நீ என் விதை சூர்யா அறிமுகம் செய்த இயக்குனர் பெருமை!

20 நவம்பர் 2020, 10:43 AM

சமீபத்தில் தீபாவளியை முன்னிட்டு, சுதா கொங்கரா இயக்கத்தில், சூர்யா நடித்த, 'சூரரைப்போற்று' திரைப்படம் ஓடிடியில் வெளியானது. இந்தப்படமும் இதில் சூர்யாவின் நடிப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. கடந்த ஏழு மாதங்களில், இதுவரை ஓடிடியில் வெளியான படங்களில், முதல் வெற்றி படம் என்கிற பெயரையும் தட்டிச்சென்றது. இந்த நிலையில் சூர்யாவை தான் இயக்கிய 'நேருக்கு நேர்' படத்தின் மூலம் முதன்முதலாக தமிழ் திரையுலகில் அறிமுகப்படுத்திய இயக்குனர் வசந்த், சூர்யா குறித்து தனது மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்..

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அன்புள்ள சூர்யாவுக்கு.. இந்த பாராட்டு கடிதம் உனக்கு இல்லை.. நெடுமாறன் ராஜாங்கத்திற்கு.. முதல் பிரேமிலிருந்து ரோலிங் டைட்டில் ஓடுகிற கடைசிவரை உன் ஆட்சி தான் பிரேமுக்கு பிரேம், காட்சிக்கு காட்சி உயிரைக் கொடுத்து நடித்து இருக்கிறாய். தமிழ் திரையுலகில் என் மூலம் நிகழ்ந்த உன் அறிமுகத்திற்கு பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக நீயாகவே முயன்று கற்றுக்கொண்டு, மிகச்சிறப்பாக உன் நடிப்பை இதுவரை பல படங்களில் வெளிப்படுத்தி இருந்தாலும், இது இதுதான் உன் உச்சம் இப்போதைக்கு..

நெடுமாறன் ராஜாங்கமாக நீ நடிக்கவே இல்லை.. ரத்தமும் சதையுமாக உணர்ந்து வாழ்ந்து இருக்கிறாய்.. முதல் காட்சியின் ஆரம்பம் கூட பரவாயில்லை.. இறுதியில் நீ வென்ற பிறகு கூட, உன் முகத்தில் சிரிப்பு இல்லை.. அந்த தீவிரத்தன்மை, அந்த சாதிக்க வேண்டும் என்ற வெறி, உன் கண்களில் இறுதிவரை தெரிகிறது.. கனல் மணக்கும் பூக்களாக, ஒவ்வொரு காட்சியிலும் நெடுமாறன் தோற்கும்போது, ஒவ்வொரு காட்சியிலும் ஜெயிக்கிறது உன் நடிப்பு.. எவ்வளவு இயல்பாக.. அதுவும், இவ்வளவு இயல்பாக, எதார்த்தமாக, துளி மிகையில்லாமல், ஒரு கதாபாத்திரத்திற்கு மிகச்சிறப்பாக உயிரூட்டி இருக்கிறாய்..

உன் வெற்றியின் பெருமிதத்தில் நான் ஒரு தொப்பியை மாட்டிக் கொள்கிறேன்.. 'ஹேட்ஸ் ஆப் டூ யூ மை டியர் சூர்யா'.. என்னைவிட யாருக்கு மகிழ்ச்சி இருந்துவிட முடியும் ? ஏனென்றால் என் விதை நீ.. என் விருட்சம் நீ.. எனக்கு எத்தனை பெருமிதம் என்று எழுதி முடியாது என உச்சிமுகர்ந்து உச்சிமுகர்ந்து மகிழ்கிறேன்” என்று மனதார பாராட்டி உள்ளார் இயக்குனர் வசந்த்.

இதற்கு பதிலளித்துள்ள சூர்யா, “உங்க பாராட்டு அவ்வளவு சந்தோசம் தருது சார்.. நான் என்றுமே நீங்கள் விதைத்த விதை தான்.. ரொம்ப ரொம்ப நன்றி சார்” என பதில் கூறியுள்ளார்.