சார்வரி 2020 - தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்
14-04-2020 – 13-04-2021
ஜோதிடர் – கணித்தவர் ஜோதிடர் மு. திருஞானம், எம்.ஏ., சீர்காழி

மேஷம்

மேஷ  ராசிக்கு   தன, சப்தம அதிபதியான சுக்கிரனின் நட்சத்தி ரத்தில் இந்தாண்டு தமிழ் வருடம் உங்களுக்கு உதயமாகி இருப்பதே மாபெரும் சந்தோஷம்தான்.

இதுவல்லாமல் இந்த ராசியின் மூன்று நட்சத்திரக்காரர்களுக்குமே ஆண்டு துவக்கம் அருமையாகவே இருக்கிறது. சார்வரி வருஷத்திய நட்சத்திர பலன் ரீதியாக அஸ்வினி மற்றும் பரணி நேயர்களுக்கு 95 சதவீத யோக அதிர்ஷ்ட, லட்சுமிகடாட்ச நிலைமைகள் துாக்கலாகவே இருக்கிறது.

கார்த்திகை நேயர்களுக்கு மட்டும் சிலவித மனரீதியான சலனங்கள் உண்டாகக்கூடிய வாய்ப்பு இந்த ஆண்டில் உண்டு.

இந்த நிலைமை வரும் ஆடி மாதத்துக்குப் பிறகு மாறிவிட இருக்கிறது. உங்களது கஷ்ட நிலைமைகள் அனைத்தும் ஆவணி மாதம் 6ம் தேதிக்குள் சீராகப் போகிறது.

பொருளாதார தாக்கங்கள் அனைத்தும் ஒழுங்குபட இருக்கிறது. கடன் இடைஞ்சல்களுக்கும் விடிவு ஏற்படப் போகிறது. குடும்பம் சம்பந்தமான எத்தனை இடையூறுகள் எது மாதிரியாக இருந்தாலுமே அதற்கும் ஒழுங்கான பெரிய நிவாரணங்கள் ஏற்படப் போகிறது.

 சுபகாரிய, திருமண, சுபசடங்கு விஷயங்களில் ஏற்பட்ட தடங்கல், தாமதங்கள் முடிவுக்கு வந்து ஒருவழியாக நிறைவேற்றி விடவும் இருக்கிறீர்கள்.

மேலும் உடல்நல வகையில் எது மாதிரியான சச்சரவுகள் இருப்பினும், வைத்தியச்செலவுகள் நீடிப்பினும் சரியான மகிழ்ச்சி தீர்வு கிடைக்கப் போகிற ஆண்டு. அடுத்து உத்தியோகம், பதவி, பொறுப்பு விஷயங்களில் எது காரணமாகவோ ஏற்பட்ட ஸ்தம்பிப்புகள், பாதிப்புகள், விலகல்கள் மீண்டும் மகிழ்ச்சிகரமான நிலைமையை உருவாக்கப் போகிறது.

 தொழில், வியாபார, நிர்வாக, பட்ஜெட் சார்ந்த பிரச்னை வரும் செப்டம்பர் மாதம் 13ம் தேதிக்குள் உங்களுக்கு ஏதுவான சாதக உயர்வு களைத் தரப் போகிற ஆண்டு. மாணவர்கள் தங்கள் கல்வி உயர்வுகளை எளிதாக அடைய இருக்கிறார்கள். இந்த ராசி பெண்கள் அனைவருக்கும் லட்சுமிகரமான மகிழ்ச்சி உயர்வுகளை அதிரடியாக தரப்போகிற ஆண்டு.

விவசாயிகள் அரசாங்கத்தால் பல அனுகூல உயர்வுகளை சந்தோஷத்துடன் அடைந்து கொள்கிற ஆண்டு. அரசியல்வாதிகள் தங்களது புகழை அதிகப்படியாக உயர்த்திக் கொள்ளப் போகிற ஆண்டாக இந்த சார்வரி ஆண்டு இருக்கிறது. கலைஞர்கள் வருகிற வைகாசியில் இருந்து வேறு வித நுணுக்கத் திட்டத்தில் இறங்கி, உயர்வு அடையக் கூடிய பாக்கியம்  இருக்கிறது.

மேஷ ராசி அன்பர்களுக்கு இந்த ஆண்டில் வருகிற வைகாசி, ஆனி, ஆவணி, மார்கழி மற்றும் மாசி மாதங்கள் எதிர்பாராத உயர்வு மேன்மைகளைத் தரப்போகிற ஆண்டு. இந்த ஆண்டு ஞாயிறு, திங்கள், சனிக்கிழமைகள் அதிர்ஷ்டமானவை.

கார்த்திகை நட்சத்திர இளம்பெண்கள் தன்னிச்சை முடிவுகளை வருகிற நவம்பர் மாதம் வரை தவிர்க்க வேண்டும். பரணி இளைஞர்கள் ஏதோ ஒரு வகையில் இந்த ஆண்டு முடிவுக்குள் பெரிய சாதனை செய்வதன் பொருட்டு அரசாங்கத்தால் விருது, பாராட்டு, சன்மானம் அடையப் போகிற அதிர்ஷ்ட ஆண்டு.  பொதுவில் மேஷ ராசியினருக்கு பொற்காலம் துவங்கிவிட்டது.


ரிஷபம்

ரிஷப ராசிக்கு தன பஞ்சம, ஸ்தானமான 2 மற்றும் 5ம் இடத்துக்கு அதிபனான புதபகவான் இவ்வருட ராஜபொறுப்பை ஏற்றுள்ளதால், உங்களுக்குத்தான் ஏகபோக உயர்வு சந்தோஷங்களை கண்டிப்பாக கொடுக்கப் போவது தெரிகிறது. நடைமுறை விஷயங்கள், இப்போதைய உலக நடப்புகள், பாதிப்புகள் எல்லாம் ஒருபுறம் உங்களையும் சேர்த்து தாக்கிக் கொண்டிருந்தாலும், இந்த ஆண்டு உங்களுக்கு நல்லபடியாகவே இருக்கிறது. எப்படி இவ்வளவு சச்சரவு, உலகமுடக்கம், பணத்தட்டுப்பாடு, நிர்வாகக் கோளாறு, கடன் சச்சரவு நிலுவைகளைத் தாண்டி நாம் முன்னேறுவது என்ற கெடுபிடியான குழப்பத்தில் நீங்கள் கவலைப்பட்டுக் கொண்டிருந்தாலும் உங்களுக்கென்று இந்த ஆண்டு கிரகங்கள் மாபெரும் உயர்வுகளை, அதிர்ஷ்டங்களை வைத்திருக்கிறது. நடந்தவையெல்லாம் நன்மைக்கே. ஒரு உயர்வு கிடைக்கப் போகிறது நமக்கு என்று சந்தோஷத்தில் துள்ளிக் கொண்டு இருக்கும்போதோ, இவ்வளவு பெரிய முட்டுக்கட்டையா ஏற்பட வேண்டும் என்ற உங்கள் கவலை நிச்சயமாக மாறும். வேறு வகை மாற்றம், திருப்பம், உயர்வான வாய்ப்பு, அதிர்ஷ்டங்களை உண்டாக்கி வாழ்வில் ஏற்றங்களை உண்டாக்கி விட இருக்கிறது. அதோடு 3க்குடைய கிரகம் சேனாதிபதியாக அதாவது சந்திர கிரகம் பொறுப்பேற்று உள்ளதால், எல்லாவித சாத்தியமில்லாத விஷயங்களிலும் இந்த ஆண்டு நீங்கள் வெற்றியடையப் போகிறீர்கள். மேலும் உடல் ஆரோக்கியம் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமே கிடையாது. உற்றார் உறவினர்களால் எவ்வித சச்சரவும் ஏற்படாது. வீண்வம்பு விஷயங்கள் ஏதேனும் தொடர்ந்து கொண்டிருப்பின் அனைத்தும் முடிவுக்கு வந்துவிடும். ஆண்டுமுழுவதும் நட்பு வட்டத்தால் பலவித உயர்வு, ஆதாயம், புதியவர் தொடர்பு, பெரிய வாய்ப்புகள் கிட்டப் போகிற ஆண்டு.

