளுக்கும், மன இறுக்கத்திற்கும், கல்வித்தேவை பூர்த்தி ஆகாததற்கு தீர்வும், சுபிட்ச காலமும் தொடங்கிவிட்டது.

தொழிலதிபர்கள்: 

இப்போது நீடித்து வருகிற உலக ரீதியான சங்கட தடை இடையூறுகளையெல்லாம் உடைத்துக்கொண்டு, புதியதொரு செழிப்புப் பாதையில் உங்களது நிர்வாகங்களை மாற்றப் போகிறீர்கள்.

அரசியல்வாதிகள்:  

2021, மே மாத 10ம் தேதி வரை நிதானமாக செயல்படுவீர்களேயானால் சட்டென்று மிகப் பெரிய சந்தோஷ உயர்வு சம்பவம் ஒன்று மிக அருமையாக ஏற்பட்டுவிடும்.

கவன மாதங்கள்

மார்கழி, தை, ஆனி, பங்குனி, சித்திரை.

பரிகாரம்:

நவக்கிரக செவ்வாய் பகவானை உங்களது பிறந்த கிழமையிலோ அல்லது ஜென்ம நட்சத்திரத்திலோ அபிஷேக ஆராதனைகள் செய்து அர்ச்சனை செய்து வழிபடவும். ஞாயிற்றுக்கிழமைகளில் குலதெய்வப் பிரார்த்தனை குடும்பத்தாரோடு சென்று செய்யவும். வியாழக்கிழமைகளில் ஸ்ரீசனிபகவான் தரிசனம் செய்யவும்.

மகரம்

மகரம் (உத்திராடம் 2, 3, 4ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1, 2ம் பாதம்)

மகரம் ராசி வாசகர்களே,

இந்த கிரகப்பெயர்ச்சி உங்கள் ராசிக்கு நல்லது செய்ய பெயர்ந்தால், அடுத்த கிரகப்பெயர்ச்சி உங்களை கெடுப்பதற்கென்றே பெயர்ச்சியாகிறது. அடுத்த இரண்டு கிரகப் பெயர்ச்சி ஏற்பட்டு ஒரு நல்லது செய்ய வந்தால், ஒரு முக்கியமான கிரகப்பெயர்ச்சியாகி உங்களது ஒட்டுமொத்த நினைப்புகளையுமே உடைத்து போட்டு விடுகிறது. ஆக ஒன்று போனால் ஒன்று என்றபடி ஒவ்வொரு இக்கட்டாக  2016ம் ஆண்டு முதல் சந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள். இந்த நிலைமைக்கெல்லாம் குரு ப்பெயர்ச்சி ஆன பிறகு மிக ஒழுங்கான உயர்வுகளோடு புதிய அதிர்ஷ்ட யோகம் ஆரம்பமாகப் போகிறது!

ஏற்கனவே விரய கேது! விரய சனி! விரய குரு! என்றபடி  நடைப்பெற்று உங்களை காரண காரியமற்று அசைத்துப்போட்டு, கன்னாபின்னா இடையூறு களுக்கெல்லாம் ஆளாக்கி, உங்களது ஒரு பணிக்காக நீங்கள் நம்பியிருந்தவர்கள் உங்களை விட்டு விலகிப்போய், சம்பாதிக்கிற பணமெல்லாம் அநாவசியத்துக்காக விரயமாகி, உறவுகளால் பாதிக்கப்பட்டு, வாழ்க்கைத்துணையால் மனசஞ்சலத்திற்கு உள்ளாகி, வாரிசுகளுக்காக அரும்பாடுபட்டு இதுவரை உங்களை கீழே தள்ளியும் விடாமல், நினைத்த மாதிரி உயர்வையும் கொடுக்காமல் திரிசங்கு சொர்க்கமாக உங்களை அனைத்து கிரகங்களுமே அல்லாட வைத்துக் கொண்டிருக்கின்றன.

ஆக எப்படி பார்த்தாலும் பல்லியிடம் தப்பித்து, முதலையிடம் மாட்டிக்கொண்டதாக கிரகங்கள் உங்களை விட்டேனா பார் என்றவித நிர்ப்பந்தத்திற்கு தான் அடிக்கடி ஆளாக்கிப் பார்க்கின்றன. இருந்தாலும் அசருவீர்களா நீங்கள்! நிலத்திலும், நீரிலும் வாழ பழகத் தெரிந்தவர் அல்லவா உங்களது ராசி!

அப்படி பார்க்கையில் 7 மாத காலமாக உங்கள் ராசிக்கு பாதக அதிபனான செவ்வாய்க்கிரகம் ஒரு சரியான சஞ்சாரத்தில் உங்கள் ராசிக்கு இல்லாதபடியால் அதனால் ஒவ்வொரு விஷயத்திலும் தொய்வு, தோல்வி, இடையூறு, இழுபறி, விரயம், நஷ்டம், பாதிப்பு, விமர்சனம் என்றபடி போய்க்கொண்டிருக்கிறது என்பதை இந்த ராசியினர் எவருமே கண்டு கொள்ளவில்லை என்பதுதான் உண்மை!

மகர ராசியினருக்கு மறைமுக சூட்சும ராஜயோக கிரகமான கேது பகவான் உச்ச வீட்டில் அதாவது விருச்சிக ராசியான லாப வீட்டில் நின்று ஆபத்பாந்தவனாக உங்களது எல்லா ஆபத்துகளையும் விரட்டி அடித்துக்கொண்டிருக்கிறார்.

