பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த இயக்குநரோடு கூட்டணி அமைக்கும் ரஜினி..

03 டிசம்பர் 2021, 04:06 PM

சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் ‘அண்ணாத்த’ படம் உருவாகிக்கொண்டிருக்கும் போதே ரஜினியின் அடுத்தப்பட இயக்குநர் யார் என்கிற கேள்வி கோலிவுட்டில் வைரலானது, பலரும் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ பட இயக்குநர் தேசிங்கு பெரியசாமி தான் இந்த படத்தை இயக்குவார் என பரவலாக பேசப்பட்டது. அதனை தொடர்ந்து அண்ணாத்த வெளியீட்டுக்கு பின் ரஜினி மீண்டும் சிவாவுடனே கூட்டணி அமைக்க இருப்பதாக பேசப்பட்டது. தற்போது ரஜினிக்கு 90களில் முத்து, படையப்பா போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த இயக்குநர் கே.எஸ்.ரவிகுமாரோடு மீண்டும் இவர் கூட்டணி அமைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. தற்போது உள்ள சூழல் எப்படியாவது பெரிய ஹிட் கொடுத்தாகவேண்டிய நிர்ப்பந்தம் ரஜினியை நெருக்கியிருக்கிறது. சமீபத்தில் ஐந்து இயக்குநர்கள் ரஜினியிடம் கதை சொல்ல சென்றிருக்கிறார்கள். எல்லோரிமும் தனித்தனியே கதை கேட்டிருக்கிறார் ரஜினி. ஆனால் வந்த எல்லோருமே ஒன் லைன் மட்டுமே சொல்லி ஒக்கே என்றால் முழுக்கதையைத் தயார் செய்கிறேன் என்று ஒரே மாதிரி சொல்லியிருக்கிறார்கள். இதனிடையே பல மாதங்களாக ரவிக்குமாரிடம் தனக்கு ஒரு கதை தயார் செய்யும்படி ரஜினி பேசி வந்திருக்கிறார். இதனால் ரஜினியின் அடுத்தப்படம் அவரின் ஆஸ்தான இயக்குநர் ரவிக்குமார் என்று ரஜினி தரப்பில் கூறுகிறார்கள்.