படத்தை தொடங்கி விடுங்கள் அல்லது வேறு படத்தின் பணிகளை செய்ய விடுங்கள் ! - ஷங்கர்

23 அக்டோபர் 2020, 10:09 PM

கமல்ஹாசன் நடிக்கும் படம் இந்தியன்-2 திரைப்படத்தில் காஜல் அகர்வால், சித்தார்த், விவேக், பாபிசிம்ஹா, ரகுல் பிரீத் சிங், வித்யூத் ஜமால், பிரியா பவானி சங்கர் என பலர் நடித்து வருகின்றனர்.

இத்திரைப்படத்தை பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் இயக்கி வருகிறார்.

இந்தியன்-2 படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை சென்னையில் தொடங்கிய படக்குழுவினர், பின்னர் ஐதராபாத், போபால் உள்ளிட்ட இடங்களில் படமாக்கினர்.

இதனிடையே கடந்த பிப்ரவரி மாதம் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து, பின்னர் கொரோனா ஊரடங்கு போன்ற காரணங்களால் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு கடந்த 6 மாதங்களுக்கு மேலாக நடைபெறாமல் உள்ளது. கொரோனா காலத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை குறைக்க படத்தின் பட்ஜெட்டை மேலும் குறைக்குமாறு தயாரிப்பு நிறுவனம் ஷங்கரிடம் வலியுறுத்தியதாகவும், ஏற்கனவே 400 கோடியில் இருந்து 220 கோடியாக குறைக்கப்பட்ட பட்ஜெட்டை மேலும் குறைக்க முடியாது என ஷங்கர் சொல்லிவிட்டதாகவும் தெரிகிறது.

தற்போது மத்திய அரசு சினிமா படப்பிடிப்புகளில் தளர்வு அறிவித்திருக்கும் நிலையிலும் இந்தியன் 2 படத்தின் பணிகளை துவங்க தயாரிப்பு நிறுவனம் முன்வரவில்லை. இதனால் கோபமடைந்த ஷங்கர் படப்பிடிப்பை தொடங்குங்கள் அல்லது என்னை வேறு படத்தின் பணிகளை செய்ய விடுங்கள் என்று கடிதம் எழுதியுள்ளதாக சொல்லப்படுகிறது.

ஆனால் தயாரிப்பு தரப்பு அதனை மறுத்துள்ளது. தற்போது அனுமதிக்கப்பட்டிருக்கும் 100 பேர் என்ற எண்ணிக்கை இந்தியன் 2 மாதிரியான பிரம்மாண்ட படங்களுக்கு போதாது எனவும், குறைந்தபட்சம் 500 பேர் தேவைப்படுவதால் படப்பிடிப்பை தற்போது தொடங்க முடியவில்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.