கடந்த செப்டம்பர் 2020 முதல் வாரத்திலிருந்து! இருந்தாலும் வருகிற நவம்பர் மாத 15ம் தேதி முதல் ராசிக்குள் நுழைகிற குருபகவான் ஜென்மகுரு பதவியை ஏற்றுக்கொண்டாலும், உங்கள் ராசிக்கு கெட்டவர், விரயாதிபதி, தைரியாதிபதி, வெற்றி வீரிய, காரிய ஜெய பராக்கிரம ஸ்தானத்திற்கு சொந்தக்காரர் என்பதால் நல்லபலனே இனி!

ஆக ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம், மகர, கும்ப ராசிகளுக்கு கெட்டவரான இவர் எப்போதெல்லாம் மகர ராசியில் அமர்ந்து கெட்டுப்போகிறாரோ, இதற்கான பெயர்ச்சி எப்பொழுது நடைபெறுகிறதோ, அப்பொழுதெல்லாம் மகர ராசியினர் அனைவருக்குமே வெகு அற்புதமான சந்தோஷ, மகிழ்ச்சி, இனிமை பலன்கள் அதிகரிக்க ஆரம்பித்துவிடும். மாற்றங்கள் நிறையவே நன்மைகரமாக செழிப்பாக கிடைக்க ஆரம்பித்துவிடும். ஆரோக்கிய ரீதியான பயமெல்லாம் ஒரு வழியாக தீர்ந்துவிடும்.

குடும்ப இனிமையும், ஒற்றுமையும், குதுாகலமும், சர்வ சாதாரணமாக உயர்ந்து கொண்டிருக்கும். இல்லத்தார் அனைவரும் தக்க மதிப்புக் கொடுக்க தயங்க மாட்டார்கள். வீண் அவஸ்தைகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி ஏற்பட்டுவிடும். அத்துடன் பணம், காசு ஏகப்பட்ட அளவில் புரளப் போகின்றன. பகைகள் மாறிவிடும்.

எதிர்ப்புகள் விலகிவிடும். போட்டி பொறாமைகள் ஒழிந்துவிடும். பக்கத்து வீட்டாரால் ஏற்பட்டிருக்கிற அநாவசிய வம்பு தும்பு சச்சரவுகள் தீர்ந்துவிடும். நீடித்த வழக்குகளுக்கு முடிவு கிடைக்கும். சொத்தைத்தாண்டி விரயம் செய்து வருகிற வழக்குகளை விட்டு வெளிவரப் போகிறீர்கள். உங்களது உரிமை பறிக்கப்பட்டிருப்பின் எதுசார்பாகவோ அதற்கு தக்க தீர்வு கிடைக்கப்போகிற குருப்பெயர்ச்சி இது!

திருவோண நட்சத்திர இளம் இருபாலருக்கும் திருமணக்கனவும், கல்வி தகுதிக்கேற்ற அரசு உத்தி யோகக்கனவும் ஒரே நேரத்தில் பலிதமாகக்கூடிய அருமையான பெயர்ச்சி இது. அத்துடன் இவர்கள் ஏமாற்றமடைந்த ஒரு விஷயத்திற்கு பெரிய அளவு நன்மைத் தீர்வு கிடைக்கப் போகிறது.

அதோடு இந்த நட்சத்திர இளம் தம்பதியருக்கு வெகு கால புத்திர பாக்கிய தடையும், ஏக்கமும் தீரப் போகிறது. சொத்து வாங்குகிற யோகமும் சித்திக்கப் போகிறது. தொழில், வியாபார, நிர்வாக, பட்ஜெட் விஷயங்களில் எண்ணற்ற லாப உயர்வுகள் கிடைக்கப் போகிற பெயர்ச்சி இது! மேலும் இந்த நட்சத்திரத்தினர் சமீபத்தில் திருமணம் முடித்து மணவாழ்க்கை சிக்கலாகிப் போனதற்கு இனிமேல் தான்  தீர்வை நினைத்த மாதிரி கொடுக்கப் போகிற குருப்பெயர்ச்சி இது!

அவிட்ட நட்சத்திரக்காரர்களுக்கு மிக பலமான நட்சத்திரத்திலும், பரம, மைத்ர, தனசம்பத்து தாரையில் குருபகவான் இறங்கி சஞ்சரிக்கப் போவதால் நிறையவே செழிப்புகளும், சந்தோஷங்களும் உயர்வுகளும் இவர்களுக்கென காத்திருக்கிறது. பணப்புழக்கம் அதிகரிக்கும், ஆரோக்கிய ரீதியாக எந்த வித தொந்தரவும், தொல்லையும் ஏற்படாது, உறவுகள் புதிய மரியாதை கொடுக்கப் போகிறது. சகோதர, சகோதரிகள் எது சார்பாகவோ முறைத்துக்கொண்டு விலகியிருப்பின் மீண்டும் வந்து இணைந்து உறவாடப் போகிறார்கள்.