சொத்து, மனை, கட்டடம், புதிதாக அமைத்துக் கொள்கிற முயற்சியில் ஏதேனும் கடந்த ஆண்டில் இருந்து முட்டுக்கட்டை, பணப் பற்றாக்குறை நீடித்து வந்தால், அது இந்த ஆண்டு ஆடி மாதம் முடிவதற்குள் கை கூட இருக்கிறது. கார்த்திகை நேயர்கள் மட்டும் இந்த ஆண்டு துவங்கி வருகிற ஆனி மாதம் 11ம் தேதி வரை அனைத்து விஷயத்திலும் கவனமாக காலடி எடுதது வைக்க வேண்டும். அதன் பிறகு விருப்பப்படுகிற உயர்வுகள், திட்டங்கள் சூடுபிடித்துக் கொள்ளும்.

 அடுத்து ரோகிணி அன்பர்களுக்கு இந்த சித்திரை மாதம் முதல் 129 தினங்களுக்கு பெரிய பெரிய சாதகமான உயர்வுகள் கிட்டப் போகிறது. மிருகசீரிட நேயர்கள்  4, 5 ஆண்டு கால பிரச்னை, தடங்கல், தொல்லை, விரயம், நஷ்டம், கஷ்டங்களில் இருந்து விடுவிக்கப்பட இருக்கிறார்கள்.

 மற்றபடி இந்தப்புத்தாண்டு ஆனி, ஆடி, புரட்டாசி, கார்த்திகை, மாசி மாதங்கள் ரிஷப ராசியினர் அனைவருக்குமே வெகு யோக திருப்பங்களைத் தரப் போகிறது.

 இந்த ஆண்டில் வருகிற செவ்வாய், ஞாயிறு, வெள்ளிக் கிழமைகள் அற்புதமாக இருக்கப் போகின்றன. சுபகாரிய விஷய தடைகளுக்கு வாய்ப்பில்லை. மிருகசீரிஷ இளம்பெண்களுக்கு திடீர் திருமணம் கை கூடி விடும். மாணவர்கள் கல்வி   சம்பந்தமான  அனைத்து நெருக்கடிகளில் இருந்தும் வெளிவரப் போகிறார்கள். விவசாயிகள் வருகிற ஆடி மாதம் 3ம் வாரத்தில் இருந்து பெரிய வளர்ச்சியை சந்திக்க இருக்கிறார்கள். பொதுவில் இந்த சார்வரி ஆண்டு ரிஷப ராசியினரை வளர்ச்சிப் பாதையில் மட்டும் வழிநடத்தப் போகிறது.

மிதுனம்

இந்த ஆண்டில் மிதுனம் ராசியினர் அனைவருமே மகிழ்ச்சிக் கடலில் திளைக்கப் போகிறார்கள் என்பது உறுதி. ராசிநாதனும் 4ம் இடத்துக்கும் அதிபனான  புதன் பகவான் ஆட்சிப் பொறுப்பை வருட ராஜாவாக ஏற்றுள்ளதால், இதுவரை இவர்களுக்கு நீடித்து வந்த அத்தனை கெடுபிடி தொல்லைகளையெல்லாம் புதபகவானே உடைத்தெறிந்து விட இருக்கிறார்.

இந்த ஆண்டு ஆரம்பத்தில் இருந்தே உங்களின் அனைத்துவித சிக்கல்களும் ஒவ்வொன்றாக முடிவுக்கு வரப்போகிறது. குடும்ப பிரச்னைகள் எது ரூபத்தில் நீடித்து வந்தாலும் அதற்கும் தீர்வு வருகிற ஆனி மாதம் 7ம் தேதியுடன் கிடைத்துவிடும்.

 அடுத்ததாக எல்லாரும் பயந்து கொண்டிருக்கிற ஆரோக்கிய சிக்கல் உங்களை இப்போது நெருங்காது. காரணம் சூரிய கிரகம் ஆரோக்கிய கர்த்தா, உங்கள் ராசிக்கு மிகவும் வேண்டப்பட்டவரும் கூட அவர் ஆண்டுப்பிறப்பு மாதமான சித்திரையில் உச்சமாக இருப்பதால் எந்த ஆரோக்கிய சம்பந்தமான பீடையையும் நெருங்கவிட மாட்டார்.

அத்துடன் ஆண்டுத் துவக்கத்தில் எட்டாமிடத்தில் உச்சம் பெற்ற செவ்வாய் நின்று கொண்டு அநாவசிய தடை, பீதி, பயத்தினை சிற்சில நேரம் தந்து கொண்டிருந்தாலும், சித்திரை மாதம் 19ம் தேதிக்குப் பிறகு நல்ல நிலைமைக்கு வருகிறார்.

இவர் உங்கள் ராசிக்கு 9ம் இடமான கும்பத்தில் நிற்கப் போவது எதிர்பாராத எண்ணற்ற வளர்ச்சிகளை அதிரடியாக கொடுக்கப் போவது உறுதி.  பொருளாதார சிரமங்கள் அனைத்தும் விலகி விட இருக்கிற ஆண்டுதான்.

கொடுக்கல் வாங்கல் நல்லபடியாக நிகழ்ந்து கொண்டிருக்கும். கடன் சமாச்சாரங்கள் ஒருவழியாக நிவர்த்திக்கு வரும். தொழில், வியாபார, புது நிர்வாக திட்டங்கள் நல்லபடியாக நிறைவேற ஆரம்பிக்கும். புது பட்ஜெட் ஏற்பாடுகளும் சாதகமாக முடியும்.

உத்தியோக, பொறுப்பு, பணி விஷயங்களில் எது மாதிரியான சங்கடம் தொடர்ந்தாலும் உயர்வான நிம்மதி முடிவுக்கு வரப்போகிறது. ஊதிய நிலுவை விஷயங்களும் ஓய்வூதிய பாக்கிகளும் அரசாங்கத்தால் தடையேற்படாமல் நிறைவேற போகிற ஆண்டு இது.

 சுபகாரிய விஷய முடிவுகள் வருகிற ஆவணி மாதம் 3வது வாரத்தில் நல்லபடியாக கை கூடி விடும். பணி, உத்தியோக தேடுதலில் உள்ள இந்த ராசியினருக்கு அரசாங்கத்தால் தற்காலிக பணி அமைந்து இதன் மூலம் வருங்காலத்துக்கு நிரந்தரத்தை உத்தியோகம் மூலம் அமைத்து தர அடித்தளம் போடப்போகிற ஆண்டு.

 திருவாதிரை அன்பர்களுக்கு ஆண்டு துவங்கி 5 1/2 மாதங்களுக்குப் பிறகே எந்த ஒரு காரியமும் முழுமை பெறும். அதுவரை பொறுமை தேவை. மிருகசீரிஷமும், புனர்பூசமும் ஆண்டு துவங்கியதில் இருந்து 8 மாதங்கள் வரை அதிதிருப்தியுடன் உலா வரப் போகிறார்கள். இந்த ராசி பெண்கள் இதுவரை சந்தித்த ஆண்டுகளை விட இவ்வாண்டில் ஏகப்பட்ட சுபிட்ச லட்சுமிகடாட்ச உயர்வுகளை சந்திப்பார்கள். மாணவர்கள் தாங்கள் கற்ற கல்வி உருப்படியானதுதான் என்று உணரும்படி பெரிய நன்மை சம்பவம் காத்துள்ளது. மற்றபடி இவ்வருட ஆவணி, புரட்டாசி, கார்த்திகை, பங்குனி மாதங்கள் வெகு அருமையாகஇருக்கும். இந்த ஆண்டில் சனி, புதன், திங்கட்கிழமைகள் எல்லாம் மிதுன ராசிக்கு அற்புதமோ, அற்புதம்தான்.

