வியாழன்
உங்கள் ஜாதகத்தில் கிரக நிலையும் பரிகார கடவுளும்.
சத்தியபுரி ஜோதிட மாமணி மு. திருஞானம்
‘குரு பார்க்க கோடி நன்மை’ என்று ஜோதிட நூல் குறிப்பிடும் வகையில் சுபகிரகங்களில் தலைமை ஸ்தானத்தை பெறுபவர் வியாழன். நவகிரகங்களில் குரு என்று குறிப்பிடப்படும் வியாழன் கிரகம் வடதிசை நோக்கி வீற்றிருப்பார். தேவர்களின் குரு என்ற பதவியில் இருந்தவர். பிரகஸ்பதி என குறிப்பிடுவார்கள்.
அசுரர்களின் ராஜகுரு சுக்கிராச்சாரியா என்றால், தேவர்களின் ராஜகுரு பிரகஸ்பதி ஆவார்.
குரு ஒரு ராசி வீட்டில் ஓர் ஆண்டு சஞ்சாரம் செய்வார்.
பன்னிரண்டு ராசிகளை சுற்றி வர அவருக்கு 12 ஆண்டுகள் ஆகும். அதனால்தான் பன்னிரண்டு ஆண்டுகளை ஒரு ‘மாமாங்கம்’ என குறிப்பிடுவார்கள்.
குருவின் ஆட்சி வீடாக தனுசு ராசியும் - மீன ராசியும் இருக்கின்றன.
குருவுக்கு கடக ராசி - சந்திரன் வீடு - உச்ச ராசியாகும். பலம் அதிகம்.
குருவுக்கு மகரம் ராசி சனி வீடு - நீசம் வீடாகும்.
அதே போல் 27 நட்சத்திரங்களில் புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய மூன்று நட்சத்திரங்களும் குருவின் ஆதிக்கம் பெற்ற நட்சத்திரங்கள் ஆகும். ஒரு குழந்தை பிறக்கும் பொழுது இந்த மூன்று நட்சத்திரங்களில் எந்த நட்சத்திரத்தில் பிறந்தாலும் - ஆரம்ப திசா குரு மகா திசாதான்.
பிறந்த நேரத்தை பொறுத்து நட்சத்திரத்தின் பாதசரத்தை வைத்து அதன் இருப்பு திசா எவ்வளவு என்பதை கணிக்க வேண்டும். குரு என்று குறிப்பிடப்படும் வியாழன் திசா மொத்தம் 16 ஆண்டுகள் ஆகும்.
மார்கழி மாதம் தனுர் மாதம், அதாவது சூரியன், தனுசு ராசியில் சஞ்சரிப்பார்.
பங்குனி மாதம், மீனம் மாதம் அதாவது சூரியன் மீன ராசியில் சஞ்சரிப்பார். குருவின் ஆட்சிக்குரிய தனுசு, மீனம் ஆகிய இரு ராசிகளும், உபஜெயராசிகளாகும்.
உச்ச வீடு கடகமும், நீசவீடு மகரமும் ஸர ராசிகளாகும்.
குருவுக்கு தான் நின்ற இடத்தில் இருந்து, 5, 7, 9ம் பார்வைகள் உண்டு.
குரு தான் நிற்கும் ராசியைவிட பார்க்கும் ராசிக்கும் அந்த ராசியில் நிற்கும் கிரகத்திற்கும் யோகங்களை அள்ளி வழங்குவார். சூரியன், குரு, சுக்கிரன் ஆகிய மூன்று கிரகங்களுக்கும் பகல் வேளையில் அதிக பலம் உண்டு. குரு புத்திரகாரகன் என்ற அந்தஸ்துக்குரியவர்.
குருவிற்குரிய தனுசு ராசி ஒற்றை ராசி, அதாவது ஆண் ராசி. மீனம் ராசி இரட்டை ராசி, அதாவது பெண் ராசி யாகும்.
குரு கிரகத்தை குறிக்கும் பெயர்கள் பல உண்டு. வியாழன், பிரகஸ்பதி, அந்தணன், அரசன், அமைச்சன், ஆசான், பொன்னன், தேவகுரு போன்றவையாகும்.