இல்லத்துக்குள் வயது கடந்தவர்களின் ஆயுள் ஆரோக்கிய சிக்கல்கள் ஒரு வழியாக ஒன்றும் இல்லை என்பதாக அமைதியாகிவிடும். கொடுக்கல் வாங்கல், கடன், கண்ணி சமாச்சாரங்கள் எல்லாவற்றுக்கும் ஒரு வழியாக நல்லதீர்வு கிடைக்கப் போகிற குருப்பெயர்ச்சி இது!

புதிய உத்தியோக முயற்சிகளில் வருகிற பிப்ரவரி மாத 22ம் தேதிக்குள் பெரிய அளவு பலிதம் ஏற்பட்டுவிடும். மேலும் இவர்கள் 16 மாதங்களாக மனதளவில் வைத்திருக்கிற மிகப்பெரிய ஆசை ஒன்றும் நிறைவேறிவிட இருக்கின்றது. இல்ல விஸ்தீரணம் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகள் ஒழுங்காகி நிறைவேறிவிடும். புதிய மண், மனை, கட்டடம் வாங்குவதற்கான யோகங்கள் கைகூடி இருக்கிறது.

உத்திராடத்தினர் மட்டும் வருகிற 2021 மார்ச் மாத 16ம் தேதி வரை இந்த குருப்பெயர்ச்சி ஆனதிலிருந்து சர்வ கவனமாக செயல்படணும். வண்டி வாகனத்தில் கவனம் தேவை. கூட்டுப்பயணம் ஆகாது. சக நண்பர்களோடு வெகு துாரப் பயணத்திற்கு ஆளாகும்போது அவசியப்பட்டால் மட்டும் ஈடுபடுவது நலம். இருந்தாலும் எந்த ஒரு பெரிய பாதகத்தையும் இவர்கள் அடைந்து விட மாட்டார்கள்.  எனவே எந்த ஒரு பெரிய முயற்சி மற்றும் முதலீடு பட்ஜெட் விஷயங்களில் இறங்கினாலும் வருகிற 2021 ஏப்ரல் 2ம் தேதிக்கு பிறகே இந்த நட்சத்திரத்தினருக்கு மிகப்பெரிய அனுகூல வெகுமானங்கள் கிடைக்கப் போகிறது.

இவர்களுக்கு எல்லா காலக்கட்டத்திலேயுமே ஐப்பசி, கார்த்திகை மற்றும் பங்குனி மாதங்கள் வெகு அற்புதமான உயர்வு திருப்பங்களை கொடுக்கக்கூடியவை என்பதால், வரப்போகிற இந்த குருப்பெயர்ச்சி காலத்திற்குள் மேற்சொன்ன மாதங்கள் வரும்போது அதீஅற்புதமான சிறப்பு சுபிட்சப் பலன்கள் நடைபெறப் போகின்றன.

அத்துடன் இந்த காலக்கட்டத்திற்குள் வருகிற வெள்ளி மற்றும் புதன்கிழமைகளிளெல்லாம் சுபிட்சமான மனஇனிமை, உயர்வுகள் அதிகரிக்கப் போகிறது. சனிக்கிழமை வரும்போதெல்லாம் சற்றே கவனப்படுத்திக் கொள்ள வேண்டும்.

மேலும் புதிய ஆபரண, வாகன, நிலபுலன் சேர்க்கையெல்லாம் அடுத்து வருகிற குருப்பெயர்ச்சிக்குள் பெரிய அளவிலேயே கிடைத்து விட இருக்கிறது.

பெண்கள்

உத்திராட நட்சத்திரத்தினர் மட்டும் குருப்பெயர்ச்சி ஆனது தொட்டு 41 தினங்கள் இல்லப் பணிகளிலும், உத்தியோக இடத்திலும், சக நெருக்கமான நண்பர்களிடத்தும், மூத்த சகோதரிகளிடத்தும் கவனமாக வைத்துக் கொள்ளணும்.

தொழிலதிபர்கள்

சக தொழில் கூட்டாளிகளின் விருந்து கேளிக்கைகளில் அநாவசிய வாக்குறுதிகளை தருவது குறித்து மிகுந்த யோசனை தேவை.

மாணவர்கள்

இவர்களின் கல்வி நலன் பலமடங்கு உயரப் போகிறது. குறிப்பாக அவிட்டத்தினர் தாங்கள் விருப்பப்பட்ட நுணுக்கக் கல்விக்காக அதிக சிரத்தை எடுத்து தங்களை, தங்கள் திறமையை எப்படிப்பட்டவர் என்று நிரூபிக்கப் போகிறார்கள்.

கவன மாதங்கள்

தை, மாசி, ஆடி, ஆவணி.

பரிகாரம்:

ஒவ்வொரு வியாழக்கிழமையும் ஸ்ரீசுப்ரமணியருக்கு அபிஷேக அர்ச்சனை செய்து வழிபடவும், ஸ்ரீமகாலெட்சுமியை வெள்ளிக்கிழமைகளில் அர்ச்சனை செய்து வழிபட்டுக்கொண்டிருக்கவும். சனிக்கிழமைகளில் தொடர்ந்து நவக்கிரக வலம் வரவும்.