கடகம்

கடகம் ராசியினருக்கு இந்த ஆண்டின் துவக்கம் ஆயில்யம் மற்றும் புனர்பூச நேயர்களுக்குத்தான் மிகமிக அதிர்ஷ்டத்துடன் இருக்கிறது. காரணம் மிக முக்கிய கிரகங்களான ராகு, கேது மற்றும் குரு, சனி கிரகங்கள் இவர்களுக்கு வெகுவான சாதக அதிர்ஷ்ட நட்சத்திர சஞ்சாரத்தில் ஓடிக் கொண்டிருக்கின்றன.  பூசத்துக்கு குரு முக்கியம் அவர் தன அதிபனின் நட்சத்திரத்தில் இப்போது நின்றாலும் 5வது நட்சத்திரமான அனுஜென்ம தாரையில் பயணிக்கிறார்.

அடுத்து நட்சத்திர அதிபன் என்ற வகையில் சனி முக்கியம். அவரும் சூரியனின் நட்சத்திரத்தில் நின்று கொண்டு இருக்கிறார். அடுத்து ராகு கேதுக்களும் வதா தாரையில் சற்றே பயணப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஆக கடக ராசியின் இரண்டு நட்சத்திரங்கள் மட்டும் ஏகபோக அதிர்ஷ்ட அனுகூலங்களை இந்த ஆண்டுப் பிறப்புக்கு முன்பே அனுபவிக்க தொடங்கிவிட்டன என்றுதான் சொல்ல வேண்டும். அவர்கள் ஆயில்யம் மற்றும் புனர்பூசம் நேயர்களே.

 இதுவல்லாமல் ஆயில்யம் நட்சத்திர அதிபனான புதன் இந்த வருட ராஜா பொறுப்பை ஏற்றுள்ளதால், இவர்களுக்கு இன்னுமொரு அதிர்ஷ்டத் துாக்கல் என்றே சொல்ல வேண்டும். எனவே பூசம் அன்பர்கள் இந்த ஆண்டு ஆரம்பத்தை புதனின் நீச நிலைமையை வைத்தும், சூரியனின் 10 இட பிரவேச உச்ச நிலைமையைக் கொண்டும் ராசிக்கு 7ல் குரு, செவ்வாய் இணைவான தரும கருமாதிபதி யோகத்தை கொண்டும்  36 தினங்கள் மெல்ல ஓட்டலாம். பொதுவாக கடக ராசிக்கு ஓரளவு 60 சதவீத நன்மைகள் உண்டு என்றே சொல்கின்றன.

மற்றபடி குடும்ப மேன்மை அருமையாகவே மகிழ்ச்சியுடன் உயரும். அடுத்து ஆரோக்கிய வலிமை, நிம்மதிக்கு 2 1/2 மாதங்கள் வரை எந்த ஒரு பெரிய பின்னடைவும் கிடையாது. வாழ்க்கைத் துணையுடனான ஒற்றுமை மகிழ்ச்சிக்கு எவ்வித தொந்தரவும் இல்லை.

 மற்றபடி தொழில், வியாபார, நிர்வாக, பட்ஜெட் விஷயங்கள் நினைத்தபடியே வருகிற வைகாசி 8ம் தேதிக்குப் பிறகு மேன்மை தரும். உத்தியோகம், பதவி, பொறுப்பு, பணி, வேலை சார்பான அத்தனை கசப்புகளில் இருந்தும் இவ்வாண்டு துவங்கி 5 மாதத்துக்குள் வெளிவந்து உயர்வுகளை சந்திக்கப் போகிறார்கள் கடக ராசியினர்.

 வருகிற ஆவணி மாத இறுதி வாரத்தில் ராகு கேது பெயர்ச்சியானதற்கு பிறகு கடக ராசியினருக்கு புதிய உயர்வுகள் காத்துள்ளன. மேலும் சுபகாரிய, திருமண, சுப சடங்குகள் திட்டமிட்டபடியே எவ்வித பிரச்னையும் தராமல் நடந்து முடியும். வயது கடந்த பூசம் நட்சத்திர மறுமண எதிர்பார்ப்பில் உள்ள நேயர்களுக்கு ஏதோ ஒரு வரன் கண்டிப்பாக கிடைக்கிற ஆண்டு.

 இந்த ஆண்டில் வருகிற சித்திரை, வைகாசி, ஆவணி, கார்த்திகை மாதங்கள் அருமையாக இருக்கப் போகின்றன. பெண்களுக்கு இந்த ஆண்டு மிகமிக உயர்வான ஆண்டு. மாணவர்கள் இதுவரை எது மாதிரியான கல்விக் கவலையில் இருந்தாலும் அது தீரப் போகிறது.

விவசாயிகள் புதியதொரு உயர்வை, புதிய நிலபுலன் சேர்க்கையை சந்திக்கப் போகிறார்கள். கலைஞர்கள் வருகிற ஆனி மாதம் தொட்டும், அரசியல் அன்பர்கள் வருகிற வைகாசியிலும் பெரிய உயர்வுகளை அனுபவிக்கப் போகிறார்கள்.

இந்த ஆண்டில் வருகிற வெள்ளி, திங்கள் மற்றும் செவ்வாய்க் கிழமைகளில் அதிர்ஷ்ட உயர்வுகள் காத்துள்ளது.


சிம்மம்

இந்த ஆண்டு சிம்ம ராசிக்கு சிறப்பிலும் சிறப்பாக அட்டகாசமான மனமகிழ்ச்சிகள் கண்டிப்பாக உண்டு. கவலைப்படாதீர்கள். ராசிக்கு தன, லாப அதிபனான புதன் கிரகமும், ராசிக்கு திடீர் மண், மனை, கட்டட இத்யாதிகளை வழங்கக்கூடிய 12ம் இடத்து அதிபனான சந்திர கிரகம் சேனாதிபதி பொறுப்பை ஏற்றுள்ளபடியாலும், உங்களது ராசியை மட்டும் எந்த வகையிலும் கைவிட்டு விடாத படி இந்த தமிழ் ஆண்டுப்பிறப்பின் ஆரம்பத்தில் உள்ள கிரக நிலைகளும், அடுத்தடுத்த மாதங்களில் சிம்ம ராசிக்கு சாதக வீடுகளில் பயணிக்கப் போகிற கிரக ரீதியாகவும் நிச்சயமாக தெரிகிறது.

இருந்தாலும் உத்திரம் நேயர்களுக்கு ஆனி மாதத்தில் இருந்தும், பூரம் நேயர்களுக்கு ஆண்டு துவக்க மாதமான சித்திரையில் இருந்தும், மகம் நேயர்களுக்கு வருகிற ஆடி மாதம் தொட்டும் ஒவ்வொரு விதத்தில் நல்ல நல்ல உயர்வு விசேஷ சம்பவங்கள் ஒவ்வொன்றாக நடந்தேறப் போகிறது.

ஆக எப்படிப் பார்த்தாலும் சனிபகவான் ருண ரோக சத்ரு ஸ்தானத்துக்கு இந்தாண்டு டிசம்பர் மாதம் வந்த பிறகே பலவிதத்திலும் இன்னும் அதிரடியாக விசேஷ உயர்வுகள் உங்களை நோக்கி படையெடுக்கும்.

ஆண்டு துவங்கி 33 தினங்கள் வரை செவ்வாய்க் கிரகத்தாலும் அதற்கடுத்த மாதங்கள் தொடர்ச்சியாக 2 மாதங்கள் சூரியனாலும், அதற்கடுத்த 3 மாதங்கள் ராகு கிரகத்தாலும், வருகிற அக்டோபர் 11ம் தேதி வரை குருபகவானலும் உங்களது நினைப்பு, திட்டம், செயல்பாடு, ஏற்பாடு கனவுகளை சிறப்பாக நிறைவேற்றிக் கொள்ள முடியும்.

இப்போது நாட்டில் நிலவி வருகிற எந்த ஒரு பீதியும், பயமும் உங்களைத் தாக்காது. நோய் தொந்தரவுகள் அருகே வர வாய்ப்பு இல்லை. குடும்ப நிலைமைகளில் மகிழ்ச்சி உயர்வாகவே நீடித்துக் கொண்டிருக்கப் போகிறது.

உறவுகளால் மேன்மையான அனுசரணை ஒத்துழைப்புகளும் கிடைத்துக் கொண்டிருக்கப் போகிற ஆண்டு இது.