குரு கிரகத்திற்குரிய தெய்வ மந்திரங்கள் கந்த சஷ்டி கவசம், தட்சிணாமூர்த்தி தோத்திரம் அல்லது ஸ்லோகம் –
குரு கிரகத்தின் பகை வீடுகள் - ரிஷபம், மிதுனம், துலாம்,
குரு கிரகத்தின் நட்பு வீடுகள் - மேஷம், சிம்மம், கன்னி, விருச்சிகம்.
குரு கிரகத்தின் அதிதேவதை - பிரம்மா, தட்சிணாமூர்த்தி.
குரு கிரகத்திற்குரிய திக்கு ஈசான்யம் (வடகிழக்கு) –
குரு கிரகத்தின் நாடி - வாத நாடி. நோய் - வாத நோய்.
குரு கிரகத்தின் வடிவம் - உயரமானவர்.
குரு கிரகத்தின் நிறம் - மஞ்சள் நிறம், பொன் நிறமாகும்.
குரு கிரகத்திற்குரிய தூபதீபம் - ஆம்பல்,
குரு ஆண் கிரகம்,
குரு கிரகத்தின் ஆதிக்கம் பெற்ற உடல் உறுப்புகள் - இருதயம்.
குரு கிரகத்திற்குரிய ரத்தினம் - புஷ்பராகம்.
பஞ்ச பூதங்களில் அதாவது 5 சக்திகளில் குருவுக்குரியது தேயு. குரு கிரகத்திற்குரிய க்ஷேத்திரம் ஆலங்குடி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்
குரு கிரகத்திற்குரிய சமித்து - அரசு.
குரு கிரகத்திற்குரிய புஷ்பம் - முல்லை.
குரு கிரகத்திற்குரிய உலோகம் - பொன் (தங்கம்).
குரு கிரகத்திற்குரிய வஸ்திரம் - மஞ்சள் துணி.
குரு கிரகத்தின் சுவை - தித்திப்பு, இனிப்பு
குரு கிரகத்திற்குரிய தானியம் - கொண்டை கடலை,
குரு கிரக குணம் - சவுமியர்,
குரு கிரக வாகனம் - யானை, குரு கிரக ஜாதி - பிராமணன்.
குரு என்ற வியாழன் கிரகத்தின் காரகத்துவங்கள் :
புத்திகாரகர், புத்திரர், பிரம்மா, ஞானம், அஷ்டமாசித்துகள், உபதேசம், புத்தி, யுக்தி, யோகப் பயிற்சிகள், ஆசா னாயிருத்தல், உபதேசம், விவகார ஆலோசனை, அரச பதவி, குடும்பத்தலைவன், அரசு சேவை, செல்வம், செல்வாக்கு, ஒழுக்கம், அரச வெகுமதி, பட்டங்கள், விருதுகள், சுருதி, ஸ்மிருதி, ஆன்மிக நெறிகள், ஆன்மிக ஒழுக்கம், சாந்தம், தங்கம், வைடூரியம், புஷ்பராகம், கோமேதகம், மலர் வகைகள், கனி வகைகள், இனிப்பு, கண்கள் - சுற்று வர்க்கம் - சித்தர் பரம்பரை, ரிஷி வர்க்கம், தேன், கடலை, சீரகம், தனம், மேற்குறிப்பிட்ட விஷயங்கள் அனைத்திற்கும் - குரு காரகத்துவம் பெறுகிறார்.
குரு கிரகத்திற்குரிய காயத்ரி மந்திரம் :
ஓம் விருஷபத் வஜாய வித்மஹே
க்ருணி ஹஸ்தாய தீமஹி
தந்தோ குருஷ் ப்ரசோதயாத்
இந்த காயத்ரி மந்திரத்தை நவகிரகங்களில் குருவுக்கு முன்பாக 3 முறை, 12 அல்லது 21 முறை சொல்லி வழிபட்டால் தோஷங்கள் விலகும். நற்பலன்கள் கிடைக்கும்.
* நீண்ட ஆயுள் உண்டாகும்.
* அஞ்ஞானம் அகலும்.
* அரச பதவிகள் கிடைக்கும்.
* வறுமை நீங்கும்.
* மெய்ஞானம் உண்டாகும்.
* சேமிப்பு வளரும்.
* உடல் வலிமை உண்டாகும்.
* உள்ள வலிமை உண்டாகும்.