கும்பம்

கும்பம் (அவிட்டம் 3, 4ம் பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3ம் பாதம்)

கும்பம் ராசி வாசகர்களே,

வாசகர்களே! ஒவ்வொரு நெருக்கடியையும், வெகு லாவகமாக தாண்டித்தாண்டி 2017ம் ஆண்டிலிருந்து உங்களுக்குத் தேவைப்படுகிற முயற்சிக்கிற விஷயங்கள் எல்லாம் நல்லபடியாக முடிய வேண்டும் என்பதற்காக வேண்டாத தெய்வம் இல்லை, ஏறாத கோயிலில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இருந்தாலும், ஏதோ சொற்ப அளவு உங்கள் ராசிக்கு லாப ராசியில் சனிபகவான் வந்ததிலிருந்து ஏதோ உங்களது காலம் கொஞ்சம் நல்லபடியாக நகர்ந்து கொண்டிருக்கலாம். இருந்தாலும், எது நடந்தால் சந்தோஷமோ அந்த விஷயம் மட்டும் இன்னும் ஒழுங்காக ஈடேறாமல் இருப்பது குறித்து மாபெரும் கவலையில்தான் இப்போது இருப்பீர்கள் என்றே சொல்ல வேண்டும். கும்ப ராசிக்கு 2017-18லிருந்து கேதுவும், சனியும்கூடி இவர்களுடன் குருபகவானும் சேர்ந்துக்கொண்டு நல்லதுகளை தருவதுபோல பாவ்லா காட்டிக்கொண்டு வந்தார்கள்.

அதேபோல கேது மட்டும் 11ம் இடத்தில் நிற்கும்போது இதைவிட துாக்கலான நன்மைகள் ஏற்பட்டுவிடும். அதிரடியான பணத்தொகை வரவுகளும் சேர்ந்தாற்போல கிடைத்துவிடும். ஆனால் கிடைத்திருக்காது, காரணம் செவ்வாயின் குணத்துவங்களைக் கொண்ட கேது கிரகமும், சனியும் ஒரு ராசியில் இணையும்போது சிலவித அநாவசியப் போராட்டங்களை சம்பந்தமில்லாமல் கொடுத்து விடுவார்கள்.

அதேபோல குருபகவான் மட்டும் 11ம் இடத்தில் நிற்கிறபட்சத்தில் அவருடைய சுபிட்ச பலன்கள் ஓரளவு சொற்ப அளவாவது கிடைத்துவிடும். ஆனால் இந்த 3 கிரகங்களுமே ஒரே ராசியில் நின்று கொண்டு அவர் கொடுப்பார், இவர் கொடுப்பார் என்றபடி எல்லா கிரகமும் உங்களை ஏமாற்றிக் கொண்டிருந்தன.

கும்ப ராசிக்கு தன லாப அதிபதியான குருகிரகம் ஒரு வகையில் பாவி! அதே நேரம் ஒரு வகையில் குடும்பஸ்தானாதிபதி என்ற வகையிலும், இல்லற ஸ்தான அதிபதி என்ற வகையிலும் இவர் பாதி சுபராகிறார். எனவே இவர் இப்போது சகட யோக அமைப்புக்கும், நீச கதிக்கும் சென்று சனிபகவானின் வீட்டில் அமரப்போவது உங்களது நினைப்பு, திட்டம், முயற்சி, முதலீடு சார்ந்த விஷயங்கள், தொழில், வியாபார, நிலைமைகள் சம்பந்தமான அத்தனை விஷயங்களும் 75 சதவீதம் நல்லபடியாகவே கைகூடி உங்களை உயர்த்தப்போகிறது.

அதோடு 4ம் இடத்தில் நிற்கிற ராகுவை, குருபகவான் பெயர்ச்சியான பிறகு 5வது பார்வையாக பார்க்கப் போகிறார். இதுவல்லாமல் ராசிக்கு 8ம் இடமும், இவரது பார்வைக்கு உள்ளாகிறது. அடுத்து ராசிக்கு 6ம் இடத்தை நோட்டமிடப் போகிறார். இதனால் எந்த வித இடையூறுகள், அநாவசியமாக உங்கள் பக்கம் நெருங்கினாலும், அதனையெல்லாம் தவிடுபொடியாக்கி விடுகிற அற்புதமான சூழலைத்தான் இந்த பெயர்ச்சி உண்டாக்கப் போகிறது.

கும்ப ராசியில் உள்ள மூன்று நட்சத்திரக்காரர்களில் பனிரண்டாம் இடத்திற்கு குருபகவான் வந்து நின்றாலும், முதலில் அவிட்ட நட்சத்திரக்காரர்களுக்கும் அடுத்ததாக பூரட்டாதியினருக்கும்தான் அற்புதமான சுப உயர்வு பலன்களை அதிர்ஷ்டகரமான யோகத்தோடு கொடுக்கப் போகிறார்.

குடும்ப நிலைமைகளில் அனைத்து சந்தோஷமும் ஒரு சேர கிடைக்கப் போகிற காலக்கட்டம் உதயமாகியிருக்கிறது. அதோடு சதய நட்சத்திரக்காரர்களுக்கு வருகிற தமிழ் மாதமான பங்குனியிலிருந்துதான் 12ம் இடத்தில் நிற்கப் போகிற இவரால் பெரியயோக சுபிட்சப் பலன்களை செய்ய முடியும். இருந்தாலும் இவர்களுக்கு சாதக தசாபுத்தி பலன்கள் கிரக பல ரீதியாக அவரவர் லக்ன பிரகாரம் நடப்பிலிருப்பின், இந்த குருப்பெயர்ச்சியால் பெரியதொரு பிரச்னை எதுவும் நெருங்கிவிடாது, ஏற்பட்டுவிடாது.

