கிரகங்கள்

புதன்

உங்கள் ஜாதகத்தில் கிரக நிலையும் பரிகார கடவுளும்.

சத்தியபுரி ஜோதிட மாமணி மு. திருஞானம்

கல்வி, ஞானத்தை வழங்கும் வித்யாகாரகன் புதன். நவகிரகங்களில் சுபகிரக அந்தஸ்து பெற்ற புதன் கிரகம், உபஜெய ராசிகளான மிதுனம், கன்னி ஆகிய இரண்டு ராசிகளுக்கும் சொந்தக்காரர். இதில் கன்னி ஆட்சி, உச்சம் என்ற இரு அந்தஸ்துக்குரிய ராசியாகும்.

மாதுலகாரகன் என்று குறிப்பிடப்படும் புதன் - அம்மான், கல்வி, ஞானம், விஷ்ணு வைசியன், கணக்கன், தனாதிபதி, தூதுவன், தேர்ப்பாகன், வாக்கு சாதுரியம், கதை, எழுத்து, உபாசனை, யுக்தி, சத்திய வசனம், வைஷ்ணவ கர்மம், வியாபாரங்கள், லிகிதத்தொழில், சிற்பத்தொழில், அலி, தேர், தாதன், அந்தர நாட்டியம் முதலானவை அண்ட ரோகம், வாதநோய் விஷரோகம், தாசிபரன், சகல பிரபஞ்சம் அறிதல், நிலையான பேச்சு, புத்திரக்குறைவு, பச்சை (மரகதக்கல்), சேங்கன்று வர்க்கம், இலை முதலியவை பாசிப்பயிறு, தாரா, வெந்தயம் ஆகிய விஷயங்களுக்கு புதன் காரகத்துவம் பெறுகிறார்.

ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகிய மூன்று நட்சத்திரங்களுக்கும் புதன் கிரக ஆதிபத்யம் உண்டு. புதன் சுபராக இருந்தாலும், ஆணும் இல்லாத பெண்ணும் இல்லாத அலி கிரகம்.

புதன் கிரக அம்சங்கள்:

கிரக ஜாதி - வைசியன், கிரக ரத்தினம் – பச்சை (மரகதம்), கிரக வாகனம் - குதிரை, கிரக வடிவம் - நெடியர், கிரக தேவதை - விஷ்ணு, திருமால். கிரக குணம் - சவுமியர், கிரக தானியம் - பச்சை பயறு, கிரக சுவை - உவர்ப்பு, கிரக பிணி - வாதம், கிரக வஸ்திரம் - பச்சை பட்டு, கிரக உலோகம் - பித்தளை, கிரக நிறம் - பச்சை. கிரக ஷேத்திரம் - மதுரை . கிரக புஷ்பம் - வெண் காந்தள், கிரக சமித்து - நாயுருவி, கிரக திக்கு - வடக்கு, கிரக தூப தீபம் - கற்பூரம்.

புதன் ஒரு ராசியில் 1 மாத காலம் சஞ்சரிப்பார். புதன் ஆட்சி வீடு மிதுனம், கன்னி, உச்ச வீடு - கன்னி, நீசம் வீடு - மீனம் ஆகும்.

புதன் கிரகத்தின் நட்பு வீடுகள் ரிஷபம், சிம்மம், துலாம். புதன் கிரகத்தின் பகை வீடுகள் - கடகம், விருச்சிகம்.

புதன் தான் நிற்கும் ராசியிலிருந்து 7-ம் வீட்டை பார்ப்பார். புதன் திசா மொத்தம் 17 ஆண்டுகள். குழந்தை பிறக்கும் நேரத்தில் நட்சத்திரம் எந்த பாதத்தில் இருக்கிறதோ, அதை கணக்கிட்டு திசா ஆண்டை - திசா, புத்தி, அந்தரம் என பிரித்து அறியலாம்.

வித்யாகரகன் புதனுக்கு நட்பு கிரகங்கள் - சனி, சுக்கிரன், சந்திரன், ராகு, கேது - சூரியன் சமம். சூரியனும், புதனும் சேர்ந்து ஒரே ராசியில் இருந்தால் புதாதித்ய யோகம் உண்டு. புத்திசாலித்தனம், நிபுணத்துவம், ஆராய்ச்சி மிகுந்திருக்கும்.

புதன் கிரகம் 3, 6, 8, 12-ம் வீடுகளில் மறைவு ஸ்தானம் பெறுகிறார்.

