மோகன்லாலுக்கு சிறப்பு அனுமதி வழங்கிய கோவில் ஊழியர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டனர்...

14 செப்டம்பர் 2021, 04:04 PM

மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் மோகன்லால். தென்னிந்திய அளவில் ரசிகர்களை கொண்டுள்ள இவர் கேரளாவின் பிரசித்தி பெற்ற குருவாயூர் கோவிலுக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருப்பவர். தனக்கு கிடைக்கும் இடைவேலைகளில் குருவாயூர் மற்றும் சபரிமலை கோவில்களுக்கு சென்றுவரும் இவர் கொரோனா காரணமாக நீண்ட நாட்களாக கோவில்களுக்கு செல்வதை தவிர்த்து வந்தார். 

கேரளாவில் கொரோனா பரவல் மற்ற ஸ்டேட்டுகளைக் காட்டிலும் தீவிரமா இருப்பதால் கோயில்களில் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலேயே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக, பிரசித்தி பெற்ற குருவாயூர் மற்றும் சபரிமலை ஐயப்பன் கோயில்களில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

 மேலும், பாதுகாப்பு கருதி கடந்த பல ஆண்டுகளாக குருவாயூர் கோயில் வளாகத்திற்குள் எந்த வாகனமும் அனுமதிக்கப்படுவதில்லை. இந்நிலையில், சில தினங்களுக்கு முன் பிரபல நடிகர் மோகன்லால் தனது மனைவியுடன் குருவாயூர் கோயிலில் தரிசனம் செய்வதற்காக வந்தார். 

அப்போது, அவருடைய கார் கோயிலின் பிரதான நுழைவாயில் வரை செல்ல அனுமதிக்கப்பட்டது. இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 3 ஊழியர்களை கோயில் நிர்வாக அதிகாரி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும், இது தொடர்பாக விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. கோவில்களில் யாராயினும் சம உரிமையே வழங்க வேண்டும் என்பதை இந்த நிகழ்வு தெளிவுப்படுத்தியுள்ளது.