மேலும் ஒவ்வொரு உயர்வாக மெல்ல மெல்ல கிடைக்கப் போகிற குருப்பெயர்ச்சிதான். குடும்பத்துக்குள் இனிமை இரட்டையாக தாண்டவமாட இருக்கிறது. பலவித தொந்தரவுகளிலிருந்தும் சட்டென்று வெளி வந்துவிடலாம், ஆரோக்கிய குறைச்சல் ஏற்படாது.

மேலும் சுப விரயம் செய்யக்கூடிய நேரம் வாய்த்துவிட்டது. அதனால் திருமண சுபக்கடமைகளை முடிக்க வேண்டிய வாரிசுகளுக்கு விரைந்து முயற்சி செய்தால் மிக விமரிசையாக சுப வைபவங்களை நடத்திமுடிக்கலாம்.

அடுத்ததாக வீடு வாசல், நிலபுலன், மண், மனை பிளாட், கட்டடம் போன்றவைகளை கடந்த செப்டம்பர் மாதமே குரு பகவான் இந்த ராசி பூரட்டாதி மற்றும் அவிட்ட நட்சத்திரக்காரர்களுக்கு தன்னுடைய சுப தாராபலன் அடிப்படையில் வெகு எளிதாக செய்து கொடுத்திருப்பார். இதைப்போலவே இன்னும் இவர் பெயர்ச்சியான பிறகு 3½ மாத காலம் இந்த நட்சத்திரக்காரர்களுக்கு அபரிமிதமாக வழங்கப் போகிறார். உத்தியோக நிலைமைகள் உயர்வாக நீடிக்கும். ஊதியப் பிரச்னை வராது, வந்தாலும் உடனடியாக தீர்ந்துவிடும். அத்துடன் பல மாத பென்ஷன் நிலுவைகளால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிற இந்த ராசி வயது கடந்த அன்பர்களுக்கு திடீரென்று ஒரே தொகையாக வரப்போகிற யோகக் காலம் ஆரம்பித்திருக்கிறது

குடும்ப இனிமை நன்றாக இருக்கும். ஓய்வு அதிகரிக்கும். துாக்கக்குறைவு ஏற்படாது. கடன்கண்ணியால் அவதி இல்லை. வம்பு வழக்கு சார்பான துரத்தல்கள் இல்லை. வீடு, கட்டட, இருப்பிட விஸ்தீரண விரய செலவுகள் சுபமாக ஆகிக்கொண்டிருக்கும்.

வாரிசுகளின் கனவுகளை பூர்த்தி செய்யலாம், அவர்களது எதிர்கால உயர்வுக்கான விஷயங்களை நல்லபடியாக நிறைவேற்றி வைக்கலாம். இப்போது வாரிசுகள் உங்களை விட்டு வெகு துாரம் பிரிந்து சென்று வசிக்கக்கூடிய சூழல்தான் நிலவுகிறது. பங்கு-பங்காளி வகை சச்சரவுகள் பங்கு பாக பிரச்னைகள், சொத்து உரிமை கோளாறுகள் எல்லாவற்றுக்கும் ஒரு வழியாக சிறப்புத்தீர்வு கிடைக்கப் போகிற யோக நேரம் உருவாகியிருக்கிறது.

அத்துடன் திடீரென்று பெரியத்தொகையாக கைகளில் புரளக்கூடிய யோகமும் இருக்கிறது. வாக்கு நாணயத்தை நல்லப்படியாக காப்பாற்றி விடலாம். யாருக்காகவோ நீங்கள் உதவி செய்த தொகை திடீரென்று வந்து சேர இருக்கிறது. அதோடு வருகிற மார்கழி, தை, சித்திரை மாதங்கள் நினைவில் வைத்துக்கொள்ளும்படியான அற்புத மாதங்களாக மிகப்பெரிய உயர்வுகளை கொடுக்கப் போகிறது.

இந்த ராசி சதய நட்சத்திர இளம் இருபாலரும் குருப் பெயர்ச்சியானது தொட்டு  78 தினங்கள் தங்கள் நட்பு இருபாலரிடத்திலும் சர்வ கவனமாக தங்களது வட்டத்தில் செயல்பட வேண்டியது அவசியம். அத்துடன் இந்த நட்சத்திர இளைஞர்கள் வண்டி வாகன விஷயங்களில் கவனமாக செயல்படணும் குறிப்பாக வருகிற மாசி மாதத்தில்!

மொத்தத்தில் இந்த குருப் பெயர்ச்சி யோகமாகவே கும்பராசிக்கு இருக்கப்போகிறது. இந்த ராசியினர் 37 வயதிலிருந்து 45 வயதுக்குள் இருப்பின் அவர்களுக்கு வரப்போகிற சனிப்பெயர்ச்சி மிக அற்புதமான பெயர்ச்சியாக இருக்கப் போவதால் அதற்கான யோக துவக்கத்தையும் கொடுப்பதற்கே இந்த குருப்பெயர்ச்சி அற்புதமாக வந்திருக்கிறது. 