புது அரசுப் பணி, தனியார் உத்தியோகம், அயல்தேச ஆசை உள்ளவர்களுக்கு வருகிற புரட்டாசி மாத 17ம் தேதிக்குள் சிறப்புகரமான இனிமைகள் காத்துள்ளன. பணி, பதவி, உத்தியோகத்திலும் இந்த ஆண்டு முடிவுக்குள் அமர்ந்து விடலாம்.  சுபகாரிய, திருமண சுப சடங்கு சம்பந்தமான முயற்சிகள் எளிதாக விமரிசையாக கைகூடி விடும்.

சொத்துபத்து சம்பந்தமான கவலைகள் வருகிற ஆனி மாதம் 2ம் வாரத்துக்குள் முடிவுக்கு வரும். இந்த மாதத்திலேயே எதிர்பாராத திடீர் பரிசு பண ஆதாய வரவுகளுக்கும் பூரம் நேயர்களுக்கு அதிர்ஷ்டம் காத்துள்ளது. மற்றபடி பெண்கள் அனைவருக்கும் இவ்வாண்டு இந்த ராசி நேயர்களுக்கு பல அற்புதங்களை வாரி வழங்க இருக்கிறது. மாணவர்கள் தனித்திறமையால் சிலவித புது கண்டுபிடிப்புகளில் இறங்க இருக்கிறார்கள்.

விவசாயிகள் வருகிற ஆடி மாதத்துக்குள் தங்களது உற்பத்தியில் புதிய சாதனை செய்வார்கள். அடுத்து கலைஞர்களும் அரசியல்வாதி களும் தங்களை வருகிற வைகாசியில் நிரூபிக்கப் போகிறார்கள்.

இந்த ஆண்டில் வருகிற ஐப்பசி, கார்த்திகை, தை மாதங்களும் திங்கள், புதன், வியாழக்கிழமைகளிலும் பலபல உயர்வு அற்புதங்கள் சிம்ம ராசிக்கு நடக்கப் போகிற ஆண்டு.


கன்னி

கன்னி ராசியினருக்கு, இந்த புத்தாண்டுப்பிறப்பு உங்களின் உயர்வுக்கெனவே உதயமாகி உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். காரணம் ராசிநாதன் புதபகவானே இந்த ஆண்டு ராஜாவாக பொறுப்பேற்று உள்ளதால், சகல நன்மைகளும் மிகமிக அட்டகாசமான அதிர்ஷ்டங்களுடன் முன்னேற்றத்தை கொடுக்கப் போகிற ஆண்டு இது. மேலும் லாப அதிபதியான சந்திர கிரகம் சேனாதிபதி பொறுப்பை இந்த ஆண்டில் வகிக்கப் போவதால் எந்த போராட்டமும் ஏற்படாமல் பொருளாதார ரீதியாக உயர்வடையப் போகிறீர்கள். அதோடு ஆண்டு துவக்கத்தில் உங்கள் ராசிக்கு சாதகமான கிரக நிலைகளே உலவிக் கொண்டிருந்தாலும் 5ல் செவ்வாய் மட்டும் லேசாக மனக்குழப்பத்துடன் காரணமற்ற தடுமாற்றங்களுடன் வைத்திருப்பார் என்றுதான் சொல்ல வேண்டும்.

அதன் பிறகு 6ம் இடத்துக்கு நகரப் போகிற செவ்வாய்க் கிரகமும் சித்திரை 5ம் தேதிக்குப் பிறகு ராசிநாதன் நீச கதியில் இருந்து விலகி சூரியனுடன் வந்து இணையப் போவதால் மேலும் பலப்பல உயர்வுகள் தானாக கிடைக்கப் போகிறது.

அடுத்தபடியாக இவ்வருடத்தில் இப்போது மாபெரும் இடையூறு தொந்தரவு, எண்ணற்ற சிரமங்களை தந்து வருகிற ஒட்டுமொத்த கிரக நிலைகளும் மாறப் போவதால் மிக எளிதாக அனைத்து வகை எதிர்பார்ப்பு, கனவு, திட்டம் ஏற்பாடு, முயற்சிகளிலும் சாதகமான அதிர்ஷ்ட உயர்வுகளை சந்தித்துவிட இருக்கிறீர்கள்.

அதாவது ராகு கிரகம் 10ம் இடத்தில் இருந்து 9ம் வீட்டுக்கு உங்களது யோக அதிபனான சுக்கிரனின் வீட்டுக்கு வந்து அமரப் போகிறது. கேது கிரகம் அனைத்து அதிரடி வெற்றிகளையும் உயர்வாக தருகிற இடமான 3ம் இடத்துக்கு வரப் போகிறார். இதனால் பலமான அதிர்ஷ்ட மேன்மைகளும், உயர்வான மகிழ்ச்சி துள்ளல், உற்சாகம் மேலோங்க இருக்கிறது.

அடுத்ததாக இப்போது அர்த்தாஷ்டமச் சனியாக இருக்கின்ற சனிபகவான் இடம் மாறி 5ம் இடமான பூர்வ புண்ணிய, புத்தி, அதிர்ஷ்டம், புத்திர, புத்திரி, சொத்துபத்து, செல்வ ஸ்தானமான இடத்துக்கு மாறப் போகிறார். இதனால் எவ்வளவு பெரிய தடை, இடையூறு, கோளாறு, மனக்கஷ்டம் இருந்தாலும் படிப்படியாக விலகிஉங்களை உயர்வின் உச்சத்துக்கு நகர்த்தி சென்றுவிடும்.

  வருகிற மே மாதம் 13ம் தேதிக்குப் பிறகு கன்னி ராசியினரின் வாழ்வில் எண்ணற்ற புதுப்புது உயர்வுகள் மிக அட்டகாசமாக அதிரடியுடன் ஏற்படவே போகிறது. ஆக இந்த ஆண்டு பிறப்பு பல பலமான அதிர்ஷ்ட ஏற்றங்களையே கன்னி ராசிக்கு அருளப் போகிறது. அதிலும் சித்திரை அன்பர்கள் முதல் தர அதிர்ஷ்டத்துக்கு ஆளாக இருக்கின்ற ஆண்டு இது. அடுத்தது உத்திரம் அன்பர்களுக்கு நினைத்துப் பார்க்காத உயர்வுகள் எல்லாம் தானாக வருகிற ஆண்டு இதுவே. அஸ்தம் நேயர்கள் குடும்ப ரீதியாக பல உயர்வு மாற்றங்களை சந்திக்கப் போகிற ஆண்டு.

 மற்றபடி கன்னி ராசிக்கு இந்த ஆண்டில் ஆனி, ஆடி, ஐப்பசி, மார்கழி மாதங்கள் மிகுந்த உயர்வு அதிர்ஷ்டங்களைத் தரப் போகிறது. இந்த ஆண்டில் ஞாயிறு, புதன், வெள்ளிக்கிழமைகள் படுதுாக்கலான உயர்வு நன்மை அதிர்ஷ்டங்களை வழங்கப் போகின்றன.

பெண்கள், மாணவர்கள், கலைஞர்கள், விவசாயிகள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் அனைவருக்கும் புதிய ஏற்றங்களை உண்டாக்குகிற ஆண்டு இது.