* சாதனைகள் புரிய வாய்ப்பு உண்டாகும்.
* வித்தைகள் வளரும்.
இவை போன்ற பலன்கள் கிடைக்கும்.
குரு அந்தணர்களுக்கும், பசுக்களுக்கும் ஆதிமூலமாக இருப்பவர். நன்மைகள் வழங்குவதில் நவகிரகங்களில் முதன்மையானவர். சொல்லுக்குத் தலைவர். எல்லா தேவர்களாலும் வழிபடப்பட்டவர். தனது ஒரு கரத்தில் வஜ்ராயுதத்தை ஏந்தி இருக்கிறார். பரை, பைசந்தி, மத்திமை, வைகரி என்னும் நால்வகை வாக்குகளின் உருவை விளக்குபவர்.
குரு 12 ராசிகளில் கேந்திரஸ்தானங்களுக்கு ஆதிபத்யம் பெற்றவராக இருந்தால் கேந்திராபத்ய தோஷம் பெறுகிறார் - பாவ கிரகங்களுடன் இணைந்தால் சண்டாள தோஷம் பெறுவார். நீசம் பெற்றாலோ, வக்கிரம் பெற்றாலோ தோஷம் பெறுவர்.
குருதோஷம் பெற்றிருந்தால் பரிகாரங்கள்: -
* வியாழக்கிழமைதோறும் விரதம் இருக்க வேண்டும்.
* தட்சிணாமூர்த்தியையும், நவகிரகங்களில் உள்ள குரு பகவானையும் நினைத்து வணங்கி வர வேண்டும்.
* மஞ்சள் நிற உடை அணியலாம்!
* சாதுக்களுக்கு தானம், தர்மம் செய்தல் அவசியம்.
* மஞ்சள் பூ பூக்கும் மரங்களுக்கு தினமும் தண்ணீர் ஊற்ற வேண்டும்.
* ஒழுக்கமாக வாழ வேண்டும்.
* ஏழைகளுக்கு இனிப்பு வழங்க வேண்டும்.
* வயதானவர்களுக்கும், பெரியவர்களுக்கும் உதவி செய்ய வேண்டும்.
* திருக்கோயில்களை சுத்தம் செய்தல், உழவாரப் பணி செய்ய வேண்டும்.
* வேதியர்களுக்கும், பெரியவர்களுக்கும் உடை தானமாக கொடுக்க வேண்டும்.
* தங்க மோதிரம் அணியலாம்.
* தானம், தர்மம் கேட்பவர்களுக்கு இல்லையென்று கூறாமல் முடிந்த அளவு உதவி செய்தல் வேண்டும்.
* யாரையும் ஏமாற்றுதல் கூடாது!, பொய் சாட்சி சொல்லுதல் கூடாது!
இவற்றையெல்லாம் இதய சுத்தியுடன் செய்தால், குரு கிரகத்தால் ஏற்பட்ட தோஷங்கள் விலகும்.
குரு கிரகத்திற்குரிய தமிழ் மந்திரம்:-
1) குணமிகு வியாழ குரு பகவானே
மணமுடன் வாழ மகிழ்வுடன் அருள்வாய்!
வியாழ பரகுரு நேசா.... கிரக தோஷமின்றி
கடாட்சித் தருவாய்!
2) மறைமிகு கலை நூல் வல்லோன்
வானவர்க்கரசன் நறைசொரி
கற்பகப் பொன் நாட்டிற் கதிபனாகி
நிறை தனம் சிவிகை மண்ணின்
வீடுபோகத்தை நல்கும் இறையவன்
குரு வியாழன் இருமலர் பாதம் போற்றி!
சுபவேளை என்று குறிப்பிடப்படும் ஹோரையில் குருஹோரை முதன்மை இடத்தை பெறுகிறது. எனவே,
எந்த ஒரு காரியத்தையும் குருஹோரையில் செய்வது உத்தமமாக இருக்கும்.
நியூமராலஜி, எண் கணித சாஸ்திரப்படி குருவுக்குரிய எண் - 3.
அதனால் ‘குருபிரம்மா, குருவிஷ்ணு, குருதேவோ மஹேஸ்வராய’ என மூன்று தெய்வங்களையும் குருவாக ஏற்று இந்த மந்திரத்தை மூலமந்திரமாக சொல்வார்கள்.