பெண்கள்:  

குடும்ப ரீதியாக தீர்க்க முடியாத சிக்கல்களெல்லாம் ஒரு வழியாக முடிவுக்கு வரப்போகிறது. அத்துடன் சதய நட்சத்திர இல்லத்தரசிகள் குருப்பெயர்ச்சியான பிறகு  21 தினங்கள் இல்ல கடுமையான பணிகளில் கவனமாக இருக்கணும். அதன்பிறகு ஓஹோவென அதிர்ஷ்டகரமாகவே இருக்கிறது.

விவசாயிகள்:

சதய நட்சத்திரக்காரர்கள் புதிய நிலபுலன்களுக்கு சொந்தக்காரர்கள் ஆகப் போகிறார்கள் இந்த குருப்பெயர்ச்சி மூலம்.

மாணவர்கள்:

பூரட்டாதியினர் விருப்பப்பட்ட கல்வியினை நல்லபடியாகவே கடந்த 2½ மாதங்களுக்கு முன்பு அடைந்திருக்கிறார்கள். இது மேலும் மேலும் சுபிட்சத்தினை வழங்கக்கூடிய குருப்பெயர்ச்சிதான்.

தொழிலதிபர்கள்:

குருப் பெயர்ச்சியான பிறகு 33 தினங்கள் கடந்த பிறகு மிகப்பெரிய செழிப்பு, புதிய தொழில், அயல்தேச லாபம், பெரியபட்ஜெட் விஷயங்களில் துணிச்சலாக இறங்கலாம்.

அரசியல்வாதிகள்:  

பொது ஜன தொடர்பில் சர்வ கவனமாக செயல்பட வேண்டிய காலக்கட்டம் துவங்கியிருக்கிறது. மாற்று ஏற்பாடுகளில் கவனத்துடனும் சகக்கட்சியினரிடம் தேவையற்ற பரிமாற்றங்களை வைத்துக் கொள்ளக்கூடாத காலகட்டம்.

கவன மாதங்கள்:

தை, பங்குனி, வைகாசி, ஆவணி, புரட்டாசி.

பரிகாரம்:

ஒவ்வொரு திங்கட்கிழமையும் விரதமிருந்து சிவாலய ஸ்ரீஅம்பாளுக்கு பதினோரு நெய் தீபம் ஏற்றியப்பின் அர்ச்சனை செய்து வழிபட்டுக் கொள்ளவும். ஒருமுறை ஸ்ரீரங்கம் சென்று ஸ்ரீரங்கநாதரை வழிபட்டப்பின் அன்றே பழநிக்கும் சென்று ஸ்ரீ முருகப்பெருமானை தரிசனம் செய்து வரவும்.

மீனம்

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

மீனம் ராசி வாசகர்களே,

சமயம் பார்த்து சமயோசிதமாக நடந்து அனைத்தையும் நல்லபடியாக சாதித்துக் கொள்கிற மீன ராசிக்காரர்களே, இதுவரை உங்களது நிலையும் உங்கள் பாடும் கடுமையான திண்டாட்டத்துடன், மிகப்பெரிய போராட்டங்களுடன், அநாவசிய தொல்லை தொந்தரவுகளோடு நகர்ந்திருக்கும். வீண் விவகாரங்கள் முளைத்திருக்கும், எந்த காரியமும் முழுமையாக நிறைவேறி இருக்காது. வீண்போட்டி, பொறாமை, தொந்தரவுகள் உங்களைப் போட்டு வளைத்திருக்கும். கையில் வைத்திருந்த அத்தனை தொகைகளும் பஞ்சுமிட்டாய் கரைவது போல அநாவசியமாக கரைந்திருக்கும்.

குடும்பத்தை சரிவர கவனிக்க முடியாத சூழல் ஏற்பட்டிருக்கும். பணம் காசை மிச்சம் செய்ய முடியாத சூழல் நெருக்கடி தந்திருக்கும். கடன் பட வேண்டி இருந்திருக்கும். எதையோ நம்பி லாபத்தின் பொருட்டு பெரிய தொகையாக இழந்திருப்பீர்கள். ஆனாலும் கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கதையாக தப்பித்திருப்பீர்கள்.

இதனை சரிக்கட்ட உங்களது சொந்த முயற்சியில் வாங்கிப் போட்ட சொத்துக்களை விற்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டிருப்பீர்கள். இப்படி எல்லாம் இதுவரை 10ம் இடத்தில் நின்ற ராசிநாதனான, கேந்திராதிபத்திய தோஷத்திற்கு உள்ளாகியவரான உங்கள் ராசிநாதனே அதாவது குருபகவானே நின்று உங்களை முடக்கியிருப்பார், தேவையற்று கவலைப்பட வைத்திருப்பார், தோல்வியடைந்த பின் சுருண்டு படுக்க செய்திருப்பார் ஆக இவ்வித சங்கடமெல்லாம் விலகி, இந்த குருப்பெயர்ச்சியால் இனிமேல் பொற்காலமே! வசந்தகாலமே! வாழ்க்கை செழிப்பான வகையில் உங்கள் வசமே! குருபகவான் சுபிட்சகரமான உயர்வுக்காக உங்களுக்கென தனிபட்ட வகையில், தீப வெளிச்சத்தை ஏற்ற வந்திருக்கிற குருப்பெயர்ச்சி இது!