துலாம்

துலாம் ராசியினருக்கு இந்த தமிழ் ஆண்டுப் பிறப்பு எல்லா வகையிலுமே பெரிய உயர்வுகளை அதிர்ஷ்டமாக கொடுக்கப் போகிற ஆண்டு. அதோடு எல்லாவித உயர்வுகளும் அற்புதமாக கூடிக் கொண்டே போக இருக்கிற ஆண்டுதான் இது. மற்றபடி எந்த மாதிரியான சங்கடங்கள், உபத்திரங்கள், தொல்லைகள் நீடித்துக் கொண்டிருந்தாலும், அதிலிருந்து வெளிவரப் போகிற ஆண்டுதான். ஆரோக்கிய சிக்கல் எந்த மாதிரியாக உங்களை வாட்டிக் கொண்டிருந்தாலும், அதற்கெல்லாம் நல்லவித நிம்மதி நிவர்த்தி உண்டாகி மகிழ்ச்சிகளை உயர்த்தப் போகிறது. உங்களிடம் எதைச் சொல்லியோ, எதைக் காட்டியோ பணத்தை வாங்கி வைத்துக் கொண்டு காரணமற்ற காரணங்களை சொல்லி இழுத்தடித்துக் கொண்டிருப்பின் அதற்கெல்லாம் துணிச்சலோடு முடிவு கட்டி விட இருக்கிறீர்கள். ஆக எதிரிகளிடம் எதிர்ப்புகளிடம் ஆண்டு பிறந்ததில் இருந்து ஒன்பது தினங்கள் அமைதியை கடைபிடியுங்கள். அந்த அமைதி அவர்களுக்கு ஒரு புது பீதியை உண்டு செய்து உங்களைத் தேடி ஒடி வரச் செய்து விடும் பாதக அதிபதியான சூரியனுக்கு இடம் தந்துள்ளவரும் உச்சமாக இருக்கிறார். அடுத்து குடும்ப சங்கடம் எதன் சார்பாக இருந்தாலும் அதுவெல்லாம் ஒட்டுமொத்த முடிவுக்கு வந்து பூரண மகிழ்ச்சிக்கான விதையை போடப் போகிற ஆண்டு இது.

 பல ஆண்டுகளுக்கு முன்பு முன்தொகை தந்து வாங்கிய சொத்து ஏதும் இன்னும் உங்கள் பெயருக்கு வராமல், பிறரால் எழுதித் தரப்படாமல், பதிவு செய்யப்படாமல் இருப்பின் வருகிற மே மாத 17ம் தேதிக்குப் பிறகு உங்கள் பக்கம் நியாயமாக வந்து சேரப் போகிறது.

அடுத்து தொழில் வியாபார விஷயங்கள் அனைத்தும் புதிய வகையில் மேன்மைகளை கொடுக்கப் போகிற ஆண்டு இது. மற்றபடி புதிய தொழில், வியாபார, பட்ஜெட் திட்டங்கள் அனைத்தும் எதிர்பாராத முன்னேற்றங்களையே தரப் போகிறது. மேலும் உத்தியோக, பதவி, பொறுப்பு விஷயங்களில் வருகிற ஆடி மாதம் தொட்டு புதிய புதிய உயர்வு விசேஷங்கள் நடக்கப் போகின்றன. மேலும் இந்த வருட நாயகன் உங்கள் ராசிக்கு பாக்கிய அதிபனான புதபகவான் ராஜாவாக இருப்பதால், எந்த வகையிலோ திடீர் சொத்து சேர்க்கைகள், புத்திர பாக்கிய வளர்ச்சி, செல்வம், குழந்தைகளால் ஆதாயம், புத்திரர்களால் பெருமகிழ்ச்சியென இரட்டிப்புகளை சந்திக்கப் போகிறீர்கள்.

 மற்றபடி சுபகாரிய, திருமண தாமதங்கள் ஏற்பட்டுக் கொண்டு வரின் அதற்கும் விடிவு காலம் ஏற்படுகிற ஆண்டு. சித்திரை அன்பர்களுக்கு இந்த ஆண்டு துவங்கி 7 மாதங்கள் மிகமிக அதிர்ஷ்டகரமாக உயரும். செல்வ வளம் மேலோங்கும், நினைத்தது நடக்கும், கையிருப்பு சேமிப்புகள் உயரும், ஆண்டுதுவங்கி 6 மாதங்களுக்குள் பலவித உயர்வு திருப்பங்கள் உண்டாகும். தொழில், வியாபார இடமாற்றங்கள் மேம்படும்.

சுவாதி நேயர்கள் வருகிற வைகாசி மாதம் 11ம் தேதி வரை அகலக்கால் திட்டங்கள் போடாமல் காத்திருத்தல் அவசியம். வீண் அநாவசிய ஜாமீன் சிபாரிசு விஷயங்களில் இறங்காமல் இருப்பது நலம். அதன்பிறகு அதிரடியான அதிர்ஷ்டங்களை ஏற்றங்களை கண்டிப்பாக சந்திக்கலாம். இந்த ஆண்டில் ஆடி, ஆவணி, கார்த்திகை, மார்கழி, பங்குனி மாதங்கள் சூப்பர் திருப்பங்கள். துலாம் ராசி அனைவருக்குமே உண்டு. இந்த ஆண்டில் திங்கள், சனி, செவ்வாய்க் கிழமைகள் அற்புதமானவை.

விருச்சிகம்

விருச்சிக ராசி பிரகாரம் இந்த தமிழ்  ஆண்டுப்பிறப்பின் போதே 60 சதவீத சாதக கிரக நிலைகள்தான் நிலவிக் கொண்டிருக்கின்றன. இன்னொரு விஷயம் என்னவென்றால் கடந்த ஜனவரி மாதம் 24ம் தேதி திருக்கணித பரிகாரம் சனிப்பெயர்ச்சி உங்கள் ராசிக்கு 7 1/2யை முடித்துவிட்டது என்று சொன்னதைத் தாண்டி கடந்த பிப்ரவரி மாதம் 8ம் தேதியில் இருந்து ஏகப்பட்ட தடை, இன்னல், பயம், சிக்கல், புதுப்புது தொந்தரவு, பொருளாதார இடையூறு போன்றவைகளை யெல்லாம் அனுபவித்து ஆஸ்பத்திரியில் படுத்து எழுந்து வந்து விட்டீர்கள். இதுவெல்லாம் இன்னும் உங்களுக்கு 7 1/2 முடியவில்லை என்பதால்தான். அதோடு இப்போது ஏதாவது ஒரு நன்மைகளை அடைந்து வருகிறீர்கள் என்றால் அது ராசிக்கு 2ல் அமர்ந்துள்ள உங்கள் யோகநாதன் குருவாலும் அடுத்து ராசிநாதனின் உச்சகதியாலும்தான். ஆக எவ்வளவு இடர்ப்பாடு உங்களை நெருக்கினாலும் சளைக்காத நீங்கள் உங்களுடைய தனிப்பட்ட பராக்கிரமத்தால் ராசிநாதன் தருகின்ற தனி துணிச்சலால்தான் எல்லா விருப்பங்களை எளிதாக பூர்த்தி செய்து கொள்கிறீர்கள். எனவே இந்தப் புத்தாண்டு நல்ல படியாகவே நீங்கள் நினைத்தது போல பலமடங்கு சாதகங்களை கூடுதலாகவே தரப்போகிறது.

ராசிக்கு 8க்கும் 11க்கும் அதிபதியான புதன் கிரகம் இவ்வருட ராஜா பதவியை அடைந்திருப்பதால், கஷ்டங்கள் அனைத்துக்கும் விடுதலை யுண்டு. இடையூறு ஏற்படாத மகிழ்ச்சிகளுண்டு. போட்டி பொறாமை யில்லாத வாழ்க்கை நடைமுறை உண்டு. திட்டமிட்டு இருப்பதில் எவ்வித சச்சரவுகளும் முளைக்காது. ஒவ்வொரு பொழுதும் இனிமை யாகவே கரையப் போகிறது. வீண்தொந்தரவுகளுக்கு வேலையே இல்லை.மேலும் ராசிக்கு பாக்கிய அதிபதியான சந்திர கிரகம் இவ்வருடம் சேனாதிபதி பொறுப்பை ஏற்றுள்ளதால் சொத்து சம்பந்தப்பட்ட எவ்வித வில்லங்கம் என்றாலும் உடனுக்குடன் சரி செய்யப்படும். வருகிற மார்கழி 12ம் நாளான டிசம்பர் மாதம் 26ம் தேதி சனிப்பெ யர்ச்சியாக இருப்பதால் உங்களது துயரங்கள் விடுபட ஆரம்பித்து விடும். இந்த ஆண்டு முடிவதற்குள் இழந்த சொத்துக்கள் மீண்டும் உங்களிடமே வந்து சேர்ந்துவிடும்.