புதன் கிரகம் வக்ரமோ, தோஷமோ பெற்றால் தோஷ பரிகார தலம் - மதுரை மீனாட்சியம்மை சுந்தரேஸ்வரரை வழிபடுவது தோஷ பரிகாரமாகும்.

சுப கிரகங்களில் ஒருவரான புதன் சுபகிரக சேர்க்கை பெற்றால், பார்வை பெற்றால் நன்மையான பலன்களையும், பாவிகளுடன் இணைந்திருந்தால் தீய பலன்களையும் தருவார். இவர் இருக்கும் வீட்டை பொறுத்தே பலன் தருவார்.

புதன், ராகு இணைந்து 6, 8, 12-ல் இருந்தால் நன்மை தர மாட்டார்.

புதனுக்குரிய அதிதேவதை விஷ்ணு, திருமால். அறிவாற்றல் தருபவர் மூளையின் செயல்திறன், பற்கள், மூக்கு, நரம்பு மண்டலங்களை குறிப்பவர். புத்தகம் அச்சிடுதல், புத்தகம் வெளியிடுதல், புத்தக விற்பனை நிலையம், பத்திரிகை துறை ஆகியவற்றை குறிப்பவர்.

புதன் பாதிக்கப்பட்டிருந்தால் கீழ்கண்ட பரிகாரங்களை செய்வதால் நிவாரணம் பெறலாம்!

* முட்டை, மாமிச உணவுகளைத் தவிர்ப்பது நலம் தரும்.

* தினமும் காலை பல் துலக்கிய பின்பே பணிகளைத் துவங்க வேண்டும்.

* திருக்கோயில்களுக்கு பால், அரிசி தானமாக தரலாம்!

* துர்க்கை வழிபாடு - அதாவது சக்தி வழிபாடு நன்மை தரும்.

* ஏழைகளுக்கு மருந்துகளை இலவசமாக கொடுக்கலாம்! மருத்துவ உதவி செய்வது நலம் தரும்.

* வெள்ளி மோதிரம் அணியலாம்.

* புதன் கிழமைகளில் விரதம் இருப்பது உடல்நலம் தரும்.

* திருநங்கைகளுக்கு கண்ணாடி வளையல்களும், பச்சை உடைகளும் தானமாக வழங்கலாம்!

* தந்தை, தாயின் உடன்பிறப்புகளுக்கு இயன்ற அளவு உதவி செய்தல் வேண்டும்.

புதன் கிரகத்திற்குரிய காயத்ரி மந்திரம்:

ஓம்:

கஜத்வஜாய வித்மஹே

சுகஹஸ்தாய தீமஹி

தந்நோ புதஹ் ப்ரசோதயாத்;

இந்த மந்திரத்தை நவகிரகத்தில் புதன் கிரகத்திற்கு முன்னால் 5 முறை அல்லது 23 முறை சொல்வது நல்ல பலன்களைத் தரும்.

பலன்கள்: 

அறிவில் சிறந்து விளங்கலாம். ஆற்றல் உண்டாகும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். அழகிய தோற்றம் அமையும். துயரங்கள் விலகும். பட்டங்கள் பெறலாம். எழுத்துத் துறையில் மேன்மையடையலாம்.

ஜோதிடக்கலையில் சிறந்து விளங்கலாம்.

தமிழில் புதன் கிரக மந்திரம்:

இதமுற வாழ இன்னல்கள் நீக்கு

புத பகவானே பொன்னடி போற்றி;

பதந் தந்தாள்வாய் பன்னொளியானே

உதவியே அருளும் உத்தமா போற்றி;

மேலும் கலை, இலக்கியத்திற்குரிய தெய்வமான சரஸ்வதி வழிபாடும் நன்மை பயக்கும். இதே போல் சுபவேளைகளான புதன் ஹோரையில் சுபகாரியம் செய்வதும் நற்பலன் தரும்.

புதனின் சிறப்பு கருதி ‘பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது’என்று குறிப்பிடுவார்கள். புதன் கிழமையில் புதன் ஹோரை சிறப்பாகும்.

எண் கணித சாஸ்திரப்படி புதனுக்குரிய எண் 5. சனி கிரக எண் 8 - எட்டுக்கு மாறாக எண் 5ஐ குறிப்பிடுவார்கள். சனியும், புதனும் நட்பு என்பதால்...!