ஏற்கனவே 3ம் இடத்தில் வந்து அமர்ந்துவிட்ட ராகு கிரகமும், 9ம் இடத்தில் உச்சமாக நிற்கிற கேது கிரகமும் செய்ய வேண்டிய உயர்வான சுபிட்ச பலன்களை இதுவரை செய்யாமல் இருக்கிறார்கள். ஆனால் இந்த குருப்பெயர்ச்சி ஆன பிறகு அப்பிரதட்சண பார்வையாக கேது கிரகம் குரு பகவானை பார்க்கப் போவதும் அதிர்ஷ்டகரமான அமைப்பே!

ஆக இனிமேல் ஒவ்வொரு சுபிட்சமாக கொஞ்சம் கூட பிசிறு இல்லாமல் அரங்கேற இருக்கிறது. இல்லத்திற்குள் தொடர் சந்தோஷங்கள் வளரப் போகின்றன, ஒற்றுமை பலமாக அதிகரிக்கப் போகிறது. குடும்ப இனிமை தொடர்ச்சியாக அதிர்ஷ்டகரமாக வளரப் போகிறது. குடும்பத்திற்காக எந்த மாற்றம் செய்ய நினைத்தாலும் அது நல்லபடியாக நிறைவேறுவதற்கான காலக்கட்டம் உதயமாகி இருக்கிறது.

வீண்போட்டி, தொல்லை, தொந்தரவுகள் எல்லாம் ஒரு வழியாக முடங்கிக் கொள்ளும். எவ்வித புது சிக்கலும் ஏற்படாமல் வாழ்க்கை சந்தோஷமாக நகரும். கடன், கண்ணி இத்யாதி தொந்தரவு அனைத்திற்கும் முடிவுகள் ஏற்பட்டுவிடும். எல்லா நன்மைகளையும் அடைய கால நேரம் பார்த்து இறங்கி அற்புதமான உயர்வையும், லாபத்தையும் சந்திக்கப் போகிறீர்கள். அத்துடன் இல்லத்தில் உள்ள வயது கடந்தவர்களின் நோய் தொந்தரவுகளை சரிசெய்ய பணம் காசு பெரிய அளவில் இல்லையே என்ற கவலை ஒரு வழியா தீர்ந்து அவர்களை குணப்படுத்தி விடுகிற அதிர்ஷ்டம் ஏற்பட இருக்கிறது.

உத்தியோகம் பணி, பொறுப்பு, பதவி சார்ந்த விஷயங்களில் நீடிக்கிற எந்த ரூப அநாவசிய சிக்கல்கள் என்றாலும், ஒரு வழியாக முடிவுக்கு வந்து சிறப்பு உயர்வுகளை தரப்போகிற குருப்பெயர்ச்சி இது!

இந்த ஓராண்டு காலக்கட்டத்தை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டால் உங்களுக்கான மாபெரும் வளர்ச்சி நிச்சயம்! அதோடு இந்த குருப்பெயர்ச்சி ஆனது தொட்டு முதலில் ரேவதி நட்சத்திரக்காரர்களே தெளிவான மனநிலையோடு இவர்கள் புத்திசாதுரியமாக அனைத்தையும் சாதித்துக்கொள்வார்கள் பெரிய அதிர்ஷ்டங்களுடன்.

உத்தியோக நிரந்தரம் உண்டாகிவிடும், பொருளாதார வளர்ச்சி தங்கு தடையில்லாமல் மேன்மை தரும், புதிய சொத்து-பத்துகள் வாங்கக்கூடிய அதிர்ஷ்ட காலம் உருவாகும், எல்லா சிரமத்தையும் தாண்டி நகைநட்டு சேர்க்கைகள் உண்டாகப் போகிறது. பூர்வீகத்தை சீர்திருத்திக் கொள்ளப் போகிறார்கள். பறந்து விரிந்த நிலபுலன்களை வாங்குவதற்கான யோகமும் இருக்கிறது. வாரிசுகளால் பெரியதொரு மனமகிழ்ச்சி உருவாகிவிடும்.

திருமணமாகி பலஆண்டுகள் தாண்டியும் இன்னும் மழலை பாக்கியம் இல்லாத நிலைமைக்கு இந்த குருப்பெயர்ச்சி சந்தோஷ தீர்வை கொடுக்கப் போகிறது. இந்த நட்சத்திரத்தினர் சிலர் ஆசைப்பட்ட குழந்தையை தத்தெடுத்துக்கொள்ளக்கூடிய காலக்கட்டம் உருவாகி இருக்கிறது. திருமணக் கனவுகளும் ஒரு வழியாக இளம் இருபாலருக்கும் பூர்த்தியாகிவிட இருக்கிறது. 

மீன ராசியினருக்கு இனிமேல் இவர்களது தீர்க்கமுடியாத சிக்கல்களுக்கெல்லாம் ஒரு வழியாக விடிவு கிடைக்கப் போகிறது. இவர்களின் உயர்வுக்காக கால நேரம் அதிர்ஷ்டகரமாகவே ஒத்துழைக்கப்போகிறது.

சொந்த வீட்டை இழந்துவிட்டு தவிப்பவர்களுக்கு திடீரென்று புது சொந்த வீடு பாக்கியம் கிடைக்கக்கூடிய சிறப்பு காலம் உதயமாகி இருக்கிறது.   வாரிசுகளால் இவர்கள் அடைந்த மனக்கஷ்டங்கள் எல்லாவற்றுக்கும் அற்புதமான சந்தோஷத் தீர்வுகள் ஏற்படப் போகின்றன. இவர்களது வாரிசுகளுக்கு திருமணம் முடிவு செய்த பின் எந்தகாரணத்தினாலோ அது தடைப்பட்டு போனதற்கு இனிமேல் தான் சந்தோஷகரமான மனநிறைவு திருப்பங்கள் ஏற்படப் போகின்றன.