நிர்வாகம், தொழில், வியாபாரம் போன்றவற்றில் நீடித்த சச்சரவுகள், இழப்புகளுக்கு இந்த ஆண்டே முடிவைத் தர காத்திருக்கிறது. அதுபோல உத்தியோகம், பதவி, பொறுப்பு, பணிகளில் என்னென்ன தொந்தரவுகள், சக ஊழியர்களால் இடையூறுகள் ஏற்பட்டுள்ளதோ அதற்கெல்லாம் இந்த ஆண்டின் ஆனி மாதத்துக்குள் நல்லபடியான திருப்பம் ஏற்பட்டு விட இருக்கிறது. மற்றபடி விசாக நேயர்களுக்கு சனிபகவானின் யோக அதிர்ஷ்ட கொடுப்பினைகள் ஆரம்பித்துவிட்டதால் ஆண்டு துவக்கமே ஒரு புதிய, பெரிய உயர்வுப்பாதையில் கொண்டு வந்து நிறுத்திய பின்னரே ஆரம்பமாகி இருக்கிறது.

மற்றபடி இந்த ராசிப்பெண்மணிகளுக்கு மிகமிக அட்டகாசமான புதிய பொலிவு, செல்வ சேர்க்கை இல்லத்துக்குள் சுபகாரிய திருமண வைபவங்கள் போன்றவற்றை ஏற்படுத்துகிற ஆண்டு. மேலும் இந்த ராசி மாணவர்கள், கலைஞர்கள், விவசாயிகள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் அனைவருக்கும் வருகிற ஆடி மாதம் அதாவது ஆகஸ்ட்மாதம் 13ம் தேதிக்குப் பிறகு ஏகபோக சந்தோஷ உயர்வுகள் காத்துள்ளன.மேலும் இவ்வருட ஆவணி, ஐப்பசி, மார்கழி, பங்குனி மாதங்கள் வெகு அற்புதமானவை. அடுத்து இந்த வருடத்தில் வருகிற வியாழன், சனி, செவ்வாய்க் கிழமைகள் அதிர்ஷ்டத்தை தரப்போகிறவை.

தனுசு

தனுசு ராசியினருக்கு  பலவித விடிவுகாலத்தை உண்டாக்கப் போகிற புத்தாண்டு இது. ராசிக்கு 7 மற்றும் 10ம் வீட்டுக்கு அதிபதியான உங்கள் ராசிக்கு செல்வ ஸ்தான அதிபனான புதன் கிரகம் இந்த ஆண்ட ராஜா பொறுப்பை ஏற்றுள்ளதால், எல்லா இடர்ப்பாடுகளையும் தாண்டி ஏற்றங்களை மட்டுமே அதிர்ஷ்டங்களோடு அடையப் போகிறீர்கள். இதுவல்லாமல் இந்த ஆண்டில் நான்கு கிரகப் பெயர்ச்சிகள் ஏற்படப் போகிறது. அதாவது ஜென்ம கேதுவும், கண்டக ராகுவும் இடம் மாறப் போகிறார்கள். அதாவது உங்கள் ராசிக்கு நல்ல இடத்தில் வந்து அமரப் போகிறார்கள். இது நடக்கப் போவது வருகிற ஆவணி மாதத்தில். அடுத்ததாக ஜென்ம குருவாக இருந்து வருகிற ராசிநாதன் வருகிற ஐப்பசி மாதம் தன ஸ்தான குருவாக மாறப் போகிறார். 3வதாக இப்போது ராசிக்குள் அமர்ந்து ஜென்ம சனியாக நின்று உங்களைப் போட்டு புரட்டி எடுத்து வருகிற 7 1/2யின் இரண்டாம் பாகம் முடிந்த ராசியை விட்டு சனிபகவான் கழலப் போகிறார். அதாவது 2ம் வீடான மகரத்தில் வந்து அமரப் போகிறார். இது நடக்கப் போவது இந்த ஆண்டு மார்கழி 12ம் தேதி. ஆக உங்களது ஒட்டுமொத்த கிரகமுமே இந்த சார்வரி ஆண்டு இறுதிக்குள் முடிவுக்கு வரப் போகிறது. அதுவரை வருகிற வைகாசி மாதம் சூரிய கிரகம் காப்பாற்று வார் உங்களது சில பல இக்கட்டுகளில் இருந்து.

அடுத்து சித்திரை மாதம் 17ம் தேதிக்குப் பிறகு 3ம் இடத்தில் வந்தமரப் போகும் செவ்வாய்க் கிரகம் வருகிற வைகாசி மாதம் வரை நல்ல பல முன்னேற்றங்களை கொடுத்து சிரமங்களில் வெளிவரச் செய்து பொருளாதார வகையில் திடீர் ஏற்றத்தினை உண்டாக்கிக் கொண்டே இருப்பார்.

மற்றபடி சந்திர கிரகம் உங்கள் ராசிக்கு ஒவ்வொரு மாதமும் 12 தினங்களுக்குப் பிறகு தொடர்ச்சியாக புதிய ஏற்றத்தினை, எதிர்பாராத வளர்ச்சி அதிர்ஷ்டத்தினை கொடுத்து நகர்த்தப் போகிறார். ஆக எப்படிப் பார்த்தாலுமே இந்த ஆண்டு துவக்கத்தில் குருபகவான் ராசிக்கு 2ல் 5க்குடைய செவ்வாயுடன் இணைந்து அதிசார வக்ர நிலையில் இருப்பதால் பொருளாதார நிலைமைகளில் பலவித எதிர்பாராத ஏற்றங்கள் உண்டு. சேமிப்பு களுக்கும் வாய்ப்பு. அதிர்ஷ்ட வாய்ப்புகளுக்கும் இடமுண்டு. திடீர் உயர்வுகளுக்கும் வழியுண்டு. மண், மனை, பூமி, இத்யாதிகளால் உயர்வுண்டு. நினைத்தது அனைத்துமே நிறைவேறி விடுகிற பாக்கிய முண்டு. இந்த ராசியின் மூலம் நட்சத்திர நேயர்கள் இந்த ஆண்டில் கேது கிரகத்தாலும், உத்திராடம் நேயர்கள், குரு கிரகத்தாலும், பூராடம் அன்பர்கள் சனிக்கிரகத்தாலும் வருகிற ஆடி மாதம் வரை அனுகூலங்களை, அதிர்ஷ்ட முன்னேற்ற திருப்பங்களை சந்திக்க இருக்கிறார்கள்.

 மற்றபடி தொழில், வியாபாரம், கொடுக்கல் வாங்கல், நிர்வாகம், பட்ஜெட் முதலீடு விஷய இடர்ப்பாடுகள் அனைத்தும் வருகிற வைகாசி மாதம் 10ம் தேதிக்குப் பிறகு சரியாகிவிடும். அடுத்து உத்தியோகம், பதவி, பொறுப்பு விஷயங்களில் ஆவணி முதல் எதிர்பார்க்கும் உயர்வுகளை அடையலாம். அடுத்து பயண விஷய தடைகள் இருப்பின் அதற்கும் அனுகூல சாதகம் ஏற்படுகிற ஆண்டு தான்.  மாணவர்கள், விவசாயிகள், கலைஞர்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் அனைவரும் வருகிற ஆனி மாதம் 6ம் தேதிக்குப் பிறகு எண்ணற்ற ஏற்றங்களை சந்திப்பார்கள். இந்த ஆண்டில் வைகாசி, ஆவணி, புரட்டாசி, கார்த்திகை மாதங்களே எதற்கும் சிறந்தவை. இந்த ஆண்டில் வருகிற ஞாயிறு, வியாழன், வெள்ளிக் கிழமைகள் நினைவில் வைத்துக் கொள்ளக்கூடிய உயர்வான கிழமைகள்.

மகரம்

மகர ராசி வாசகர்களே, இந்த ஆண்டில் உங்கள் ராசிக்கு 6க்கும், 9க்கும் உடைய ஒருபுறம் மிகப்பெரிய ராஜயோக அதிபதியான புதன் கிரகம் இவ்வருட ராஜா பொறுப்பை ஏற்றுள்ளதும், அடுத்தபடியாக ராசிக்கு சப்தம ஸ்தான அதிபனான சந்திர கிரகம் சேனாதிபதி பதவியை அடைந்திருப்பதும் இந்த ஆண்டில் தடாலடி திருப்திகளை ஏகபோகமாகவே அனுபவிக்கப் போகிறீர்கள். அத்துடன் புத்தாண்டு துவக்கத்தில் ஆட்சி நிலையில் நிற்பதும், வெகு சிறப்பான மகிழ்ச்சி உயர்வு தொடக்கங்களை தரப் போகிற ஆண்டு என்று திட்ட வட்ட மாகவே சொல்லிவிடலாம்.

இந்தாண்டு உங்கள் ராசிக்கு மறைமுக, சூட்சும ராஜயோக அதிபர்கள் லாப அதிர்ஷ்ட, பூர்வ புண்ணிய, சொத்து தனவரவு ஸ்தானங்களுக்கு மாறப்போவதே மிகப்பெரிய யோக அமைப்பு. அவர்கள் ராகு கேதுக்கள். அடுத்து ராசிக்கு கெட்டவர்களான குருவும், செவ்வாயும் நீசபங்க ராஜயோக நிலையோடு ஆண்டுத் துவக்கத்தில் இருப்பது வெகு திருப்திகரமான யோக அமைப்பு. இதனால் பணம், பொருள், காரிய பலித வெற்றி சந்தோஷக் கூடுதல்கள் நிறையவே காத்துள்ளது தொடர்ச்சியாக. இவ்வாண்டு உங்களது எல்லாவித சிரமங்களையும் விரட்டவே வந்துள்ளது இந்த ஆண்டு.

 அடுத்ததாக இந்த ராசி நேயர்கள் இப்போது வயது 36ல் இருந்து 47 வயதுக்குள் இருப்பின் அல்லது 50 வயதே நடந்து கொண்டிருப்பினும் எவ்வித தொல்லை தொந்தரவு இடைஞ்சல், பற்றாக்குறை சிரமங்களை, பிரச்னைகளை சந்திக்காமல் அதிரடியான உயர்வு களுடன் அமைதியாகவே வாழ்க்கை வண்டி சிறப்பாக ஓடிக் கொண்டி ருக்கும்.

மகர ராசியினரை இப்போது எவ்வித சிரமங்கள் எதிர் கொண்டிருந்தாலும் ராகு கிரகம் 6ல் நின்று துாள்துாளாக்கிக் கொண்டுதான் வருகிறது. ஆக இவர் 6ல் இருக்கும் வரை இந்த ராசியினரை எந்த எதிர்ப்பும், எதிரியும் ஒன்றும் செய்துவிட முடியாது. ஆக கவலைப்படாமல் இருக்கலாம். ஆரோக்கிய தொல்லைகள் எதுவாக இருந்தாலும் டாடா காட்டி விடலாம். வீண் எதிர்ப்பு வம்பு தும்பு கடன், கொடுக்கல், வாங்கல் சச்சரவுகள் எந்த ரூபத்தில் இருந்தாலும் வருகிற வைகாசி மாதம் 4வது வாரத்தில் தொல்லைகள் அனைத்தும் விடிவுக்கு வந்துவிடும். மேலும் இந்த ஆண்டின் ஆனி மாதம் மகர ராசியினருக்கே ஒரு மாபெரும் உயர்வு, அதிர்ஷ்டங்களை தடாலடியாக எதிர்பாராதவிதத்தில் கொடுக்கப் போகிறது.

சுபகாரிய விஷயங்கள், திருமணம், சுபசடங்கு, ஆன்மிக பிரார்த்தனை வேண்டுதல்கள் திட்டமிட்டபடி நிறைவேறிவிடும். தொழில், வியாபார, உத்தியோக, நிர்வாக, முதலீடு பட்ஜெட், பதவி, பணி, வேலை போன்றவற்றில் எதிர்பார்த்து இருக்கிற உயர்வுகள் வருகிற மே மாதம் 14 முதல் ஜூலை மாதம் 6ம் தேதிக்குள் நிறைவேறி விடும். திருவோண நேயர்களுக்கு இந்த ஆண்டு பொன்னான ஆண்டு. அடுத்து ஆண்டுத் துவக்கமே அவிட்ட நேயர்களை மாபெரும் மகிழ்ச்சி, அதிர்ஷ்ட உயர்வுக் கடலில் இறக்கிவிட்டு விட்டே துவக்கமாகி உள்ளது. இந்த ஆண்டில் ஆனி, ஆடி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை மாதங்கள் வெகு லாபகர உயர்வுகளை தரப் போகிறது. இந்த ஆண்டில் செவ்வாய், புதன், சனிக்கிழமைகளில் பண உயர்வு, எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் துாக்கலாகவே கிடைக்கப் போகின்றன.

 மாணவர்கள், விவசாயிகள், கலைஞர்கள் அடுத்து வருகிற 5 மாதங்களுக்குள் எண்ணற்ற உயர்வு பிராப்தங்களை சந்திப்பார்கள். அரசியல்வாதிகள் வருகிற புரட்டாசிக்குப் பிறகுதான் சாதிப்பார்கள்.

கும்பம்

கும்ப ராசியினர் இந்த ஆண்டு பலவித எண்ணற்ற வளர்ச்சி அதிர்ஷ்ட அனுகூலங்களை பல ரூபங்களில் அனுபவிக்கப் போகிறார்கள். உங்கள் ராசியின் பூர்வ புண்ணிய அதிர்ஷ்ட ஸ்தான அதிபனான புதன்பகவான் இவ்வருட ராஜபொறுப்பை ஏற்று இருப்பதும், ஆண்டு துவக்கத்தில் ராசிக்கு செல்வ ஸ்தான அதிபன் உச்சமாக பயணித்துக் கொண்டு இருப்பதும், 2, 10, 11க்குடைய கிரக சேர்க்கை ஏற்பட்டிருப்பதும் 8க்குடைய கிரகம் ஆண்டுத் துவக்கத்தில் 2ல் நிற்பதும் இதுவல்லாமல் இந்த ஆண்டு உங்கள் யோக ராசியான துலாம் லக்னத்திலும், யோக அதிபனின் நட்சத்திரமான பூராடத்தில் உதயமாவதும் மெய்சிலிர்க்கிறது உங்களுக்கு உண்டாகப் போகிற அதிர்ஷ்ட திருப்புமுனைகளை நினைத்து.

அத்துடன் ஆண்டு துவக்க இரு நாட்கள் லாப சந்திரன். இதனால் உங்களுக்கு இவ்வாண்டில் கிடைக்கப் போகும் உயர்வு, சன்மானம், உத்தியோகம், வேலைவாய்ப்பு, பணபலம், கடன் முடிவு, வழக்கு விடிவு எல்லாவற்றுக்குமே ஒரு புதிய வெளிச்சம் இப்போதே கண்களுக்கு தெரிய ஆரம்பித்து விடும்.

அதோடு ஆரோக்கியம் பற்றி எந்த கவலையுமே பட வேண்டியதில்லை. மற்றபடி குடும்ப வகையில் எது மாதிரியான சச்சரவுகள், ஒற்றுமைக்குறைவு ஏற்பட்டாலும், இதற்கு முன்னர் இருந்தாலும் அதற்கும் சட்டென்று ஒரு தீர்வு கிடைத்து வருகிற ஆண்டு. இதற்கு முன்னர் கடந்து போன ஆண்டுகள் போல் இல்லாமல் இவ்வாண்டு ஏகப்பட்ட பரபரப்பு உயர்வுகளை உங்களை சொடுக்கி விட்டு தரப்போகிற ஆண்டு இது. அதோடு பார்த்து வருகிற உத்தியோக, பதவி, பொறுப்பு, பணி, வேலை இடத்தில் என்னென்ன சச்சரவுகள் உங்களுக்கே தெரியாமல் ஏற்பட்டிருக்கிறதோ, அதற்கெல்லாம் முடிவு கட்டப்பட இருக்கிற ஆண்டு இது. அடுத்து புதிய தொழில் வியாபார, பட்ஜெட் நிர்வாக முதலீடு விஷயங்களில் உயர்வுகளுக்கான வழிபிறக்க ஆரம்பித்து விடும்.