ஆட்டிப்படைத்து வருகிற கடன், கண்ணி, கொடுக்கல்-வாங்கல் சச்சரவுகளுக்கெல்லாம் இனிமேல் தொடர் விடிவுகாலம் ஏற்படப் போகிறது. பிறர் பொறாமைப் படும்படியான பெரியதொரு வளர்ச்சி இந்த நட்சத்திரக்காரர்களுக்கு உண்டு.

வீடு மாற்றம் ஏற்படும், உத்தியோக இடம் உகந்ததாக அமையும். பணிமூப்பு அடைந்தும் இதுவரை அதற்கான பதவி பொறுப்புகளை அனுபவிக்காத இந்த நட்சத்திரக்காரர்களுக்கு ஒரு சிறப்பான யோக அதிர்ஷ்ட திருப்பம் ஏற்படப் போகிறது.

பழைய சொத்துக்களை விற்று தேக்கமடைந்திருக்கிற தங்களது தொழில், வியாபார, நிர்வாக விஷயங்களை மேன்மைபடுத்திக் கொள்ள இருக்கிறார்கள். 

உத்திரட்டாதியினர் அனைவரும் இந்த குருப்பெயர்ச்சி தொடங்கி ராகு - கேதுக்களால் மட்டும் சிலவித நிவர்த்தி உயர்வு பலன்களை சின்னசின்னதாக அடைந்துக் கொண்டிருப்பார்கள். இந்த நிலைமை  2½ மாத காலம் வரை நீடித்து அதன்பிறகு ராசிக்கு 11ம் இடத்தில் அமரப் போகிற குரு மற்றும் சனிக்கிரகத்தால் ஏகப்பட்ட சிறப்பு சந்தோஷங்களை உயர்வாக அடைவார்கள்.

அதோடு இவர்களது பூர்வீக சொத்து-பத்து ரீதியாக பங்கு பங்காளி வகை தொல்லை தொந்தரவுகளோ அல்லது 3ம் நபர் தலையீடுகளோ ஏற்பட்டிருப்பின், அதற்கெல்லாம் விடிவு கொடுக்கக்கூடிய காலகட்டம் உதயமாகியிருக்கிறது.

இந்த நட்சத்திர இளம் இருபாலரும் குருப்பெயர்ச்சி ஆனதிலிருந்து 1½ மாத காலம் தங்களது அனைத்து விஷயத்திலும், சக நட்புகளிடத்திலும் உத்தி யோக பணி இடத்திலும், கல்வி இடங்களிலும் சர்வ கவனமாக நடைபோட வேண்டிய காலகட்டம்.

இந்த நட்சத்திர இளைஞர்கள் டிசம்பர் 26, 2020 வரை வாகனத்தில் கவனம் தேவை!

அதேநேரம் வருகிற சித்திரை மாதத்தில் மாற்று மத இனத்தவரால் மிகப் பெரிய யோக சவுகரியங்கள், லாப உயர்வுகள் கிடைக்கப் போகின்றது. புதிய தொழில் வியாபாரம் ஆரம்பிக்க எளிதான சாதகங்கள் தொடங்கிவிடும்.

குலதெயவ பிரார்த்தனை நீண்ட மாதங்களுக்கு பிறகு நல்லபடியாக நிறைவேறும். மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி 1¾ ஆண்டிற்குப் பிறகு பலவித அதிர்ஷ்ட திருப்புமுனைகளை ஏகபோகமாகவே கொடுக்க வந்திருக்கிறது.

பெண்கள்

உத்திரட்டாதி இல்லத்தரசிகள் இனிமேல்தான் நீண்ட உடல்நல கவலை, சிகிச்சை, மருந்துமாத்திரை விஷயங்களில் இருந்து வெளிவரப் போகிறார்கள்.

தொழிலதிபர்கள்

இவ்வளவு காலம் முடங்கி கிடந்ததற்கு தொழில் லாபங்களை அடைய முடியாமல் போனதற்கு நல்ல விடிவு காலம் பிறந்துவிட்டது.

விவசாயிகள்

சொந்த நிலத்தை பிறரிடம் ஒப்படைத்து அதன்மூலம் சொற்ப லாபத்தை பெரியளவில் அடையப் போகிறீர்கள்.

அரசியல்வாதிகள்

இனிமேல் கட்சி சார்பான மேலிட ரீதியான மிகப்பெரிய உயர்வுகள் கிடைக்கப் போகிறது.

கவன மாதங்கள்

பங்குனி, ஆனி, ஆடி, புரட்டாசி.

பரிகாரம்: 

தொடர்ந்து ஒவ்வொரு புதன்கிழமையும் நவக்கிரக ஸ்ரீபுதனை வழிபட்டுக்கொண்டிருக்கவும், வெள்ளிக்கிழமையில் குலதெய்வப் பிரார்த்தனை செய்யவும், சஷ்டி விரதத்தை மாதந்தோறும் அனுஷ்டித்து ஸ்ரீமுருகப்பெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபடுவது நலம்.