கடன் விஷயங்கள் பாதிப்புக்கு உள்ளாக்காது. வருகிற ஆடி மாதம் எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் புதையல் போல கிடைக்கக்கூடிய ஆண்டு இது. மேலும் சொத்துபத்து ரீதியான வழக்கு பஞ்சாயத்து சங்கடங்களுக்கு எவரோ ஒரு சாதகமான நபர் கிடைத்து அதற்கான ஒழுங்கான தீர்வு ஏற்படப் போகிற ஆண்டு. பணத்தட்டுப்பாடு, இழப்பு, நஷ்டம் போன்ற விஷயங்களுக்கும் கண்டிப்பாக தீர்வுண்டு. அத்துடன் இந்த ஆண்டு அவிட்ட நேயர்களுக்கு முதல் தர அதிர்ஷ்டத்தினையும் பூரட்டாதிக்கு 2வது நிலை யோகத்தினையும் தரப்போகிற ஆண்டு இது. சதய நட்சத்திர அன்பர்களுக்கு இந்த ஆண்டு துவங்கி வருகிற ஆவணி மாதம் முதல் எண்ணற்ற உயர்வு அதிர்ஷ்டங்களை சந்திக்கப் போகிறார்கள்.

சுபகாரிய மேன்மை, திருமண ப்ராப்த அனுகூலம், சந்தான பாக்கிய உயர்வு, வாரிசுகளுக்கான மற்ற பிற சுப சடங்குகள் எல்லாம் நினைத்தபடியே நிறைவேறுகிற ஆண்டுதான் இது. பெண்மணிகளுக்கு வெகு அற்புதமான உயர்வு ஆண்டு. மாணவர்கள் புதிய நுணுக்கத்தோடு உயர்க்கல்வியில் நுழையப் போகிற ஆண்டு. கலைஞர்கள் நுாதனமான கலைப் படைப்புகளை தரப் போகிறார்கள். விவசாயிகள் வருகிற வைகாசிக்குள்ளாகவே அடுத்தக்கட்ட உற்பத்திக்கு மும்முரம் காட்டி லாபம் பார்க்க இருக்கிறார்கள். மற்றும் இந்த ராசி அரசியல் அன்பர்களுக்குத் தான் கொஞ்சம் சிரமமாக இருக்கலாம். இந்த ஆண்டில்  வைகாசி, ஆடி, கார்த்திகை மாதங்களும் திங்கள், செவ்வாய், சனிக்கிழமைகளும் ஏகப்பட்ட அற்புத உயர்வு முன்னேற்றங்களை கொடுக்கப் போகிற ஆண்டு.

மீனம்

மீன ராசியினரான உங்களுக்கு எந்த மாதிரியான மனக்கிலேசத்துடன் இந்தத் தமிழ்ப்புத்தாண்டு ஆரம்பித்து இருந்தாலுமே, உங்களுக்கு எந்தக் குறையையுமே உண்டாக்காதபடிதான் இந்த ஆண்டின் கிரக நிலைகள் வெகு சூப்பராக சுழலப் போகிறது. அதோடு உங்கள் ராசிக்கு சுக சப்தம அதிபனான புதன் பகவான் இந்த வருட ராஜாவாக ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளதாலும், ராசிக்கு 5க்குடைய கிரகமான சந்திரன் சேனாதிபதி பொறுப்பை பெற்றுள்ளதாலும், இந்த ஆண்டு முழுதும் நீங்கள் நினைப்பது மட்டுமே நடக்கப் போகிறது. அதோடு குடும்ப வகை ஏற்றங்கள் தானாக உயர்ந்து கொண்டு வரப்போகிறது. ஆரோக்கிய சம்பந்த எந்த வகை பீதியாக இருந்தாலும் அதுவெல்லாம் தானாக பறந்துவிடும்.

ஆண்டின் துவக்கத்தில் தனகாரகனான ராசிநாதன் லாப ராசியில் நீசமாகவும், அதேநேரம் 2, 9க்குடைய கிரகத்துடனும் சேர்ந்து நின்றிருப்பதால் பொருளாதார சம்பந்தமான உயர்வுகள், பணபலம், உயர்தர ஆடை ஆபரண சேர்க்கை, வாகன ஆசை நிறைவேறுதல் போன்ற எண்ணற்ற சுபிட்ச பலன்கள் வருகிற ஜூலை மாதம் 3ம் தேதிக்குள் வெகு அதிர்ஷ்டகரமாக நடந்தேறப் போகின்றன.

 குழந்தை பாக்கிய ஏக்கம் முற்றிலுமாக தீரப்போகிற ஆண்டும் இதுவே. வயது கடந்து கொண்டிருக்கும் பூரட்டாதி பெண்களுக்கு இனிய சுபிட்சம் ஏற்படப் போகிறது. திருமணமும் விரைவில் நடந்தேறப் போகிறது.

 ரேவதி நேயர்களுக்கு இந்தஆண்டு பொன்னாக முன்னேற்றம் தரப்போகிற ஆண்டு. காரணம் நட்சத்திர அதிபன் இந்த ஆண்டில் கோலோச்சப் போகிறார். உத்திரட்டாதி நேயர்களுக்கு ஆண்டு துவங்கி 98 தினங்கள் வரை சிறப்பு அதிர்ஷ்ட மேன்மைகள் காத்திருக்கிறது. பூரட்டாதி நேயர்கள்  9 மாத கால பிரச்னை, தடங்கல், பொருளாதார இழப்பு, விரயம், நஷ்டம் போன்றவைகளில் இருந்து மகிழ்ச்சிகரமாக பரிபூரண முன்னேற்றத்தை இந்த ஆண்டு துவங்கி வைகாசி மாதம் 11ம் தேதியில் இருந்து சந்திக்கப் போகிறார்கள். மற்றபடி பொதுவாக மீன ராசிக்கு இந்த ஆண்டில் புதுப்புது வளர்ச்சிகள் பெரியளவில் காத்துள்ளன. தொழில், வியாபார, நிர்வாக, முதலீடு, பட்ஜெட் விஷய பாதிப்புகள் நீங்கி அதைவிட பெரியளவு வெற்றி முகாந்திரங்களை சந்திக்கக்கூடிய ஆண்டு. உத்தியோக, பதவி, பொறுப்பு, புதிய பணி வேலைவாய்ப்பு விஷயங்களில் இனி மேல் பெரிய வளர்ச்சி கண்டிப்பாக உண்டு.

மீன ராசிக்கு எது சம்பந்த பிரச்னை, கடன், கண்ணி, வம்பு, வழக்கு, கோர்ட், பஞ்சாயத்து இத்யாதிகள் நீடித்துக் கொண்டிருந்தாலும் அதுவெல்லாம் வருகிற ஆவணி மாதத்துக்குள் முடிவுக்கு நல்லபடியாக வந்துவிடும். குறிப்பாக மீன ராசி பெண்களுக்கான அதிர்ஷ்ட ஆண்டு.

இந்த ராசி மாணவர்கள் அரசாங்கத்தால் விருது பெறப் போகிற ஆண்டு. விவசாயிகள் கடந்த விகாரி வருட மார்கழியில் இருந்தே வெகு அருமையான உயர்வுகளில் இருக்கிறார்கள். அது இன்னும் மேன்மையடையும். கலைஞர்களும், அரசியல்வாதிகளும் வருகிற ஆடி மாதம் முதல் சிறப்பு உயர்வுகளை சந்திப்பார்கள். மற்றபடி இவ்வாண்டு வைகாசி, ஆடி, புரட்டாசி, மார்கழி மாதங்கள் மீன ராசிக்கோ உரிய அதிர்ஷ்ட மாதங்கள். இந்த ஆண்டில் வருகிற சனி, புதன், செவ்வாய்க் கிழமைகளில் அதிரடி பணவரவு, திடீர் அதிர்ஷ்டங்களை கொடுத்து வருகிற 2020 ம்ஆண்டு  அக்டோபருக்குள் மீனத்துக்கு அபிரிமித உயர்வு காத்திருக்கிறது.